சனி, 6 மார்ச், 2010

அப்பாடா, ஒரு வழியாக நித்திய ஆனந்த சுனாமி ஓய்ந்தது!




பெரியவரின் புண்ணியத்தில் ஒரு வழியாக சன் டிவி சுனாமி ஓய்ந்தது. இன்னும் இரண்டு மூன்று நாளில் மேட்டர் கோர்ட்டுக்கு போய்விடும். பிறகு ஒருவரும் வாயைத்திறக்க முடியாது. அதற்குள் நாம் சில விஷயங்களை யோசிப்போம்.


எப்படி இந்த சாமியார்களுக்கு மவுசு வருகிறது? இன்றைய நிலையில் பெரும்பாலான ஜனங்கள் நல்ல வசதியுடன் இருக்கிறார்கள். பணம், வீடு, வாசல், மனைவி, மக்கள், தோப்பு, துரவு என்று இருந்தாலும் அவர்கள் ஆழ்மனத்தில் ஒரு வெறுமை அல்லது பச்சாதாபம் அல்லது குற்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது. பல காரணங்களினால் அவர்களால் மனைவி மக்களுடன் வெளிப்படையாகவும் மனம்விட்டு பேசமுடிவதில்லை. உறவினர்களுடன் நல்ல முறையில் பழகமுடிவதில்லை. மனம்விட்டு பேசக்கூடிய நண்பர்களை வளர்க்கவில்லை.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்குத் தேவையான மன ஆறுதல் கிடைக்காததால் அதைத்தேடும்போது இந்த சாமியார்கள் அவர்களுக்கு தேவையான ஆறுதலை தருகிறார்கள். சாமியார்கள் எல்லோரும் நல்ல மனோதத்துவ நிபுணர்கள். இந்த மாதிரி வரும் நபர்களுக்கு எப்படி, எதைச்சொன்னால் அவர்கள் மயங்குவார்கள் என்று நன்றாகத் தெரியும். அந்தந்த பக்தர்களுக்கு அவரவர்கள் தேவைக்கு ஏற்ப அருள் வழங்கி அவர்களைத் தங்கள் வலைக்குள் சிக்க வைத்துவிடுகிறார்கள். அவர்கள் வலையில் சிக்கியவர்கள் வெளியில் வருவது மிகவும் கடினம்.




இப்படி வலைக்குள் விழுந்தவர்களிடம் அவர்களிடம் இருந்து என்ன கறக்க முடியுமோ அதைக்கறப்பதில் இந்த சாமியார்கள் வல்லவர்கள். பணம் இல்லாதவர்களிடம் உழைப்பைக் கறப்பார்கள். செல்வந்தர்களிடம் பணத்தைக் கறப்பார்கள். இந்த இரண்டிலும் சேராதவர்களிடம் என்ன கறப்பார்கள் என்பதை இந்த நான்கு நாட்களாக மிக விரிவாகவும் விளக்கமாகவும் ஒளி, ஒலி, எழுத்து, போட்டோ, வீடியோ, இன்டெர்நெட் ஆகிய எல்லா ஊடகங்களின் மூலமாகவும் பார்த்து அனுபவித்தோம்(!).



சாமியார்கள் அப்பாவி மக்களை நம்பவைத்து மோசடி செய்வது காலங்காலமாக நடந்து வந்தாலும், நம் மக்கள் அதிலிருந்து ஒரு பாடமும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. பைனான்ஸ் கம்பெனிகள் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் திரும்ப திரும்ப அங்கே கொண்டுபோய் பணத்தைப் போடுவதும் அவன் ஏமாற்றி ஓடினபிறகு குய்யோ முறையோ என்று புலம்பிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் ஓடுவதும் ஆன இந்த டிராமா 6 மாதத்திற்கு ஒரு முறை அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அதே மாதிரி இந்த சாமியார்களின் டிராமாவும் நடந்துகொண்டேதான் இருக்கும்.


நம் ஜனங்கள் திருந்தப்போவதுமில்லை. சாமியார்களின் அட்டூழியங்களும் நிற்கப்போவதுமில்லை.