உப்பு வாங்கி முடிச்சவுடனே எல்லாரும் ஜவுளிக்கடைக்குப்போவாங்க. மத்த ஒரம்பரைக்காரங்களும் அங்க வந்துசேந்துக்குவாங்க. எப்பிடியும் ஆம்பள பொம்பளக எல்லாருமாசேர்ந்து ஒரு நூறு நூத்தம்பது பேரு சேந்துருமுங்க.கோயமுத்தூரு ராஜவீதியில ஒரு ரெண்டு மூணு பட்டு ஜவுளிக்கடை உண்டுங்க, அதுலதான் எங்காளுக எல்லாம் ஜவுளிஎடுக்கறதுங்க. எல்லாருமா கடைக்குள்ள போவாங்க.இவங்கெல்லாம் நிக்கறதுக்குத்தான் அங்க எடம் இருக்குமுங்க.ஒரு நாலஞ்சு ஆம்பளைங்க மட்டும் உள்ள இருந்துக்குவாங்க.பொம்பளைங்க பூராவும் கீள பாய் விரிச்சு இருப்பாங்க, அதுலநல்லா சம்மணம்போட்டு உக்காந்துக்குவாங்க. ஆம்பிளைகளுக்குமட்டும் ஸ்டூல் போட்டு உக்கார வைப்பாங்க. மிச்சஆம்பளைகளெல்லாம் கடைக்கு வெளில நின்னுட்டு வேடிக்கைபாப்பாங்க, இல்லேன்னா எதுனாச்சும் கடைவீதி சோலி இருந்தாபாப்பாங்க.
கடைக்காரங்களுக்கு எங்க ஆளுக பளக்க வளக்கங்களெல்லாம்நல்லா அத்துபடிங்க. அதனால ஆளுகளப் பாத்தவுடனே இவுங்கஇத்தன ரூபாய்லதான் கூறைப்பொடவை எடுப்பாங்கன்னு ஒருகணக்குப்போட்டுக்குவானுங்க. இருந்தாலும் ஒரு பேச்சுக்கு,என்ன வெலலே பொடவை காட்டுட்டுமுங்க அப்படீன்னுகேப்பாங்க. இவங்க சுமாரா இந்த வெலலே காட்டுங்கஅப்படீம்பாங்க. அதுல மொகாமையா ஒரு ஆளு இருப்பானுங்க.அவந்தான் இவுங்க என்ன நெகாவுல இருக்காங்கன்னு பாத்துஅதுக்குத்தகுந்த மாதிரி பொடவைகள அவனோடஅசிஸ்டென்ட்டுகளிடம் அவங்க பரிபாஷையிலசொல்லுவானுங்க. மளமளன்னு ஒரு அம்பது பொடவைகளஇவங்க கேட்ட வெலைல எடுத்து போடுவாங்க.ஒவ்வொருத்தியும் ரெண்டு ரெண்டு பொடவைகள எடுத்துநோட்டம் பாப்பாங்க. எல்லாம் பளய டிசைனா இருக்குமுங்க.கொஞ்ச நேரம் ஆனதும் என்ன கடைக்காரரே, ஒருபொடவையும் டிசைனாவே இல்லியே அப்படீம்பாங்க.
அப்பறம் இவன் ஜாடை காட்டினதும் ஆளுகஇந்தப்பொடவைகளயெல்லாம் எடுத்துட்டு, வேற பொடவைகளடிசைன் டிசைனா நல்ல நல்லதா எடுத்துப்போடுவானுங்க.எல்லாம் மொதல்ல காமிச்ச பொடவங்கள விட வெல கூடஇருக்கும். இந்தப்பொடவைகள பாத்தவுடன் பொம்பளைங்கமூஞ்சியெல்லாம் நூறு வாட்ஸ் பல்பு மாதிரி பிரகாசமாஆயிடுமுங்க. வெலய பாக்கமாட்டாங்க. அப்படி இப்படீன்னுஒரு மணி நேரம் பொடவைகளை கலைகலைன்னு கலைச்சு,அப்பறம் கடைக்குள்ள லைட் வெளிச்சத்துல பாத்ததுபத்தாதுன்னு வெளில போயி சூர்ய வெளிச்சத்துல பார்த்து ஒருபொடவைய செலக்ட் பண்ணுவாங்க. அப்பறம்தான் வெலஎன்னன்னு கேப்பாங்க. அவஞ்சொல்ற வெல இவங்கநெனச்சுதுக்கு மேல இருக்கும். அய்யய்யோ, இத்தனைவெலைல நாங்க கேக்கலீயே அப்படீன்னு பொலம்புவாங்க.கடைக்காரனுக்கு இதெல்லாம்தான் மொதல்லயே தெரியுமே,ஆமா, நீங்க கேட்ட வெலைல எடுத்துப்போட்டதுக்குபுடிக்கிலீன்னுட்டீங்க, அப்றம்தான் இந்த பொடவையெஎடுத்துப்போட்டோம், இத்தனை நேரம் பாத்துட்டு இப்ப வெலஜாஸ்தீன்னா எப்டீம்மா, நாயமா நடந்துக்கோங்க அப்படீன்னுஒரே போடா போட்டு அமுக்கீருவானுங்க. அப்றம் எப்படியோமல்லாடி அஞ்சு பர்சென்ட் தள்ளுபடி போட்டு பில் போடுவாங்க.
