அரசு விதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு விதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

19. ஆதார் கார்டும் நானும்

                                          Image result for ஆதார் அட்டை
ஆதார் கார்டு பதிவு செய்ய ஆரம்பித்த காலத்திலேயே நானும் என் குடும்பத்தினரும் கூட்டத்தோடு கூட்டமாகப் போய் பதிவு செய்து விட்டோம். ஆதார் கார்டு எந்த ஒரு அரசு வேலைக்கும் தேவையில்லை என்று உச்ச நீதி மன்றம் அன்றிலிருந்து இன்று வரை கரடியாய் கத்திக்கொண்டிருக்கிறது.

ஆனால் அரசோ மும்முரமாய் அனைத்து துறைகளிலும் ஆதார் ஆதார் என்று ஆப்பு வைத்துக்கொண்டே போகிறது. தற்பாதைய லேடஸ்ட் ஆப்பு மொபைல் போனை ஆதாருடன் இணைப்பது.

என்னுடைய மொபைலில் பிஎஸ்என்எல் காரன் ஒரு நாள் இதைப் பற்றி ஒரு செய்தி அனுப்பியிருந்தான். நானும் உடனே ஓடிப்போய் என் மொபைல் நெம்பரை ஆதார் நெம்பருடன் இணைக்கப்பார்த்தேன்.

என் கை விரலை ஒரு ஸ்கேனரில் வைக்கச்சொன்னார்கள். நானும் வைத்தேன். ஸ்கேனர் கம்மென்று இருந்தது. அந்த ஆபரேட்டர் பொறுமையாக ஒவ்வொரு விரலாக ஸ்கேனரில் வைத்துப் பார்த்தார். ஆனால் அந்த ஸகேனர் எதற்கும் அசைவதாகக் காணோம்.

அப்புறம் அந்த ஆபரேட்டர் என் மேல் பரிதாப ப் பட்டு "சார், உங்கள் கைவிரல் ரேகைகளெல்லாம் தேய்ந்து அழிந்து போய்விட்டன. இப்போதைக்கு ஒண்ணும் செய்ய முடியாது. இந்த ஆதார்-மொபைல் லிங்க் செய்வதற்கு ஒரு வருடம் கெடு இருக்கிறது, அதனால் அதற்குள் இந்த பிரச்சினைக்கு ஏதாவது வழு பிறக்கும். அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்று என்னை வழியனுப்பி வைத்தார்.

நானும் என் கை ரேகைகளை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா என்று வழி தேடிக்கொண்டிருக்கிறேன்.

புதன், 12 ஜனவரி, 2011

சிவப்பு நாடா தர்பார் – தொடர்ச்சி.


என்னுடைய சிவப்பு நாடா தர்பார் பதிவில் வடுவூர் குமார் போட்ட பின்னூட்டமும் அதற்கு என்னுடைய எதிர்வினையும்.

படிக்கும் போதே எரிச்சலாக வருதே எப்படி மனம் ஒப்பி செய்தீர்கள்? இம்மாதிரி கால விரயம் அடுத்தவர் வாழ்வை கெடுக்கும் சான்ஸ் இருப்பதால் நீங்கள் மேலதிகாரிக்கு ஆலோசனை சொல்லவில்லையா? அல்லது மரியாதை நிமித்தமாக சொல்லக்கூடாதா? :-)
வர வர அரசாங்க அலுவலகத்தை அதிலிலும் அதன் உள்ளே நம் ஏதாவது வேலைக்காக செல்லனும் என்றால் ஆயிரம் முறை யோசிக்கவேண்டியிருக்கு.சமீபத்தில் என்னுடைய கடவுச்சீட்டை புதுப்பிக்க சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு சென்ற போது கண்டவை ...

