காலம் மாறிவிட்டது என்று நாம் அடிக்கடி அலுத்துக் கொள்கிறோம். இன்றைய கால கட்டத்தில் மனிதர்கள் பணத்தைத் தேடி பேயாய் அலைகிறார்கள். (பேயை நான் பார்த்ததில்லை. அது எப்படி அலையும் என்பதுவும் எனக்குத் தெரியாது. இருந்தாலும் உலக வாழ்க்கையில் இந்த வாசகத்தைப் பல முறை கேட்டிருக்கிறேன். அதனால் அதை உபயோகப்படுத்தினேன்.) அவர்களுக்கு மனித உறவுகளை பராமரிக்க நேரம் இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன் மனிதனுக்கு மதிப்பு இருந்தது. உறவினர் வீட்டுக்குப் போனாலோ அல்லது நண்பர்கள் வீட்டுக்குப் போனாலோ, அவர்கள் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள். குசலம் விசாரித்தார்கள். இரு குடும்பத்தின் நல்லது கெட்டதுகளைப் பற்றி கலந்து பேசினார்கள். மன ஆறுதல் பெற்றார்கள். குடும்பத்தோடு போனால் இரட்டிப்புச் சந்தோஷம் அடைந்தார்கள்.
ஆனால் இன்றோ ஒருவர் வீட்டிற்குப் போவதென்றால், என்ன, எதற்கு, என்று கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சும்மா, இந்தப்பக்கம் வந்தேன், அப்படியே உங்களையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன், என்று ஒருவர் வீட்டிற்குப் போக முடியாது. முன்னாலேயே சொல்லவேண்டும். அவர்கள் சரி என்று சொல்ல வேண்டும். ஏதாவது வாங்கிக்கொண்டு போகவேண்டும். குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு போவது குற்றம். அதே போல் அவர்கள் வீட்டுக் குழந்தைகளையும் கொஞ்சுவது மகாக் குற்றம். குழந்தைகள் கெட்டுப் போய் விடுவார்களாம்.
அப்புறம் பரஸ்பரம் நீங்க நலமா, நான் நலம், இதற்கு மேல் விசாரித்தால் அது அநாகரிகம். காப்பி அதுவாக வந்தால் குடிக்கலாம். காப்பி குடிக்கிறீர்களா என்று கேட்டால், இப்போதுதான் குடித்தேன் என்று சொல்லவேண்டும். சரி குடிக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் சரியான காட்டுமிராண்டி என்று எடை போடுவார்கள். நீங்கள் போன வீட்டுக்காரர்கள் உங்களை விட வசதியானவர்கள் என்றால் நீங்கள் வாங்கிப்போன ஸ்வீட் அல்லது பழங்கள் அவர்கள் வீட்டு வேலைக்காரிக்குப் போவது உறுதி.
பத்து நிமிடத்திற்கு மேல் தங்கினீர்கள் என்றால் வீட்டுக்காரர்கள் முள் மேல் உட்கார்ந்திருப்பது போல் தவிப்பார்கள். இந்தப் பத்து நிமிடத்திலேயே அவருக்கு நான்கு போன் கால்கள் வந்திருக்கும். பத்து நிமிடத்தில் நீங்கள் இடத்தைக் காலி செய்யவில்லையானால், கடைசி போன் கால் பேசி முடித்தவுடன், பாருங்கள், ஒரு அர்ஜென்ட் வேலை, போன் வந்து விட்டது, நான் போக வேண்டும், இன்னொரு நாளைக்கு சாவகாசமாக வாங்களேன் என்று உங்களைக் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அனுப்பி வைப்பார்கள். ஏண்டா இவர்கள் வீட்டுக்குப் போனோம் என்று ஆகிவிடும்.
ஸ்வீட், பழம் செலவு 200ரூ, போகவர பஸ்ஸோ, ஆட்டோவோ, அதற்கு ஒரு 200, இப்படி 400, 500 ரூபாய் செலவு செய்து மனச் சஞ்சலத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தால் வீட்டுக்காரியின் அர்ச்சனையை வேறு சகித்துக்கொள்ளவேண்டும்.
ஆகக்கூடி, காலம் மாறியிருக்கிறதா? அல்லது மனிதர்கள் மாறியிருக்கிறார்களா? யோசியுங்கள்.