நான் சமீப காலங்களில் இரண்டு பேரிடர்களைப் பற்றி அறிந்திருக்கிறேன். முதலாவது ஒரிசா புயல். இரண்டு தமிழ்நாட்டில் சுனாமி. இந்த இரண்டு பேரிடர்களிலும் நான் கண்ட இரு முக்கியமான அம்சம் என்னவென்றால், பொது ஜனங்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய தயங்கியதே இல்லை. அதுவும் பொருளுதவி செய்ய பெரும் இளவில் முன் வருகிறார்கள்.
ஆனால் இந்த உதவிகளெல்லாம் நலிந்தோரைச் சென்றடைவதே இல்லை என்பதுதான் நிதரிசனம். இப்போது சென்னையில் ஏற்பட்டுள்ள பேரிடர் அது போன்றதே. இதிலிருந்து எவ்வாறு சென்னையை மீட்கலாம் என்பதுதான் இப்போதுள்ள சவால்.
பதிவர்கள் எல்லோரும் இதைப்பற்றி சிந்தித்து தங்கள் கருத்துகளைக் கூறலாம். அவைகளில் ஏதாவது சில வழிகள் சிறந்ததாக இருக்கக் கூடும். அவை அரசு அதிகாரிகளின் பார்வைக்குப் போய் செயல்படக்கூடும்.
எனக்குத் தோன்றிய சில சிந்தனைகளை இங்கு குறிப்பிடுகிறேன்.
1. முதலில் வெள்ளம் வடியும் வரையில் இப்போது செயல்படும் வழிகளைத்தவிர வேறு வழிகள் இல்லை. எல்லா வழிகளிலும் துண்டிக்கப்பட்டு தீவாக இருக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு உணவும் குடி நீரும் எவ்வழியிலாவது கொண்டு சேர்க்கவேண்டும்.
2. வெள்ளம் வடிந்த பிறகு சாலைகளையும் மற்ற பொது இடங்களையும் துரிதமாக சுத்தம் செய்யவேண்டும். நீர் வழிந்தோடிய பாதைகளில் சேர்ந்திருக்கும் குப்பைகளை நீக்கி அந்த வழிகளை ஒழுங்கு படுத்தவேண்டும். இதற்கு வேண்டிய ஆட்களையும் இயந்திரங்களையும் பக்கத்து மாவட்டங்களிலிருந்து கொண்டு வரவேண்டும்.
3. சாலைகளை போக்குவரத்திற்கு உகந்ததாக விரைவில் சரி செய்யவேண்டும். பொது போக்குவரத்தை உடனடியாக சீர் செய்யவேண்டும்.
4. பொது மக்களுக்கு மின்சாரம், தண்ணீர் விநியோகம் இரண்டையும் ஒழுங்கு படுத்தவேண்டும். வீடுகளில் உள்ள மின் இணைப்புகள், தண்ணீர்க்குழாய்கள் செப்பனிட தேவையான ஆட்களை வெளியூரிலிருந்து சில நாட்களுக்கு வரவழைத்து அவர்களுடைய சேவையை முறைப்படுத்தலாம்.
5. மக்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களான மளிகைப் பொருட்கள், பால், காய்கறிகள், கேஸ் இவைகளை சீரான வகையில் நியாயமான விலையில் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
6. வீடுகளை இழந்த மக்களுக்கு அவர்கள் வீடுகளை புனரமைக்க வேண்டிய கட்டுமானப்பொருட்களை அவர்களுக்கு கிடைக்குமாறு செய்யவேண்டும்.
7. சிறிய நாற்சக்கர, இரு சக்கர வாகனங்களைப் பழுது பார்க்க அண்டை மாவட்டங்களிலிருந்து மெக்கானிக்குகளை அதிக அளவில் வரவழைத்து ஆங்காங்கே அவர்களைப் பணியில் வைத்தால் மக்ளுக்கு உதவியாக இருக்கும்.
8. மெடிகல் கேம்ப்கள் ஆங்காங்கே நிறுவ வேண்டும். வெளியூரிலிருந்து டாக்டர்களை இதற்கு வரவழைக்கலாம்.
9. இந்த நிவாரணப் பணிகளுக்கான போதுமான நிதி அரசால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதை சரியாக உபயோகப்படுத்தினால் அனைத்து நிவாரணப் பணிகளையும் செவ்வனே செய்து முடிக்கலாம். தனி நபர்கள் நிதி வசூல் செய்வதென்பது பெரும்பாலும் மோசடிகளே.
மற்ற பதிவர்களும் தங்கள் யோசனைகளை அவரவர்கள் தளத்தில் வெளியிடலாம்.இந்தப் பதிவுகள் எதிர்காலத்திலும் உபயோகப்படலாம்.