bala murugan உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"உயிர் போனால் என்ன ஆகும்?":
உயிர் ஏன் உடலை விட்டு பிரிகிறது.
இப்படி ஒருவர் பின்னூட்டத்தில் கேள்வி கேட்டிருக்கிறார். பதில் சொல்லாவிட்டால் நம் மதிப்பு என்ன ஆவது? ஆகவே இதோ பதில் எழுதுகிறேன்.
இந்த வாக்கியத்தை நன்றாக கவனியுங்கள்.
உயிர் ஏன் உடலை விட்டுப் பிரிகிறது ?
அதாவது உயிர் என்ற ஒரு வஸ்து உடல் என்ற வஸ்துவை விட்டுப் பிரிகிறது என்பது இதில் மறைந்திருக்கும் பொருள். காலம் காலமாக மக்கள் இவ்வாறுதான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். உடல் என்பதுவும் உயிர் என்பதுவும் வெவேறு வஸ்துகள். ஒரு கால கட்டத்தில் உயிர் உடலை விட்டுப் பிரிகிறது, அப்போது அந்த உடலை சவம் என்கிறோம், அதை மண்ணில் புதைக்கிறோம் அல்லது எரிக்கிறோம்.
இது ஒரு மாயை. மனிதன் பிறக்கிறான், வளர்கிறான், வாழ்கிறான், பின்பு இறக்கிறான். இது வாழ்க்கையில் நிதரிசனமாகப் பார்க்கிறோம். ஆனால் இறப்பு என்றால் என்ன என்று சிந்திப்பதில்லை. காரணம் இறப்பைக் கண்டு இனம் தெரியாத ஒரு பயம். யாரும் தங்களுடைய இறப்பைப் பற்றி சிந்திப்பதில்லை. தான் இறக்க மாட்டோம் அல்லது தன்னுடைய இறப்பிற்கு இன்னும் வெகு காலம் இருக்கிறது என்றே ஒவ்வொருவரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.
இந்த காரணத்தினால்தான் இறப்பு என்றால் என்ன? இறப்பிற்குப் பின்னால் என்ன? என்று யாரும் வெளிப்படையாகப் பேசப் பயப்படுகிறார்கள். எனக்குப் புரிந்த சில தத்துவங்களை இங்கே கூறுகிறேன்.
முதலாவது உயிர் என்பது ஒரு வஸ்துவே அல்ல. அது ஒரு செயற்பாட்டு நிலை. மனிதன் பிறக்கும்போது அவனுடைய அவயவங்கள் செயல்பட ஆரம்பிக்கின்றன. அவன் வளரும்போது அந்த செயல்கள் தொடர்கின்றன. இந்த நிலையை அவன் உயிருடன் இருக்கிறான் என்று குறிப்பிடுகிறோம். அவன் முதுமை அடையும்போது இந்த செயற்பாடுகள் குறைந்து ஒரு நிலையில் முற்றிலுமாக நின்று போகிறது. அந்த நிலையில் அவன் உயிருடன் இல்லை என்று கூறுகிறோம்.
செயல்பாடுகள் நிற்பதுதான் இயற்கையின் விதி. மனிதனின் உடலில் உயிர் என்று தனியாக ஏதும் இல்லை. அவன் செயல்கள் முற்றிலுமாக நின்று விடும்போது அவன் உயிர் பிரிந்தது என்று கூறுகிறோமே தவிர, வேறு எந்த மாற்றமும் நடைபெறுவது இல்லை.
ஆனால் நம் ஆன்மிக வாதிகள் இந்த உயிர் என்று வழக்கத்தில் உள்ள வார்தையை ஆன்மா என்று கூறி, ஒருவன் இறக்கும்போது அவனுடைய ஆன்மா அந்த உடலை விட்டு வெளியேறி வேறு ஒரு உடலில் புகுந்து ஒரு புதுப் பிறவி எடுக்கிறது என்று சொல்லி வருகிறார்கள். இது முற்றிலும் ஒரு புனைவே ஆகும். மனித மனத்திற்கு ஒரு ஆறுதல் தரவே இவ்வாறு சொல்லப்படுகிறது.
மற்றபடி, ஆன்மா என்பது ஒரு பொய்யான கற்பனை. அப்படி ஆன்மா பிரிந்து வேறு ஒரு உடலுக்குள் புகுகின்றது என்பதுவும் ஒரு மாபெரும் பொய்யே. இறப்பிற்குப் பின் எதுவும் இல்லை. சொர்க்கம், நரகம் என்பது எல்லாம் கற்பனையே தவிர வேறொன்றுமில்லை. இவை எல்லாம் மக்களின் அறியாமையை வைத்து ஆன்மீக வாதிகள் நடத்தும் வியாபாரமேயாகும் .