உட்கார கூட இருக்கை இல்லை, தேவையில்லாத கியூ அதைக்கட்டுப்படுத்த ஒளிப்பான் இருந்தாலும் அது வேலை செய்யவில்லை ஆனால் பணம் வாங்கும் இடத்தில் அது வேலை செய்கிறது.காறி துப்பனும் போல் இருந்தது.மண்டை உள்ளே இருப்பது எந்த அளவுக்கு காய்ந்துபோயிருந்தால் பொது ஜனத்தை இப்படியெல்லாம் பழிவாங்க முடியும்.
அவர்கள் தேவை என்பதை கியூவில் நிற்கும் போது அல்லது உங்கள் முறை வரும் போது தான் தெரிந்துகொள்ளமுடியும்.இணையத்தில் அவர்கள் தேவை முழுமையாக இல்லை அல்லது அன்று வேலை பார்க்கும் அதிகாரியின் மன நிலையை பொருந்து உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இன்னும் எத்தனியோ!!
வடுவூர் குமார் அவர்களுக்கு,
உங்களுடைய ஆதங்கத்தை நன்கு புரிந்து கொண்டேன். ஆனால் அன்று நான் செய்தது தவறுதான். இளமை வேகத்தில், நான் சரியாக என் கடமைகளைச் செய்துகொண்டு இருக்கும்போது தார்க்குச்சி போடுகிறாரே என்ற வேகம்தான் என்னை அப்படிச் செய்யத்தூண்டியது. வாயில்லாப் பிராணிகளான மாட்டையோ, குதிரையையோ கூட அதிகம் விரட்டினால் முரண்டு பிடிப்பதில்லையா? அப்படி என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இதைப்பற்றி மேலும் ஒரு பதிவு போடுகிறேன்.


அரசு அலுவலகங்களில் இப்போது இருக்கும் நிலையைப்பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கு முடிவே இருக்காது. நான் ஏதோ நகைச் சுவைக்காகப் போட்ட பதிவு என்றாலும் இந்த நிலை எல்லோருடைய வாழ்க்கையையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை. இதன் காரணத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழிஎன்ற பழமொழியைத்தான் உதாரணம் காட்டவேண்டும்


அரசு ஊழியர்கள் என்று ஒரு கூட்டம் ஆகாயத்திலிருந்து குதிக்கவில்லை. அவர்களும் இந்த சமுதாயத்திலிருந்து வந்தவர்களே. இன்றைய சமுதாயத்தில் என்னென்ன கேடுகள் ஊறியிருக்கின்றனவோ, அத்தனையும் அரசு ஊழியர்களிடமும் இருக்கின்றன. மக்களின் மனப்போக்கு இன்று வெகுவாக மாறியிருக்கிறது. அரசு வேலையில் இருப்பவர்கள் தங்கள் சம்பளம் ஆபீசுக்கு வருவதற்காக மட்டும்தான் என்ற மனப்பான்மையில் இருக்கிறார்கள். வேலை செய்ய வேண்டுமென்றால் அந்த வேலை யாருக்கு உபயோகமாக இருக்கிறதோ, அவர்கள் அதற்குரிய கட்டணத்தைக் கட்டவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.

சக ஊழியர்களுடைய பயணப்படியை சேங்க்ஷன் செய்யக்கூட கூலி எதிர்பார்க்கும் அலுவலகங்கள் உண்டு. அப்புறம் அந்த ஊழியர் பொய் பயணப்படி போடாமல் என்ன செய்வார்? மக்களிடம் நேர்மை என்ற குணம் அறவே இல்லாமற் போயிற்று.
 

பல்கலைக் கழகங்கள் சரஸ்வதி குடியிருக்கும் ஆலயம் என்று போற்றுகிறோம். அங்கே சரஸ்வதி படும் பாடு பிரம்மாவிற்குத்தான் தெரியும். முதுகலை ஆராய்ச்சிக் கட்டுரைகள் எப்படி தயாராகின்றன என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்? நினைக்க நினைக்க வயிறு எரிவதுதான் மிச்சம். புரோபசர்களின் இன்றைய சம்பளம் என்னவென்று தெரியுமா? அந்தச் சம்பளம் செரிக்க அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் தெரியுமா? கெழவனுக்கு எதற்கு இந்த வீண் புலம்பல் என்று நையாண்டி மட்டும் செய்வார்கள். தெருவில் பார்த்தால் கல்லெடுத்து அடித்தாலும் அடிப்பார்கள்.



