செவ்வாய், 11 ஜனவரி, 2011

சிவப்பு நாடா தர்பார்


இன்றைய அரசு அலுவலக நடைமுறைகள், நமக்கு, நம்மை ஆண்ட ஆங்கிலேயத் துரைமார்கள் விட்டுச்சென்றவை. நாம் அரசியல் ரீதியாகச் சுதந்திரம் வாங்கிவிட்டதாகப் பெருமை கொள்ளலாம். ஆனால் நாம் நம் அலுவலக நடைமுறைகளில் இன்னமும் ஆங்கிலேயத் துரைமார்களின் அடிவருடிகளாகத்தான் இருக்கிறோம்.

வெகு நாட்களுக்கு முன்பு ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம். அரசு அலுவலகங்களில் ஒரு கடிதம் பத்திரமாக இருக்கிறதா என்று காட்டும் அக்கறையில் பத்தில் ஒரு பங்கு கூட அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதில் காட்டமாட்டார்கள் என்று அதில் கூறியிருந்தது. இதற்கு என்ன காரணம் என்றால் அந்தக் கடிதம் பத்திரமாக இருந்தால் அதில் கூறப்பட்டுள்ள விஷயத்தைப் பற்றி எப்போது வேண்டுமானாலும் செயல் ஆரம்பித்துக் கொள்ளலாம். ஆனால் கடிதம் இல்லாவிட்டால் என்ன செய்யமுடியும்

இந்தக் காரணத்தினால் அரசு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களை முறைப்படுத்தி அந்தந்த பிரிவுகளுக்கு அனுப்ப ஏகப்பட்ட விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்படி விதிகளின்படி நகரும் கடிதங்கள், அரசு அலுவலகங்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் போவதற்கு பல நாட்கள் ஆகலாம். இதை ஒரு மேஜையில் இருந்து இன்னொரு மேஜைக்குப் போவது என்று வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் அரசு அலுவலகங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி மேஜை இருக்கும். எப்படி மேஜைக்கு உயிர் இல்லையோ அது போல அந்த மேஜையில் உட்கார்ந்து வேலை செய்யும் மனிதர்களுக்கும் உயிர் அதாவது மனசு கிடையாது

அரசு அலுவலகங்களில் கடிதங்கள், மற்ற காகிதங்களை ஒரு பழுப்பு அட்டைக் காகிதத்தில் (பள்ளிப் புத்தகங்களுக்கு அட்டை போடுவோமே, அந்த மாதிரி காகிதத்தில்) ஒரு டேக்கில் (Tag) கோர்த்து வைத்திருப்பார்கள். இதை பைஃல் என்று சொல்வார்கள். பைஃல்கள் ஒரு டேபிளிலிருந்து இன்னொரு டேபிளுக்குப் போகும்போது தொய்ந்து விடும். இதைத் தவிர்ப்பதற்காக ஒரு கெட்டி அட்டையை பைஃல் சைசுக்கு வெட்டி அதில் ஒரு நாடா கோர்த்திருப்பார்கள். இந்த அட்டைகளில் பைஃல்களைக் கட்டித்தான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும். இதில் உள்ள நாடாக்கள் பொதுவாக சிவப்பு கலரில்தான் இருக்கும். அதனால்தான் அரசு அலுவலக நடவடிக்கைகளை சிவப்பு நாடா தர்பார்என்று குறிப்பிடுவது வழக்கம்.   

ஒரு அலுவலகத்திற்கு வரும் கடிதம், அதன்பேரில் நடவடிக்கை எடுக்கவேண்டிய நபருக்குப் போய் சேருவதற்கு குறைந்தது மூன்று நாட்கள் ஆகும். அவரிடம் இந்த மாதிரி ஒரு 10 அல்லது 15 கடிதங்கள் தினமும் வரும். அவைகளின் முக்கியத்துவத்தை அனுமானித்து அவர் ஒவ்வொன்றாக செயல் எடுப்பார். எப்படியும் ஒரு 5 கடிதங்களுக்கு அவரால் செயல் எடுக்கமுடியாமல் போகும். சரி, நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று அதை மேஜையின் ஒரு ஓரத்தில் வைத்து விட்டுப்போவார். அடுத்த நாள் திரும்பவும் 10/15 கடிதங்கள் வரும். அதிலும் ஒரு 5 கடிதங்கள் நின்றுவிடும். இப்படியே தொடர்ந்து ஒவ்வொருவர் மேஜையிலும் நூற்றுக்கணக்கில் பெண்டிங்க் கடிதங்கள் தேங்கிவிடும்.