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 25 நவம்பர், 2016
வியாழன், 30 ஜூன், 2016
வேலையில்லாமல் கஷ்டப்படும் நபர்களுக்காக ஒரு கதை
முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு இருக்கும். நான் என் அலுவலகத்திற்குப் போகும் வழியில் ஒரு நாற்சந்தியில் ஒரு மூலையில் கொஞ்சம் இடம் விஸ்தாரமாய் இருந்தது. ஒரு நாள் அந்த இடத்தில் ஒரு சிறிய ஓலைப் பந்தல் 6 க்கு 6 அடி அளவில் போடப்பட்டு அதற்குள் ஒரு அடி உயரமுள்ள ஒரு வட்ட வடிவிலான கருங்கல் நட்டு வைக்கப்பட்டிருந்தது. ஆற்றுப் படுகைகளில் கிடைக்குமே அந்த மாதிரியான கல்.
அந்தக் கல்லுக்கு விபூதி பட்டை போட்டு சந்தனப்பொட்டு, குங்குமப் பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கல்லுக்கு முன் ஒரு உடைத்த தேங்காய், இரண்டு வாழைப் பழங்கள், ஒரு வாழைப்பழத்தில் இரண்டு ஊதுபத்திகள், தாம்பூலம் , ஒரு சிறிய பித்தளைச்சொம்பிற்கு வாயில் ஒரு மஞ்சள் துணியைக்கட்டி, நடுவில் கொஞ்சம் கிழித்து விட்டு, வைத்திருந்தது. இவைகளுக்கு முன்னால் ஒரு ஒல்லியான ஆசாமி காவி வேட்டி, துண்டுடன் உட்கார்ந்து ஏதோ புத்தகத்தைப் படித்தபடி இருந்தான்.
சரி ஏதோ பைத்தியக்காரன் போலிருக்குது என்று நான் முதலில் நினைத்தேன். ஆனால் போகப்போகத்தான் தெரிந்தது அவன் பைத்தியக்காரன் இல்லை, மற்றவர்களைப் பைத்தியம் பண்ண வந்தவன் என்று. கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கோயிலுக்கும் பக்தர்கள் சேர்ந்தார்கள். அந்த வழியில் போகும் மாட்டு வண்டிக்காரர்கள் அங்கு நின்று அந்த சாமியைக் கும்பிட்டு விட்டுப் போகத் தொடங்கினார்கள்.
இவ்வாறு பக்தர்கள் அதிகரிக்கவே அந்தப் பூசாரி பந்தலை விஸ்தரித்து சாமியை வலுப்படுத்தினான். ஒரு வருடம் சென்றது. முதல் விழாவை விமரிசையாகக் கொண்டாடினான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டான். சாமியும் ஆசாமியும் நிரந்தரமாகி விட்டார்கள்.
அந்த ரோட்டில் பக்கத்து ஊரிலுள்ள செங்கல் காளவாய்களிலிருந்து செங்கல்களை ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டிகள் அந்த வழியாகப் போவது வழக்கம். இந்தப் பூசாரி அப்படிப் போகும் வண்டுகளிலிருந்து இரண்டிரண்டு செங்கல்கள் வாங்கிக் கொள்வான். இப்படியே செங்கல்களைச் சேகரித்தான். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சிமென்ட், மணல் ஆகியவைகளை வாங்கிக் கொடுத்தார்கள். சில மாதங்களில் ஒரு பத்துக்குப் பத்து கோவில் அங்கே உருவாகி விட்டது.
அந்த சாமி கேட்பவர்களுக்கு கேட்டதை எல்லாம் கொடுக்கும் சக்தி உள்ளது என்று புகழ் பரவ ஆரம்பித்தது. பலர் அந்தக் கோவிலின் நிரந்தர புரவலர்கள் ஆனார்கள். ஒவ்வொரு இந்துப் பண்டிகையையும் விமரிசையாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். இப்படி அந்தக் கோவில் நிரந்தரமானதாக ஆகிவிட்டது. சமீபத்தில் அந்த வழியாகப் போனபோது கவனித்தேன். சாமிக்கு கருங்கல் தரை, வெள்ளிக் கவசம், உற்சவ வாகனங்கள் இத்தியாதிகளுடன் மிகவும் செல்வாக்காக விளங்கியது.
