வியாழன், 10 ஜூன், 2010

நிலக்கடலை ஆராய்ச்சிப்பண்ணை, ஆனைமலை. பாகம் - 2 (கவர்ன்மென்ட் ரூல்ஸ்)

 
சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற பழமொழி சர்க்கார் பண்ணைகளுக்கு மிகவும் பொருத்தம். ஒரு நாள் வேலை செய்தால் மூன்று நாளைக்கு கணக்கு எழுத வேண்டும். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

முதலில் பண்ணையில் மறு நாளைக்கு என்னென்ன வேலைகள் செய்யப் போகிறோம் என்று ஒரு ரிஜிஸ்டரில் எழுதி அதில் மேலதிகாரியின் ஒப்புதல் வாங்க வேண்டும். இதற்கு Forecast Register என்று பெயர். அடுத்த நாள் காலையில் பண்ணை ஆரம்பிக்கும் நேரத்தில் மஸ்டர் எடுக்கவேண்டும். எல்லோருக்கும் வேலைகளைச் சொல்லி அனுப்பி விட்டு இன்னொரு ரிஜிஸ்டரில் இன்று வந்திருக்கும் ஆட்கள் இன்னின்ன பிளாட்டுகளில் இன்னின்ன வேலைகள் செய்கிறார்கள் என்று எழுதி மேலதிகாரியின் ஒப்புதல் வாங்கவேண்டும். இதற்கு Programme Register பெயர். பிற்பகல் வேலை ஆரம்பிக்கு முன் இன்னொரு முறை மஸ்டர் எடுக்க வேண்டும். பின்பு அன்றைய வேலைகள் எல்லாம் முடிந்தபின் இன்று இன்னின்ன வேலைகள் நடந்து முடிந்தன என்று ஒரு ரிஜிஸ்டரில் பதிந்து அதிகாரியின் பார்வைக்கு அனுப்ப வேண்டும். இந்த ரிஜிஸ்டருக்கு Daily Memorandum Sheet (DMS) என்று பெயர்.

இந்த ரிஜிஸ்டரில் அன்றைய தினம் மஸ்டரில் கண்டுள்ள அனைத்து ஆட்களுக்கும் வேலை காட்டவேண்டும். இன்னின்ன பிளாட்டுகளில் இன்னின்ன வேலைகளுக்காக இவ்வளவு பேர் வேலை செய்தார்கள், இவ்வளவு வேலை முடிந்தது என்ற விவரங்கள் அதில் குறிப்பிட வேண்டும். இந்தக்கணக்கு சரியாக இல்லையென்றால் கணக்கில் விட்டுப்போன ஆளுக்கு மேனேஜர் ரெகவரி கட்டவேண்டும். ஏதாவது விதையோ, பூச்சி மருந்தோ கொடுத்திருந்தால் இந்த பிளாட்டில் விதைக்க இவ்வளவு விதை கொடுக்கப்பட்டுள்ளது, அல்லது இன்ன பிளாட்டில் மருந்து அடிக்க இவ்வளவு பூச்சி மருந்து கொடுக்கப்பட்டது என்ற விவரம் எழுத வேண்டும். பண்ணையிலிருந்து ஏதாவது அறுவடை ஆகி வந்திருந்தால் இன்ன பிளாட்டிலிருந்து இன்ன மகசூல் அறுவடையாகி வந்திருக்கிறது என்று அதில் குறிக்க வேண்டும். அந்த வேலைளைச் செய்ய ஆட்களை உபயோகப்படுத்தின விவரம் இருக்கவேண்டும். உதாரணமாக ஒரு பிளாட்டில் பூச்சி மருந்து அடித்ததாக பூச்சி மருந்து ஸ்டாக் புக்கில் கழித்துவிட்டு, DMS – ல் அந்த வேலை செய்ததற்கான ஆட்கள் விபரம் காட்டாவிட்டால் அது பெரும் தவறு. ஆட்கள் இல்லாமல் அந்த பூச்சி மருந்தை எப்படி அடித்திருக்க முடியும்? அதை திருடி விட்டீர்களா? என்னதான் செய்தீர்கள்? அந்த மருந்து சரியானபடி உபயோகம் செய்யப்படாததால் அதற்குண்டான பணத்தைக் கட்டு என்று ஆடிட்காரன் எழுதிவிடுவான். பணத்தைக் கட்டுவதைத் தவிர வேறு வழியே கிடையாது.

பண்ணையிலிருந்து என்ன பொருள் வெளியில் போனாலும், உள்ளே வந்தாலும் இந்த ரிஜிஸ்டரில் குறிப்பிட்டாக வேண்டும். யாராவது விசிட்டர்ஸ் வந்தாலும் குறிப்பிட வேண்டும். ஆக மொத்தம் பண்ணையில் நடக்கும் எல்லா நடவடிக்கைகளும் இந்த ரிஜிஸ்டரில் பதிவாக வேண்டும். இந்த ரிஜிஸ்டர்கள் வேலை நாட்கள் அனைத்திலும் எழுத வேண்டும். லீவு நாட்களிலும் இன்று விடுமுறை என்று அந்த தேதியைப்போட்டு குறிப்பிட வேண்டும். என்ன, தலை சுற்றுகிறதா, இதற்கே இப்படி என்றால், இன்னும் இருக்கிறது.

ஸ்டாக் ரிஜிஸ்டர்கள் என்று ஒரு குரூப் உண்டு. எல்லாப்பெயர்களையும் சொன்னால் மயக்கம் வந்து விடும்.
1.   Dead Stock Register
2.   Temporary Dead Stock Register
3.   Farm Produce register
4.   Stationary Register
5.   Stamp Register
6.   Furniture Stock Register

இவ்வளவுதான் ஞாபகத்திற்கு வருகிறது. இதில் பண்ணைக்கு (ஆபீஸ உட்பட) வாங்கும் சகல பொருட்களும் பதிவாக வேண்டும். இதில் பதிவாவதற்கு முன்னால் DMS – ல் பதிவாகி இருக்கவேண்டும். எந்தப் பொருளை உபயோகத்திற்கு எடுத்தாலும் இதில் பதிய வேண்டும்.

இத்தனை வேலைகளை வைத்துக்கொண்டு பண்ணை வேலைகளையும் மேற்பார்வை பார்க்கவேண்டும். ஆராய்ச்சியும் பண்ணவேண்டும். எப்படி செய்தேன் என்று இப்போது யோசித்தால் மலைப்பாக இருக்கிறது.

வேட்டைக்காரன்புதூர் கவுண்டர்களின் ஜம்பம் பிரசித்தி பெற்றது. இதில் நான் எப்படி சிக்கினேன் என்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?