அரசு ஊழியர்களும் இன்று கை நிறைய சம்பளம் வாங்குகிறார்கள். அது போதவில்லையென்றுதான் கிம்பளமும் வாங்குகிறார்கள். விலை வாசி ஏறிவிட்டபடியால் கிம்பளமும் இப்போது ஆயிரத்தில் இருந்து லட்சங்களுக்கு ஏறியிருக்கிறது.
இதோடு இந்த நாற்றம் புடிச்ச பதிவு போதும். வேறு ஏதாவது போற வழிக்கு புண்ணியம் தேடற வழியைப் பார்ப்போம்.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

சிவப்பு நாடா தர்பார்


இன்றைய அரசு அலுவலக நடைமுறைகள், நமக்கு, நம்மை ஆண்ட ஆங்கிலேயத் துரைமார்கள் விட்டுச்சென்றவை. நாம் அரசியல் ரீதியாகச் சுதந்திரம் வாங்கிவிட்டதாகப் பெருமை கொள்ளலாம். ஆனால் நாம் நம் அலுவலக நடைமுறைகளில் இன்னமும் ஆங்கிலேயத் துரைமார்களின் அடிவருடிகளாகத்தான் இருக்கிறோம்.

வெகு நாட்களுக்கு முன்பு ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம். அரசு அலுவலகங்களில் ஒரு கடிதம் பத்திரமாக இருக்கிறதா என்று காட்டும் அக்கறையில் பத்தில் ஒரு பங்கு கூட அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதில் காட்டமாட்டார்கள் என்று அதில் கூறியிருந்தது. இதற்கு என்ன காரணம் என்றால் அந்தக் கடிதம் பத்திரமாக இருந்தால் அதில் கூறப்பட்டுள்ள விஷயத்தைப் பற்றி எப்போது வேண்டுமானாலும் செயல் ஆரம்பித்துக் கொள்ளலாம். ஆனால் கடிதம் இல்லாவிட்டால் என்ன செய்யமுடியும்

இந்தக் காரணத்தினால் அரசு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களை முறைப்படுத்தி அந்தந்த பிரிவுகளுக்கு அனுப்ப ஏகப்பட்ட விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்படி விதிகளின்படி நகரும் கடிதங்கள், அரசு அலுவலகங்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் போவதற்கு பல நாட்கள் ஆகலாம். இதை ஒரு மேஜையில் இருந்து இன்னொரு மேஜைக்குப் போவது என்று வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் அரசு அலுவலகங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி மேஜை இருக்கும். எப்படி மேஜைக்கு உயிர் இல்லையோ அது போல அந்த மேஜையில் உட்கார்ந்து வேலை செய்யும் மனிதர்களுக்கும் உயிர் அதாவது மனசு கிடையாது

அரசு அலுவலகங்களில் கடிதங்கள், மற்ற காகிதங்களை ஒரு பழுப்பு அட்டைக் காகிதத்தில் (பள்ளிப் புத்தகங்களுக்கு அட்டை போடுவோமே, அந்த மாதிரி காகிதத்தில்) ஒரு டேக்கில் (Tag) கோர்த்து வைத்திருப்பார்கள். இதை பைஃல் என்று சொல்வார்கள். பைஃல்கள் ஒரு டேபிளிலிருந்து இன்னொரு டேபிளுக்குப் போகும்போது தொய்ந்து விடும். இதைத் தவிர்ப்பதற்காக ஒரு கெட்டி அட்டையை பைஃல் சைசுக்கு வெட்டி அதில் ஒரு நாடா கோர்த்திருப்பார்கள். இந்த அட்டைகளில் பைஃல்களைக் கட்டித்தான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும். இதில் உள்ள நாடாக்கள் பொதுவாக சிவப்பு கலரில்தான் இருக்கும். அதனால்தான் அரசு அலுவலக நடவடிக்கைகளை சிவப்பு நாடா தர்பார்என்று குறிப்பிடுவது வழக்கம்.   