சாமிக்கே இப்படியென்றால் பூசாரியைப் பற்றிக் கேட்க வேண்டுமா? அவரும் பட்டில் காவி உடுத்துக்கொண்டு ரொம்பவும் சௌக்கியமாக இருந்தார்.
நம் இளைஞர்கள் பலர் படித்து விட்டு வேலை கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கோவில் பூசாரியைப் பார்த்து கற்றுக்கொள்ளலாம்.
புதன், 19 நவம்பர், 2014
ஆன்மீகத்தில் ஒரு பக்கம்.
இந்தக் கருத்துக்கள் உங்கள் சிந்தனைகளைத் தூண்டுவதற்காக மட்டுமே
.
நாம் பிறக்கும்போது என்ன கொண்டு வந்தோம்? ஒன்றுமில்லை என்பதை
அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். செல்வந்தர் வீட்டில் பிறந்திருந்தால் பெற்றவர்களுடைய
செல்வம் ஒருவருக்கு கிடைக்கிறது. ஏழையின் வீட்டில் பிறந்திருந்தால் அவர்களின் வறுமை
அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் எதுவும் அவன் கொண்டு வரவில்லை.
அவன் வளர்ந்து வாழும்போது அவன் சேர்க்கும் செல்வங்களெல்லாம்
இந்த உலகில் இறைவன் படைத்த பொருள்களிடமிருந்து கிடைக்கிறது. ஆனால் இதில் அவனுடைய முயற்சியும்
சேர்ந்திருக்கிறது. அப்போதும் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். முயற்சி செய்பவர்கள் எல்லோருக்கும்
ஒரே மாதிரி செல்வம் கிடைப்பதில்லை. கைப்பொருளை இழப்பவர்களும் உண்டு. அதிக செல்வம் ஈட்டுபவர்களும்
உண்டு.
இங்கு ஒன்றை யோசிக்கவேண்டும். ஒரே வகையான முயற்சியில் இந்த
வித்தியாசமான பலன்கள் ஏன் கிடைக்கின்றன? இதற்கு ஆன்மீகத்தில் “வினைப்பயன்” என்று சொல்லி
விடுகிறார்கள். அதாவது ஒவ்வொருவரும் அவர்கள் பூர்வ ஜன்மத்தில் செய்த வினைகளின் பயன்
இந்த ஜன்மத்தில் பலனளிக்கிறது என்று சொல்கிறார்கள்.
இது உண்மையோ, பொய்யோ, ஆனால் இந்த விளக்கம் மனதிற்கு சாந்தி
அளிக்கிறது. இந்த வினைப்பயன் எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்தவர் யாரும் இல்லை.
ஒருவன் ஒரு சமயத்தில் வைத்திருக்கும் கைப்பொருள் அவனால் முழுமையாக
ஈட்டப்பட்டது என்று சொல்வது சரியல்ல. அவனுடைய வினைப் பயனே அந்த பொருளை அவனுக்கு ஈட்டித்
தந்திருக்கிறது. ஆகவே அவன் அந்தப் பொருளின் மீது முழு உரிமை கொண்டாடுவது தவறல்லவா?
மேலும் அவன் இவ்வுலகை விட்டுப் போகும்போது அந்தப் பொருளில்
கடுகளவாவது தன்னுடன் எடுத்துச் செல்ல முடிகிறதா? இல்லையே. பின் ஏன் உலகில் மாந்தர்கள் செல்வத்திற்காக
இப்படி போராடுகிறார்கள்?
அதே மாதிரிதான் ஒருவன் பெறும் கல்வி அல்லது ஞானம். அதை அவன்
பல ஆசிரியர்களிடமிருந்து பெறுகிறான். அது எப்படி அவனுடைய முழு உரிமையாகும்? அவன் அந்த
ஞானத்திற்கு காப்பாளன் மட்டுமே. அவனுடைய கடமை அந்த ஞானத்தை எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பது
ஆகும்.
நாம் பதியும் பதிவுகளெல்லாம் நமக்கு தூக்கத்தில் ஞானோதயத்தில்
உதித்த கருத்துகளா? நாம் பலரிடமிருந்து கற்றவற்றை நமக்கு தோன்றியவாறு பதிகிறோம். இதற்கு
நாம் முழு உரிமை கோண்டாடுவது சரியா?
ஆனால் மனிதர்கள் இந்த உண்மையை உணர்வதில்லை. தான் ஈட்டிய பொருளும் கல்வியும் தன்னுடையது மட்டுமே. அடுத்தவர்களுக்கு அதில் உரிமை இல்லை என்றே நினைக்கிறார்கள். இதுதான் மாயை. இதிலிருந்து விடுபட வேண்டும். அதுவே முதிர்ச்சிக்கு அறிகுறி.
