வெளிநாட்டுப் பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளிநாட்டுப் பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 அக்டோபர், 2011

மனுசன்னா சொன்ன வார்த்தையக் காப்பாத்தணும்

சிங்கையிலிருந்து திரும்பி வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. பதிவு போடுவதாகச் சொல்லிவிட்டு இன்று வரை பதிவைக் காணவில்லை. மனுசன்னா வார்த்தையைக் காப்பாத்தணும்!

வயசு குறைவா இருக்கறப்ப ஊர் சுத்தணும். எமபட்டணத்துக்குப் போற வயசில ஊர் சுத்தினா, ஒடம்பு தாங்க மாட்டேன்னு சொல்லுது. ஊர் சுத்தின அலுப்பில காய்ச்சல் வந்துட்டுது. மாச மொதல் வாரத்தில செய்யற வேலைகளை வேற செஞ்சு முடிக்கணும். நடுவில இந்த ஆயுத பூஜை வேற.

எப்படியோ இன்னைக்கு பதிவுக்குள்ள வந்துட்டேன்.

மொதல்ல இந்த மாதிரி டூர் போறதுன்னா என்னென்ன வேணும்னு சொல்கிறேன். டூர் போகவேண்டும் என்கிற அதீத உந்துதல் மற்றும் பணம் வேண்டும். அப்புறமா பாஸ்போர்ட் வேணும். அது என்னன்னா, நாம் இந்திய குடிமக்கள்(?) அல்லவா? அதனால இந்திய அரசு அனுமதி இல்லாமல் இந்தியாவை விட்டு எந்த வெளி நாட்டுக்கும் போக முடியாது. அந்த அனுமதி வழங்கும் சீட்டுக்குத்தான் பாஸ்போர்ட் என்று பெயர். உண்மையில இது ஒரு புத்தகம். இதை வாங்கறதுக்கு ஏகப்பட்ட நடைமுறைகள் இருக்கு. ஆனா கடவுள் (பணம்) அனுக்கிரகம் இருந்தால் சுலபமாக வாங்கி விடலாம்.

அடுத்து எந்த நாட்டுக்குப் போகறதுன்னு முடிவு செய்யவேண்டும். வழக்கமாகத் தமிழ் நாட்டுப் பயணிகள் போகும் நாடுகள் சிங்கப்பூர், மலேசியா. தாய்லாந்து, சிலோன், துபாய் ஆகியவைதான். இதை முடிவு செய்தவுடன் ஒரு நல்ல டிராவல் ஏஜென்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் போகும் நாட்டில் உங்கள் சொந்தங்கள் யாராவது இருந்தால் அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கலாம்.

பாஸ்போர்ட்டையும் பணத்தையும் டிராவல் ஏஜென்சியிடம் கொடுத்து விட்டால் அவர்கள் மிச்ச ஏற்பாடுகள் அனைத்தையும் கவனித்துக் கொள்வார்கள். நான் மதுரையை தலைமையிடமாகக் கொண்ட திருமுருகன் டிராவல் ஏஜென்சி யைத் தேர்ந்தெடுத்தேன். காரணம் இதற்கு முன் சென்ற என் நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள். இது ஒரு நல்ல நிறுவனம். குறைந்த செலவில் நல்ல சௌகரியங்களுடன் இந்த டூரை நடத்தினார்கள்.

பாஸ்போர்ட் என்பது இந்திய நாட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிச்சீட்டு. ஆனால் நாம் செல்லும் நாடு நம்மை வரவேற்க வேண்டுமே. அந்த அனுமதிக்கு “விசா” என்று பெயர். அந்த வெளிநாட்டு தூதரகத்திற்கு விண்ணப்பித்தால் கொஞ்சம் காசு வாங்கிக்கொண்டு நம் பாஸ்போர்ட்டிலேயே ஒரு பக்கத்தில் ஒரு ரப்பர் ஸ்டாம்பை குத்துவார்கள். இதுதான் விசா பெர்மிஷன்.

எல்லாம் ரெடி. நானும் என் மனைவியும் 25-9-2011 காலை 6 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு மாலை 2 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்தோம். சென்ட்ரல் ஸ்டேஷன் இரண்டாம் வகுப்பு பிராணிகள் பிரயாணிகள் தங்கும்  இடம் பிரமாதமாய் இருந்தது. (பார்க்க-படம்)


கிளுக்கினால் பெரிதாகத் தெரியும்

மாலை 6 மணி வரை அங்கிருந்து விட்டு ஒரு டாக்சி பிடித்து மீனம்பாக்கம் வெளிநாட்டு விமானங்களில் பயணிகள் ஏறும் வழிக்குப் போய் சேர்ந்தோம். அங்கு டிராவல் ஏஜென்சி லீடர் எங்கள் பாஸ்போர்ட், பிளேன் டிக்கட் எல்லாம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு ஏர் போர்ட்டுக்கு உள்ளே நுழைந்தோம். நான் சில முறை வெளிநாடுகள் சென்றிருப்பதால் வெளிநாடு செல்வதற்குரிய நடை முறைகள் தெரியும். ஆனால் முதல்முறையாகச் செல்பவர்களுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும்.

என்னென்ன நடைமுறைகள் என்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?