இதுதான் முகூர்த்த சமயத்துல கட்ற, கூறைப்பொடவைன்னுசொல்றது. இது போக, பேட்டா சீலைன்னு ஒண்ணுவாங்கோணுங்க. அது எதுக்குன்னா, மாப்பிள்ளக்கி முகூர்த்தநேரத்துல தலைப்பா கட்றதுக்குங்க. அந்தக்காலத்தில இந்ததலைப்பா கட்றதுக்குன்னு சில பேர் இருந்தாங்க. அவங்கதான்இந்த சீலய வச்சு மாப்பிள்ள தலைல தலப்பா கட்டுவாங்க,ரொம்ப ஜோரா இருக்குமுங்க. இப்பத்தான் கடைல டிசைன்டிசைனா ரெடிமேடு தலைப்பா விக்குதுங்க, அதவாங்கிக்கறாங்க. ஆனா அப்பவும் பேட்டா சீலைன்னு ஒண்ணுவாங்குவாங்க. பொண்ணுப்புள்ளைக்கு ஒரு பட்டுச்சீலை கூடக்கிடைக்குதில்லீங்க, அதுக்காகத்தானுங்க.
அப்பறம் மாப்பிள்ளைக்கு பட்டு வேஷ்டி, பட்டு அங்கவஸ்திரம்,சட்டைக்கு பட்டுத்துணி, இதெல்லாம் வாங்குவாங்க,இதெல்லாம் பத்து நிமிஷத்துல முடிஞ்சுடுமுங்க. இதுக்குள்ளமணி மத்தியானம் ரெண்டு ரெண்டரை ஆகிடுமுங்க.எல்லாத்துக்கும் பசி வந்துரும். காசு வச்சிருக்கற ரெண்டுஆம்பளைங்கள பில் குடுத்துட்டு வரச்சொல்லீட்டு, கூட ரெண்டுபொம்பளைங்கள ஜவுளிய வாங்கிட்டு வர்ரதுக்கு உட்டுப்போட்டுஎல்லாரும் ஓட்டலுக்குப்போவாங்க. மொத்த ஜவுளிக்கும் பில்போட்டு ரெண்டாப்பங்கி பொண்ணூடு பாதியும் மாப்பிள்ள ஊடுபாதியும் செட்டில் பண்ணுவாங்க. அதுதாங்க கோயமுத்தூருப்பளக்குமுங்க. கடைக்காரன் ஜவுளிகளை ரெண்டு செட்டா,அதாவது பொண்ணூட்டுது தனியா, மாப்பிள்ள ஊட்டுது தனியாகட்டி, பொண்ணு ஜவுளிய மாப்பிள்ள ஊட்டுக்காரங்க கிட்டயும்,மாப்பிள்ள ஊட்டு ஜவுளிய பொண்ணூட்டுக்காரங்க கிட்டயும்கொடுப்பாங்க. அவங்க அந்த ஜவுளிகளை பயபக்தியோடவாங்கிக்குவாங்க
.
அந்நேரத்துல எல்லா ஒட்டல்லயும் கூட்டமா இருக்கும். என்னகூட்டமுன்னா, இந்த மாதிரி பல ஊர்கள்ல இருந்து ஜவுளிவாங்க வந்தவங்க கூட்டம்தானுங்க. எப்பிடியோ சமாளிச்சு எடம்புடிச்சு உக்காந்தா ஒட்டல்காரன் அப்பத்தான் அரிசிய ஒலைலபோட்டிருப்பான். எலய போட்டுட்டு தண்ணி தொளிச்சுட்டு உப்புவச்சுட்டு போனான்னா அரை மணி களிச்சுதான் சாதம் கொண்டுவருவான். சாம்பார் தண்ணியா இருக்கும், ரசத்துக்குமொளகுபொடிய போட்டு வெந்நீர் வெளாவியிருப்பான்.எப்படியோ எல்லாரும் சாப்பிட்டோம்னு பேர் பண்ணீட்டுகல்யாணக்காரருகிட்ட சொல்லீட்டு ஊர் போய்ச்சேருவாங்க.காலைல நேரத்துல வந்தாக்கா அன்னிக்கு பொளுதும் ஜவுளிவாங்கறதுக்கு சரியாப்போய்விடுமுங்க.
அப்றம் இனி கண்ணாலம்தான். பத்திரிக்க வருமுங்கோ, வரலீன்னாலும் கண்ணாலத்துக்கு கண்டீப்பா வந்தரோணுமுங்கோ