அவைகளில் பெரும்பாலான கடிதங்களுக்கு செயல் எடுக்க வேண்டிய அவசியமில்லாமலே போகும். அப்படி செயல் எடுக்கவேண்டிய கடிதங்கள் ஏதாவது இருந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட நபர் வந்து விசாரிக்கும்போதுதான் அந்தக் கடிதத்தைத் தேடி எடுப்பார்கள். அரசு அலுவலர்களுக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகம். அந்த நூற்றுக்கணக்கான கடிதங்களில் வந்த நபரின் கடிதத்தை நொடியில் எடுத்து விடுவார். அந்த நபர் நடந்துகொள்ளும் முறையைப் (?) பொறுத்து அந்தக் கடிதத்திற்கு செயல் எடுக்கப்படும்

எல்லா அலுவலகங்களிலும் அலுவலக உதவியாளர் என்று ஒருவர் இருப்பார். அந்தக் காலத்தில் இவருக்கு பியூன் என்று பெயர். இந்தப் பெயர் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்று போராடி பெயர் மாற்றம் செய்தார்கள். அவருக்கு எந்தக் கடிதம் யாரிடம் பெண்டிங்காக இருக்கிறது என்ற விவரம் முழுவதும் அத்துபடி. ஒவ்வொரு அலுவலகத்திலும் இவர்தான் மிகவும் முக்கியமானவர். அங்கு என்ன காரியம் ஆகவேண்டுமென்றாலும் இவரிடம் சொன்னால் போதும். தகுந்த மாதிரி கவனித்தால் இவரே அந்த காரியத்தை முடித்துக்கொடுத்து விடுவார் அல்லது அதற்கான சரியான வழிமுறைகளைச் சொல்லுவார். இவருக்குத் தெரியாத ரகசியம் அந்த அலுவலகத்தில் எதுவும் இருக்காது.

இந்தக் கடிதங்களை இவ்வாறு ஒவ்வொருவரும் தாமதம் செய்வார்கள் என்பதற்காக அதைத் தடுக்க ஒரு விதி ஏற்படுத்தினார்கள். அதாவது யாரும் எந்தக் கடிதத்தையும் மூன்று நாளைக்கு மேல் செயல் எடுக்காமல் தங்களிடம் வைத்துக்கொள்ளக்கூடாது என்று ஒரு விதி. நான் முதன்முதலில் வேலை பார்த்த அலுவலகத்தில் இந்த விதி எப்படி வேலை செய்தது என்று பார்க்கலாமா?

அது ஒரு மிகச்சிறிய அலுவலகம். ஒரு ஆபீசர், இரண்டு டெக்னிகல் அசிஸ்டன்ட்ஸ், ஒரு டைப்பிஸ்ட், இரண்டு பியூன்கள், மற்றும் சிலர். அந்த ஆபீசுக்கு ஏதாவது கடிதம் வந்தால் அதை ஆபீசர் பிரித்துப் பார்த்துவிட்டு ஏதாவது செயல் எடுக்கவேண்டிய கடிதம் இருந்தால் அதை நேராக என்னிடம் கொடுக்கச் சொல்லி பியூனிடம் கொடுப்பார். பியூன் என்னிடம் கொடுப்பார். நான் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, அதற்கு என்ன பதில் எழுத வேண்டுமோ அதை எழுதி பியூனிடம் கொடுத்தால் அவன் அதை ஆபீசர் டேபிளில் வைத்து விடுவார். (ஆபீசரை அவசியமில்லாமல் நேரில் சென்று பார்ப்பது அநாகரிகம்).

