மாவுச்சத்துக்கு அடுத்தபடியாக மனிதனுக்கு வேண்டியது புரதச்சத்தாகும். அடுத்தபடியாக என்று வரிசைக் கிரமத்திற்காக சொன்னேனே தவிர, முக்கியத்துவத்தில் புரதம்தான் முதலாவதாக இருக்கின்றது.
புரதம் என்பது மாவுச்சத்து கூட நைட்ரஜன் என்ற தனிமமும் சேர்ந்த ஒரு கூட்டுப் பொருளாகும். புரிந்து கொள்ள எளிமைக்காக இப்படி சொன்னேனே தவிர புரதம் என்பது ஒரு தனித்தன்மை கொண்ட அங்ககப் பொருளாகும்.
ஆகாயத்திலுள்ள காற்றில் ஏறக்குறைய 80 சதம் நைட்ரஜன் வாயுதான். ஏன் இதை நாம் அப்படியே நம் உடல் தேவைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்கலாம். நல்ல கேள்விதான். ஆனால் இயற்கையின் மர்மங்களை யார் அறிவார்?
புரதம் என்பது 26 வகையான அமினோஅமிலங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் 10 அமினோ அமிலங்கள் அவசியமானவை என்று வகைப் படுத்தியுள்ளார்கள். காரணம், இவைகளை மனித உடம்பில் தயாரிக்க முடியாது. மற்றவைகளை சமாளித்துக் கொள்ளலாம்.
மனித உடம்பில் உள்ள அனைத்து திசுக்களும் புரதத்தையே ஆதாரமாகக் கொண்டவை. தவிர அனைத்து ஹார்மோன்களும், என்சைம்களும் வைட்டமின்களும் புரதத்தையே ஆதாரமாகக் கொண்டவை. இன்னொரு முக்கியமான விஷயம். பலர் அறிந்திருந்தாலும் நினைவில் வைத்துக்கொள்ளாத ஒரு சமாச்சாரம் என்னவென்றால், நம் உடம்பில் உள்ள பெரும்பாலான திசுக்களின் ஆயுட்காலம் சராசரியாக15 நாட்கள்தான். அதன் பிறகு அந்த திசுக்களை அழித்து விட்டு அவைகளின் இடத்தில் புது திசுக்களை நம் உடம்பு உண்டுபண்ணிக்கொள்கிறது.
இந்த ரிப்பேர் வேலை நம் ஆயுட்காலம் முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. எலும்புகளும் மூளையும் இதற்கு விதிவிலக்கு. எலும்பு திசுக்களின் ஆயுட்காலம் 25-30 வருடங்கள். மூளை திசுக்கள் எப்போதும் அழிவதில்லை. (அவ்வப்போது மூளையும் தன்னைப் புதிப்பித்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நான் எப்போது உன்னிடம் கடன் வாங்கினேன் என்று கூசாமல் சொல்லலாம்).
இந்த திசுக்களை புதிப்பிக்கும் வேலைக்கு புரதம் கண்டிப்பாகத் தேவை. புரதம் பற்றாக்குறை இருந்தால் இந்த வேலை நடக்காது. அப்போது மனிதனின் அவயவங்கள் தங்கள் வேலைகளைச் செய்வது நின்று போய்விடும். அப்புறம் என்ன நடக்கும் என்பது நீங்கள் அறிந்ததுதான்.
உங்கள் மனதில் தோன்றும் ஒரு கேள்விக்கு இங்கேயே பதில் கூறி விடுகிறேன். பழைய திசுக்களை அழிக்கும்போது அதில் இருக்கும் புரதத்தை வைத்து ஏன் மறு சுழற்சி முறையில் புது திசுக்களை உண்டு பண்ணக்கூடாது? நல்ல கேள்விதான். ஆனால் சாதாரண மனிதர்களால் அப்படி மறுசுழற்சி செய்ய முடியாது. பழங்கால சித்தர்கள் இந்த வித்தையைக் கற்றிருக்கலாம். அதனால்தான் அவர்கள் காற்றையே உட்கொண்டு ஜீவித்திருந்தார்கள் என்று புத்தகங்களில் படிக்கிறோம்.
பழைய திசுக்களை அழிக்கும்போது புரதச்சத்து பெரும்பாலும் அழிக்கப்பட்டு, அதிலுள்ள நைட்ரஜன் தனிமம் யூரியாவாக மாறுகின்றது. இந்த யூரியாதான் சிறுநீரகங்கள் மூலமாகப் பிரிக்கப்பட்டு சிறுநீராக மாறி வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு யூரியா வெளியேற்றப்பட-வில்லையானால் இரத்தத்தில் யூரியா அதிகம் சேர்ந்து பல வியாதிகளைத் தோற்றுவிக்கும்.
நமக்கு புரதம் பல வகைகளில் கிடைக்கிறது. நாம் உணவில் பயன்படுத்தும் பருப்பு வகைகள்தாம் முக்கியமாக நமக்கு புரதத்தைத் தருகின்றன. அரிசி. கோதுமை போன்ற தானியங்களிலும் புரதம் இருந்தாலும் அவை மிகக் குறைவாக இருப்பதால் நம் உடலின் தேவைக்குப் போதாது. ஆகவேதான் புரதம் அதிகமுள்ள பருப்பு வகைகளை உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
பருப்புகளை மட்டும் நம்பியிருக்கும் சாகபட்சிணிக்காரர்களுக்கு ஒரு சங்கடம் இருக்கிறது. நமக்கு வேண்டிய அனைத்து அமினோ அமிலங்களும் கொண்ட பருப்பு வகைகள் இல்லை. ஆகையால் பல வகையான பருப்புகளை நம் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இக்குறையை ஓரளவு சரிக்கட்டலாம். ஆனாலும் அந்த முறை முழுமையாக நம் புரதத் தேவையை ஈடு கட்டாது.
மனிதனுக்கு வேண்டிய அனைத்து அமினோ அமிலங்களும் கொண்ட புரதம் மாமிச உணவில்தான் இருக்கிறது. பால், முட்டை, மீன், கோழி, ஆடு, மாடு, இன்ன பிற. நான் சாக பட்சிணி என்று சொல்லிக்கொள்ளும் பெரும்பாலான மனிதர்கள் பாலை மாமிச உணவு என்று கருதுவதில்லை. அதனால்தான் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்.
இன்னும் சிலர் முட்டையை வெஜிடபிள் கணக்கில் சேர்த்துக்கொள்கிறார்கள். ஏனென்றால் வெஜிடபிள் முட்டை என்று இப்பொழுது குஞ்சு பொரிக்காத முட்டைகள் அதிகம் உற்பத்தியாகின்றன. மங்களூரிலும் வங்காளத்திலும் பிராமணர்கள் கூட மீன் சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த விவகாரம் அவரவர்கள் நம்பிக்கை சம்பந்தப்பட்டது.
ஆனால் மனிதன் தான் சாப்பிடும் உணவில் போதுமான புரதச்சத்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.