ஒரு அலுவலகத்திற்கு வரும் கடிதம், அதன்பேரில் நடவடிக்கை எடுக்கவேண்டிய நபருக்குப் போய் சேருவதற்கு குறைந்தது மூன்று நாட்கள் ஆகும். அவரிடம் இந்த மாதிரி ஒரு 10 அல்லது 15 கடிதங்கள் தினமும் வரும். அவைகளின் முக்கியத்துவத்தை அனுமானித்து அவர் ஒவ்வொன்றாக செயல் எடுப்பார். எப்படியும் ஒரு 5 கடிதங்களுக்கு அவரால் செயல் எடுக்கமுடியாமல் போகும். சரி, நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று அதை மேஜையின் ஒரு ஓரத்தில் வைத்து விட்டுப்போவார். அடுத்த நாள் திரும்பவும் 10/15 கடிதங்கள் வரும். அதிலும் ஒரு 5 கடிதங்கள் நின்றுவிடும். இப்படியே தொடர்ந்து ஒவ்வொருவர் மேஜையிலும் நூற்றுக்கணக்கில் பெண்டிங்க் கடிதங்கள் தேங்கிவிடும்.

அவைகளில் பெரும்பாலான கடிதங்களுக்கு செயல் எடுக்க வேண்டிய அவசியமில்லாமலே போகும். அப்படி செயல் எடுக்கவேண்டிய கடிதங்கள் ஏதாவது இருந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட நபர் வந்து விசாரிக்கும்போதுதான் அந்தக் கடிதத்தைத் தேடி எடுப்பார்கள். அரசு அலுவலர்களுக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகம். அந்த நூற்றுக்கணக்கான கடிதங்களில் வந்த நபரின் கடிதத்தை நொடியில் எடுத்து விடுவார். அந்த நபர் நடந்துகொள்ளும் முறையைப் (?) பொறுத்து அந்தக் கடிதத்திற்கு செயல் எடுக்கப்படும்

எல்லா அலுவலகங்களிலும் அலுவலக உதவியாளர் என்று ஒருவர் இருப்பார். அந்தக் காலத்தில் இவருக்கு பியூன் என்று பெயர். இந்தப் பெயர் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்று போராடி பெயர் மாற்றம் செய்தார்கள். அவருக்கு எந்தக் கடிதம் யாரிடம் பெண்டிங்காக இருக்கிறது என்ற விவரம் முழுவதும் அத்துபடி. ஒவ்வொரு அலுவலகத்திலும் இவர்தான் மிகவும் முக்கியமானவர். அங்கு என்ன காரியம் ஆகவேண்டுமென்றாலும் இவரிடம் சொன்னால் போதும். தகுந்த மாதிரி கவனித்தால் இவரே அந்த காரியத்தை முடித்துக்கொடுத்து விடுவார் அல்லது அதற்கான சரியான வழிமுறைகளைச் சொல்லுவார். இவருக்குத் தெரியாத ரகசியம் அந்த அலுவலகத்தில் எதுவும் இருக்காது.

இந்தக் கடிதங்களை இவ்வாறு ஒவ்வொருவரும் தாமதம் செய்வார்கள் என்பதற்காக அதைத் தடுக்க ஒரு விதி ஏற்படுத்தினார்கள். அதாவது யாரும் எந்தக் கடிதத்தையும் மூன்று நாளைக்கு மேல் செயல் எடுக்காமல் தங்களிடம் வைத்துக்கொள்ளக்கூடாது என்று ஒரு விதி. நான் முதன்முதலில் வேலை பார்த்த அலுவலகத்தில் இந்த விதி எப்படி வேலை செய்தது என்று பார்க்கலாமா?

அது ஒரு மிகச்சிறிய அலுவலகம். ஒரு ஆபீசர், இரண்டு டெக்னிகல் அசிஸ்டன்ட்ஸ், ஒரு டைப்பிஸ்ட், இரண்டு பியூன்கள், மற்றும் சிலர். அந்த ஆபீசுக்கு ஏதாவது கடிதம் வந்தால் அதை ஆபீசர் பிரித்துப் பார்த்துவிட்டு ஏதாவது செயல் எடுக்கவேண்டிய கடிதம் இருந்தால் அதை நேராக என்னிடம் கொடுக்கச் சொல்லி பியூனிடம் கொடுப்பார். பியூன் என்னிடம் கொடுப்பார். நான் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, அதற்கு என்ன பதில் எழுத வேண்டுமோ அதை எழுதி பியூனிடம் கொடுத்தால் அவன் அதை ஆபீசர் டேபிளில் வைத்து விடுவார். (ஆபீசரை அவசியமில்லாமல் நேரில் சென்று பார்ப்பது அநாகரிகம்).