வியாழன், 27 அக்டோபர், 2011
முட்டாள் ஆவது எப்படி.
Anonymous said...
ஒவ்வொரு ஆன்மிக வாதியும் உலகில் இருக்கும் ஒவ்வொரு முட்டாளாக பார்த்து ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் சொல்வதில்லை. அது அவர்களது வேலையும் இல்லை. தான் எதையும் அறியாத வரை மற்ற அறிந்தவர்களை முட்டாளாக நினைப்பதுதான் முட்டாள்களின் தன்மை. எந்த அறிவு வேண்டுமோ அதை தேடு அது கண்டிப்பாக கிடைக்கும். தேடாமல் இருந்தால் அது தானாக கிடைக்காது யாரும் உன்னிடம் வந்து சொல்ல மாட்டார்கள்.
ரொம்ப ரொம்ப சுலபமான வேலை இதுதாங்க. கொஞ்சம் மொக்கையில்லாமல்
ஒரு பதிவு போட்டுட்டீங்கன்னா போதும். பத்து பேரு உங்களுக்கு முட்டாள் பட்டம் தந்துடுவாங்க. அது ஏன்னு யோசிச்சுப் பார்த்ததில எனக்கு என்ன தோணுச்சுங்கிறத இந்தப் பதிவில எழுதியிருக்கேனுங்க.
எல்லோருக்கும் தனக்குத் தெரிஞ்சது அடுத்தவனுக்குத்
தெரியலேன்னா அவனுக்கு முட்டாள்னு பட்டம் கொடுத்துடுவாங்க. அவனுக்குத் தெரிஞ்சிருக்கிறது
உண்மைதானா என்பதைப் பற்றி அவன் கவலைப் படுவதில்லை. எனக்குத் தெரிஞ்சது அவனுக்குத் தெரியவில்லை,
அவ்வளவுதான், ஆகவே அவன் முட்டாப்பயதான். இதுதான் அவனுடைய லாஜிக்.
இதுவாச்சும் பரவாயில்லீங்க. அவன் என்னென்னமோ நம்பிக்கைகள்
வச்சிருப்பான். நீங்க அந்த நம்பிக்கைகளுக்கு எதிரா ஏதாவது சொன்னாப் போதும். உங்களுக்கு
முட்டாள்னு பேர் வச்சுடுவான். நம்பிக்கைகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானவை. நீங்கள்
நம்புவதை நான் அப்படியே நம்ப வேண்டுமென்ற அவசியம் உண்டா?
குறிப்பாக மத நம்பிக்கைகள். இதைப்பற்றி யாரும் ஒண்ணும்
சொல்லக்கூடாது. சொன்னா, உடனே நீ ஒரு முட்டாள், உனக்கு இந்த உண்மைகள் புரியாது, நீ ஒரு
நாத்திகன், அதனால்தான் இப்படி எழுதுகிறாய், இப்படியெல்லாம் சொல்லுவார்கள்.
நான் ஒரு
கேள்வி கேட்கிறேன். கடவுளைப் பார்த்தவன் எவனும் கிடையாது. ஆனால் ஒருவன் கடவுள் உண்டு
என்கிறான். அப்படி அவன் நம்புகிறான். இன்னொருவன் கடவுள் இல்லை என்கிறான். ஏனெனில் அவன்
கடவுளைப் பார்த்ததில்லை, கடவுளைப் பார்த்தவர்களையும் பார்த்ததில்லை. அது அவன் நம்பிக்கை
அல்லது அவன் எண்ணம் அல்லது அவன் கருத்து.
ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை
என்றால் நேராக விவாதம் செய்யலாம். ஆனால் ஒருவனின் முதுகிற்குப் பின்னால் அவதூறு செய்வது
கோழைத்தனம்.
ஞாயிறு, 6 மார்ச், 2011
செயல்களும் விளைவுகளும்
கடமைகள், தேவைகள், ஆசைகள் இவற்றை நிறைவேற்றுவதற்கான எண்ணங்கள் மனதில் தோன்றி, செயல்களாக வெளிப்படுகின்றன. இச்செயல்களின் விளைவுகளே மனிதனுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் தருகின்றன.
