தோல் உரித்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோல் உரித்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 மார்ச், 2013

என்னைத் தோலுரித்த கதை


நான் போன நூற்றாண்டில் பிறந்தவன். ஆனாலும் அந்த நூற்றாண்டின் மவுசே தனி. சிறு வயதில் நான் இரண்டாம் உலக மகா யுத்தத்தை நேரில் பார்த்திருக்கிறேன்.

நாடு சுதந்திரம் வாங்கியதை தூக்கத்திலேயே பார்த்தவன் நான். ராத்திரி 12 மணிக்கு புத்தியுள்ளவன் எவனாவது விழித்திருப்பானா?

மகாத்மா காந்தியை கோட்சே சுட்டதை நேரில் பார்த்தவர்களை நேரில் பார்த்திருக்கிறேன்.

அப்படியே பல சம்பவங்கள். அதை விடுங்கள். இந்த சமயங்களில் எல்லாம் என்னுடன் ஒத்துழைத்த என் தோல் இருபத்தியோராம் ஆண்டு பிறந்து பனிரெண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு என்னுடன் வம்பு பண்ணுகிறது.

இரண்டு வருடம் முன்பு ஒரு வேலையாக (?) காரைக்கால் போயிருந்தேன். அனுபவஸ்தர்கள் என்ன வேலையென்று கேட்க மாட்டார்கள். அனுபவம் இல்லாதவர்களுக்கு அந்த வேலை என்னவென்று சொன்னால் புரியாது. ஆகவே அதை விட்டு விடுவோம்.

நான் அங்குள்ள விவசாயக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். சுற்றிலும் செடி கொடிகளுடன் கூடிய இயற்கைச் சூழ்நிலை. அங்கிருந்த கல்லூரியின் தலைவர் என்னுடைய பழைய மாணவர். அங்கு இருப்பவர்கள் எல்லோருக்கும் என்னை ஸ்பெஷலாக கவனித்துக் கொள்ளச் சொல்லி உத்திரவு போட்டுவிட்டார். எல்லோரும் நன்கு கவனித்துக்கொண்டார்கள். அங்கு குடியிருக்கும் ஒரு லட்சத்தி இருபதனாயிரத்து ஒரு கொசுக்கள் உட்பட.

இந்தக் கொசுக்கள் என்னைக் கவனித்துக் கொண்டதை நான் சரியாகக் கவனிக்கவில்லை. ஊருக்கு வந்து மறு நாள் குளிக்கும்போது உடல் முழுவதும் ஆங்காங்கே சிகப்பு சிகப்பாக ஆகியிருந்தது. என்னமோ ஏதோ என்று பயந்துபோய் டாக்டரிடம் போனேன். அவர் உடம்பைப் பார்த்துவிட்டு, எங்காவது வெளியூர் போயிருந்தீர்களா என்று கேட்டார். நான், ஆமாம், காரைக்கால் போயிருந்தேன் என்றேன்.

அந்த ஊர் கொசுக்கள் பிரபலமானவை. நீங்கள் பிரபலஸ்தர் ஆனதால் உங்களை ஸ்பெஷலாக கவனித்திருக்கின்றன. இந்த அலெர்ஜி ஆயின்ட்மென்டைப் போடுங்கள் சரியாகி விடும் என்றார். அப்படியே போட்டதில் ஒரு வாரத்தில் சரியாகிவிட்டது.

கொஞ்ச நாள் கழித்து திரும்பவும் அதே மாதிரி தடிப்புகள் வந்தன. இந்த முறை நான் வெளியூர் எங்கும் போகவில்லை. காரைக்கால் கொசுக்களுக்கு நாங்கள் இளைத்தவர்களா என்று கோயமுத்தூர் கொசுக்களுக்கு ரோஷம் வந்து விட்டது என்று நினைக்கிறேன். மறுபடியும் அதே மருந்தைத் தடவ தடிப்புகள் மறைந்தன.

இப்படியே நானும் இந்தக் கொசுக்களும் இரண்டு வருடம் கண்ணாமூச்சி விளையாடினோம். ஒரு மாதத்திற்கு முன் இந்த தடிப்புகளைப் பார்த்த என் மனைவி, என்னங்க, இது ஏதோ கொஞ்சம் சீரயஸான விஷயம் மாதிரி இருக்கிறது. ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் காட்டுங்களேன் என்றாள் நான் வழக்கம்போல் இது என்ன கொசு சமாச்சாரம், இதுக்கெல்லாம் ஸ்பெஷலிஸ்ட் எதுக்கு என்று இன்டர்நெட்டில் கொசுக்கடிக்கு என்ன வைத்தியம் என்று பார்த்தேன்.

அதில் சொல்லியிருந்த மருந்தை வாங்கி ஒரு மாதம் உபயோகித்தேன். அது நல்ல பலனைக் கொடுத்தது. எப்படியென்றால் தடிப்பு ஆங்காங்கே இருந்தது மாறி, நிறைய இடங்களில் வந்து விட்டது. அந்த இடங்களில் அரிப்பும் ஆரம்பித்துவிட்டது. இனி மேல் வேறு வழியில்லை என்ற நிலை வந்து விட்டது.

என் பெண்ணைக் கூப்பிட்டுக்கொண்டு ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போனோம். அந்த டாக்டர் என் பெண்ணுக்குத் தெரிந்த டாக்டர். என் உடம்பில் தடிப்பு உள்ள இடங்களை சுரண்டிப் பார்த்து விட்டு, இது கொசுக்கடி இல்லை என்றார். அப்பாடி என்று நான் பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள், இது ஒரு தோல் வியாதி, இதற்குப் பெயர் "சோரியாசிஸ்" என்று சொன்னார்.

இந்தப் பெயரை நான் முன்பு கேட்டிருக்கிறேன். எய்ட்ஸ் மாதிரி ஒரு வியாதி என்று என் கணிப்பு. ஐயோ, என் நிலை இப்படி ஆகவேண்டுமா என்று என் கற்பனைக் குதிரையில் ஏறி யமலோகம் வரை போய்விட்டேன்.

அப்போது அந்த டாக்டர், இது ஒரு சாதாரண தோல் வியாதிதான், ஒரு மாதத்தில் சரியாகிவிடும் என்றார்கள். அப்போதுதான் என் யமலோகம் போன உயிர் திரும்பி வந்தது.  தன்னுடைய பிரிஸ்கிரிப்ஷன் பேடை எடுத்து, (அது புல்ஸ்கேப் சைசில் இருந்தது) அது நிறைய மருந்துகள் எழுதிக்கொடுத்தார்கள். தினமும் அந்த தடிப்பு இருக்கும் இடங்களில் தோலை உரித்துவிட்டு, அதாவது நன்றாக கிளீன் செய்துவிட்டு அந்த இடங்களில், எழுதியுள்ள ஆயின்ட்மென்ட்டுகளை தடவி வருமாறு சொன்னார்கள்.

நான் டாக்டரிடம் போகும்போதே, என் சொத்துக்ளை பேங்கில் அடகு வைத்து பணம் வாங்கிக்கொண்டு போனது வசதியாகப் போனது. அந்தப் பணத்தில் மருந்துகளை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். இப்போது தினமும் என் தோலை உரித்துக் கொண்டிருக்கிறேன். உரித்துவிட்டு உப்பு தடவுவதற்குப் பதிலாக ஆயின்ட்மென்ட்டுகளைத் தடவிக்கொண்டு இருக்கிறேன்.