அந்தக் கடிதத்தை ஆபீசர் பார்த்து அப்ரூவ் செய்ததும், டைப்பிஸ்ட்டிடம் போகும். அவர் அதை டைப் செய்து என்னுடைய பார்வைக்கு அனுப்புவார். நான் அதை சரி பார்த்து ஆபீசருக்கு அனுப்பினால் அவர் அதில் கையெழுத்துப் போட்டு திரும்பவும் டைப்பிஸ்ட்டிற்குப் போகும். அவர் அதை கவரில் போட்டு யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு தபாலில் அனுப்பி விடுவார். இந்த வேலையெல்லாம் ஒரு நாளில் முடிந்துவிடும்.

ஒரு நாள் அந்த ஆபீசருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஒரு சர்குலர் அனுப்பினார். அதில் என்ன எழுதியிருந்தது என்றால் - இனி மேற்கொண்டு இந்த ஆபீசில் யாரும் எந்தப் பேப்பரையும் மூன்று நாட்களுக்கு மேல் செயல் எடுக்காமல் வைத்திருக்கக் கூடாது. அப்படி யாராவது வைத்திருந்தால் அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இத்தியாதி, இத்தியாதி. எனக்கு ஒன்றும் புரியவில்லை. மேலும் அவர் என்னைப் பார்த்தால் முறைத்துக்கொண்டு வேறு இருந்தார். சரி, ஆபீஸ் ஆர்டர் என்றால் ஆர்டர்தான், கடைப்பிடித்துவிடுவோம் என்று முடிவு செய்தேன்.

அது முதல் கடிதங்கள் வந்தால் அவை நேரே டைப்பிஸ்ட்டுக்கே கொடுக்கப்பட்டன. அவர் அவைகளை எல்லாம் ஒரு ரிஜிஸ்டரில் பதிவு செய்து, யார் யாருக்கு கொடுக்கவேண்டுமோ அவர்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டு, பின்பே அந்த கடிதங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். ஓஹோ ஏதோ வெடிக்கப்போகிறது என்று நானும் சர்வ ஜாக்கிரதையாய் இருக்க ஆரம்பித்தேன். கையெழுத்து போடும்போதே தேதியுடன் போட்டேன். நானும் ஒரு ரிஜிஸ்டர் தயார் செய்து வைத்துக்கொண்டேன். திரும்பக் கொடுக்கும்போது கையெழுத்து வாங்கவேண்டுமல்லவா?


அரசு அலுவலங்களில் நடைமுறை என்னவென்றால், தலைமை ஆபீசர் தவிர வேறு யாரும் தனிப்பட்ட முடிவுகள் எடுக்கக் கூடாது. ஒரு கடிதத்திற்கு பதில் எழுதுவதாக இருந்தால், இன்னொரு முழுதாள் எடுத்துக்கொண்டு அதில், “இந்தக் கடிதத்தில் இன்னார், இன்ன விவரம் கேட்டிருக்கிறார், அந்த விபரம் இந்த ஆபீசில் இல்லை, வேறு (ஏதாவது ஒரு ஆபீஸ் பெயரைச்சொல்லி) ஆபீஸில் இருக்கலாம், என்ன செய்வது?” என்று எழுதி அந்தக்காகிதத்தை முதல் கடிதத்துடன் சேர்த்து ஆபீசரின் உத்திரவுக்காக என்று எழுதி ஆபீசருக்கு அனுப்பவேண்டும். இதற்கு நோட் பைஃல் என்று சொல்வார்கள். நானும் அதேமாதிரி செய்து மூன்றாவது நாள் என் ரிஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிவிட்டு, டைப்பிஸ்ட்டிடம் கொடுத்தேன்.  