நாம் செய்யும் செயல்களுக்கு எப்போதும் நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளே ஏற்படுவதில்லை. விளைவுகள் நாம் எதிர்பார்த்தபடி இருந்தால் இன்பமும், எதிர் மறையாக இருந்தால் துன்பமும் நம் மனதில் தோன்றுகின்றன. இந்தத் தத்துவத்தை உணர்ந்தவன் இந்த விளைவுகளைக் கண்டு கலங்க மாட்டான். அவன்தான் ஞானி எனப்படுபவன். எல்லோரும் ஞானியாக முடியாது. ஆனால் ஓரளவிற்கு இந்த உலக அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கீதை இதைத்தான் மக்களுக்குப் போதிக்கிறது.
“உன் கடமையைச் செய். பலனை என்னிடம் விட்டு விடு.”
இதை வெறும் வறட்டு வேதாந்தமாகக் கருதாமல் நடைமுறை வாழ்க்கையில் அனுசரித்தால் வாழ்க்கை அமைதியாக இருக்கும்.
வியாழன், 20 ஜனவரி, 2011
கொஞ்சம் குழம்பலாமா?
ஒரே மாதிரியான பதிவுகள் சலிப்புத்தட்டும். அதற்காக நான் சினிமா விமரிசனம் எழுத முடியுமா? ஆகவே ஆன்மீகத்தில் கொஞ்சம் நம் சரக்கை விற்கலாமென்ற முடிவின் பயனே இந்தப் பதிவு.
நான் யார்?
இதைத் தெரிந்து கொண்டால் முக்தியடையலாம் என்று காலம் காலமாக ஆன்மீக குருமார்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நானும் முக்தியடையலாம் என்று ஆசைப்பட்டு இந்த சோதனையில் இறங்கினேன்.
கேள்வி: நீ யார்?
பதில்: நான் கந்தசாமி.
கே: அது உன் பெயர். நீ யார்?
ப: நான் ஒரு மனிதன்.
கே: அது உன் உருவத்தின் பெயர். அது நீயல்ல.
ப: அப்படியானால் நான் யார் என்று நீங்களே சொல்லுங்கள்.
கே: இல்லை. நீதான் உன்னை அறிய வேண்டும்.
ப: எனக்குத்தான் தெரியவில்லையே ஸவாமி, நீங்களே சொல்லப்படாதா?
கே: நீயாகத் தெரிந்து கொண்டால்தான் உனக்கு ஞானம் வரும்.
ப: என்னால் முடியவில்லையே?
கே: உன்னால் முடியும். தீவிரமாக முயற்சி செய்.
ப: ஆகட்டும், முயற்சிக்கிறேன், ஸ்வாமி.
இப்படியாகப் பேசிப் பேசியே நம் கழுத்தை அறுப்பவர்கள்தான் ஆன்மீகக் குருக்கள். ரமண மகரிஷி என்பவரின் உபதேசங்கள் எல்லாம் இப்படியே இருக்கும். நானும் என்னுடைய சிறு வயது முதற்கொண்டு இந்த ஆன்மீகப் பிரசங்கங்களைக் கேட்டுக்கொண்டு வருகிறேன். இந்தக் கேள்வி ஞானத்தை வைத்துக்கொண்டு என்னுடைய ஆராய்ச்சி மூளையைப் பயன்படுத்திக் கண்டு பிடித்தது என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் ஆத்மாவின் ஸ்வரூபம். அதனால் எல்லோரும் ஒருவரை ஒருவர் வித்தியாசப்படுத்திப் பார்க்கக் கூடாது.
ஆஹா, என்ன ஒரு பரோபகாரத் தத்துவம் என்று நானும் முதலில் மயங்கி விட்டேன். பிறகுதான் உண்மையைப் புரிந்து கொண்டேன். எல்லோரும் சமம் என்பது உண்மைதான். ஆனால் அதில் சில வரைமுறைகள் இருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன். என்னவென்றால் குருவிற்கு அதிக காணிக்கை கொடுப்பவர்கள் அவர்களுக்குள் சமம். ஆனால் குறைவாக காணிக்கை கொடுப்பவர்களுக்கும் அவர்களுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. குருவே அவர்களை பெயர் சொல்லிக் கூப்பிடுவார். அருகில் அமர்த்திக்கொள்வார். மற்றவர்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தால் கூட ஏறெடுத்தும் பார்க்கமாட்டார். இன்னும் பல காரணங்களினால் மக்கள் வேறுபடுகிறார்கள். அவைகளை விவரித்தால் பதிவு முடிவு பெறாது.
குரு என்பவர் சாதாரண லௌகீக விவகாரங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்களும் காவி கட்டிய சம்சாரிகள்தான் என்று புரிந்து கொண்டேன். உண்மையான துறவிகள் இருக்கலாம். அவர்களை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)