அவர் அதை ஆபீசர் டேபிளில் வைத்தார். ஆபீசர் அந்த பைலில் எஸ்என்று எழுதி திரும்பவும் எனக்கு பழய மாதிரியே வந்தது. நானும் உடனே ஒரு பதில் எழுதி வைத்திருந்து, மூன்றாவது நாள் திரும்பக் கொடுத்தேன். அந்த லெட்டர் மறுநாள் ஆபீசர் கையெழுத்து போட்டு டைப்பிஸ்ட்டிடம் வந்து அவர் அதை டைப் அடித்து மூன்று நாள் கழித்து என்னிடம் வந்தது. நானும் அதை என்னிடம் மூன்று நாள் வைத்திருந்து திரும்பக் கொடுத்தேன். அப்புறம் அந்தக் கடிதம் ஆபீசர் கையெழுத்துப்போட்டு தபாலில் சேர இரண்டு நாள் ஆயிற்று. ஆக மொத்தம் முன்பு ஒரே நாளில் பதிலளித்த கடிதத்திற்கு, புது ஆர்டர் போட்டபிறகு 18 நாட்கள் கழித்து பதில் போனது. ஆனால் இதுதான் சரியான அரசு ஆபீஸ் நடைமுறை ஆகும். யாருக்கு என்ன வந்தது? அரசு அலுவலகங்களில் ரூல்ஸை அனுசரித்தால் போதும்.

இதைத்தான் சிவப்பு நாடா தர்பார் என்று சொல்வார்கள்.
 

வியாழன், 10 ஜூன், 2010

நிலக்கடலை ஆராய்ச்சிப்பண்ணை, ஆனைமலை. பாகம் - 2 (கவர்ன்மென்ட் ரூல்ஸ்)

 
சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற பழமொழி சர்க்கார் பண்ணைகளுக்கு மிகவும் பொருத்தம். ஒரு நாள் வேலை செய்தால் மூன்று நாளைக்கு கணக்கு எழுத வேண்டும். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

முதலில் பண்ணையில் மறு நாளைக்கு என்னென்ன வேலைகள் செய்யப் போகிறோம் என்று ஒரு ரிஜிஸ்டரில் எழுதி அதில் மேலதிகாரியின் ஒப்புதல் வாங்க வேண்டும். இதற்கு Forecast Register என்று பெயர். அடுத்த நாள் காலையில் பண்ணை ஆரம்பிக்கும் நேரத்தில் மஸ்டர் எடுக்கவேண்டும். எல்லோருக்கும் வேலைகளைச் சொல்லி அனுப்பி விட்டு இன்னொரு ரிஜிஸ்டரில் இன்று வந்திருக்கும் ஆட்கள் இன்னின்ன பிளாட்டுகளில் இன்னின்ன வேலைகள் செய்கிறார்கள் என்று எழுதி மேலதிகாரியின் ஒப்புதல் வாங்கவேண்டும். இதற்கு Programme Register பெயர். பிற்பகல் வேலை ஆரம்பிக்கு முன் இன்னொரு முறை மஸ்டர் எடுக்க வேண்டும். பின்பு அன்றைய வேலைகள் எல்லாம் முடிந்தபின் இன்று இன்னின்ன வேலைகள் நடந்து முடிந்தன என்று ஒரு ரிஜிஸ்டரில் பதிந்து அதிகாரியின் பார்வைக்கு அனுப்ப வேண்டும். இந்த ரிஜிஸ்டருக்கு Daily Memorandum Sheet (DMS) என்று பெயர்.

இந்த ரிஜிஸ்டரில் அன்றைய தினம் மஸ்டரில் கண்டுள்ள அனைத்து ஆட்களுக்கும் வேலை காட்டவேண்டும். இன்னின்ன பிளாட்டுகளில் இன்னின்ன வேலைகளுக்காக இவ்வளவு பேர் வேலை செய்தார்கள், இவ்வளவு வேலை முடிந்தது என்ற விவரங்கள் அதில் குறிப்பிட வேண்டும். இந்தக்கணக்கு சரியாக இல்லையென்றால் கணக்கில் விட்டுப்போன ஆளுக்கு மேனேஜர் ரெகவரி கட்டவேண்டும். ஏதாவது விதையோ, பூச்சி மருந்தோ கொடுத்திருந்தால் இந்த பிளாட்டில் விதைக்க இவ்வளவு விதை கொடுக்கப்பட்டுள்ளது, அல்லது இன்ன பிளாட்டில் மருந்து அடிக்க இவ்வளவு பூச்சி மருந்து கொடுக்கப்பட்டது என்ற விவரம் எழுத வேண்டும். பண்ணையிலிருந்து ஏதாவது அறுவடை ஆகி வந்திருந்தால் இன்ன பிளாட்டிலிருந்து இன்ன மகசூல் அறுவடையாகி வந்திருக்கிறது என்று அதில் குறிக்க வேண்டும். அந்த வேலைளைச் செய்ய ஆட்களை உபயோகப்படுத்தின விவரம் இருக்கவேண்டும். உதாரணமாக ஒரு பிளாட்டில் பூச்சி மருந்து அடித்ததாக பூச்சி மருந்து ஸ்டாக் புக்கில் கழித்துவிட்டு, DMS – ல் அந்த வேலை செய்ததற்கான ஆட்கள் விபரம் காட்டாவிட்டால் அது பெரும் தவறு. ஆட்கள் இல்லாமல் அந்த பூச்சி மருந்தை எப்படி அடித்திருக்க முடியும்? அதை திருடி விட்டீர்களா? என்னதான் செய்தீர்கள்? அந்த மருந்து சரியானபடி உபயோகம் செய்யப்படாததால் அதற்குண்டான பணத்தைக் கட்டு என்று ஆடிட்காரன் எழுதிவிடுவான். பணத்தைக் கட்டுவதைத் தவிர வேறு வழியே கிடையாது.

பண்ணையிலிருந்து என்ன பொருள் வெளியில் போனாலும், உள்ளே வந்தாலும் இந்த ரிஜிஸ்டரில் குறிப்பிட்டாக வேண்டும். யாராவது விசிட்டர்ஸ் வந்தாலும் குறிப்பிட வேண்டும். ஆக மொத்தம் பண்ணையில் நடக்கும் எல்லா நடவடிக்கைகளும் இந்த ரிஜிஸ்டரில் பதிவாக வேண்டும். இந்த ரிஜிஸ்டர்கள் வேலை நாட்கள் அனைத்திலும் எழுத வேண்டும். லீவு நாட்களிலும் இன்று விடுமுறை என்று அந்த தேதியைப்போட்டு குறிப்பிட வேண்டும். என்ன, தலை சுற்றுகிறதா, இதற்கே இப்படி என்றால், இன்னும் இருக்கிறது.

ஸ்டாக் ரிஜிஸ்டர்கள் என்று ஒரு குரூப் உண்டு. எல்லாப்பெயர்களையும் சொன்னால் மயக்கம் வந்து விடும்.
1.   Dead Stock Register
2.   Temporary Dead Stock Register
3.   Farm Produce register
4.   Stationary Register
5.   Stamp Register
6.   Furniture Stock Register

இவ்வளவுதான் ஞாபகத்திற்கு வருகிறது. இதில் பண்ணைக்கு (ஆபீஸ உட்பட) வாங்கும் சகல பொருட்களும் பதிவாக வேண்டும். இதில் பதிவாவதற்கு முன்னால் DMS – ல் பதிவாகி இருக்கவேண்டும். எந்தப் பொருளை உபயோகத்திற்கு எடுத்தாலும் இதில் பதிய வேண்டும்.

இத்தனை வேலைகளை வைத்துக்கொண்டு பண்ணை வேலைகளையும் மேற்பார்வை பார்க்கவேண்டும். ஆராய்ச்சியும் பண்ணவேண்டும். எப்படி செய்தேன் என்று இப்போது யோசித்தால் மலைப்பாக இருக்கிறது.

வேட்டைக்காரன்புதூர் கவுண்டர்களின் ஜம்பம் பிரசித்தி பெற்றது. இதில் நான் எப்படி சிக்கினேன் என்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?