அந்தக் கடிதத்தை ஆபீசர் பார்த்து அப்ரூவ் செய்ததும், டைப்பிஸ்ட்டிடம் போகும். அவர் அதை டைப் செய்து என்னுடைய பார்வைக்கு அனுப்புவார். நான் அதை சரி பார்த்து ஆபீசருக்கு அனுப்பினால் அவர் அதில் கையெழுத்துப் போட்டு திரும்பவும் டைப்பிஸ்ட்டிற்குப் போகும். அவர் அதை கவரில் போட்டு யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு தபாலில் அனுப்பி விடுவார். இந்த வேலையெல்லாம் ஒரு நாளில் முடிந்துவிடும்.

ஒரு நாள் அந்த ஆபீசருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஒரு சர்குலர் அனுப்பினார். அதில் என்ன எழுதியிருந்தது என்றால் - இனி மேற்கொண்டு இந்த ஆபீசில் யாரும் எந்தப் பேப்பரையும் மூன்று நாட்களுக்கு மேல் செயல் எடுக்காமல் வைத்திருக்கக் கூடாது. அப்படி யாராவது வைத்திருந்தால் அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இத்தியாதி, இத்தியாதி. எனக்கு ஒன்றும் புரியவில்லை. மேலும் அவர் என்னைப் பார்த்தால் முறைத்துக்கொண்டு வேறு இருந்தார். சரி, ஆபீஸ் ஆர்டர் என்றால் ஆர்டர்தான், கடைப்பிடித்துவிடுவோம் என்று முடிவு செய்தேன்.

அது முதல் கடிதங்கள் வந்தால் அவை நேரே டைப்பிஸ்ட்டுக்கே கொடுக்கப்பட்டன. அவர் அவைகளை எல்லாம் ஒரு ரிஜிஸ்டரில் பதிவு செய்து, யார் யாருக்கு கொடுக்கவேண்டுமோ அவர்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டு, பின்பே அந்த கடிதங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். ஓஹோ ஏதோ வெடிக்கப்போகிறது என்று நானும் சர்வ ஜாக்கிரதையாய் இருக்க ஆரம்பித்தேன். கையெழுத்து போடும்போதே தேதியுடன் போட்டேன். நானும் ஒரு ரிஜிஸ்டர் தயார் செய்து வைத்துக்கொண்டேன். திரும்பக் கொடுக்கும்போது கையெழுத்து வாங்கவேண்டுமல்லவா?


அரசு அலுவலங்களில் நடைமுறை என்னவென்றால், தலைமை ஆபீசர் தவிர வேறு யாரும் தனிப்பட்ட முடிவுகள் எடுக்கக் கூடாது. ஒரு கடிதத்திற்கு பதில் எழுதுவதாக இருந்தால், இன்னொரு முழுதாள் எடுத்துக்கொண்டு அதில், “இந்தக் கடிதத்தில் இன்னார், இன்ன விவரம் கேட்டிருக்கிறார், அந்த விபரம் இந்த ஆபீசில் இல்லை, வேறு (ஏதாவது ஒரு ஆபீஸ் பெயரைச்சொல்லி) ஆபீஸில் இருக்கலாம், என்ன செய்வது?” என்று எழுதி அந்தக்காகிதத்தை முதல் கடிதத்துடன் சேர்த்து ஆபீசரின் உத்திரவுக்காக என்று எழுதி ஆபீசருக்கு அனுப்பவேண்டும். இதற்கு நோட் பைஃல் என்று சொல்வார்கள். நானும் அதேமாதிரி செய்து மூன்றாவது நாள் என் ரிஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிவிட்டு, டைப்பிஸ்ட்டிடம் கொடுத்தேன்.  


அவர் அதை ஆபீசர் டேபிளில் வைத்தார். ஆபீசர் அந்த பைலில் எஸ்என்று எழுதி திரும்பவும் எனக்கு பழய மாதிரியே வந்தது. நானும் உடனே ஒரு பதில் எழுதி வைத்திருந்து, மூன்றாவது நாள் திரும்பக் கொடுத்தேன். அந்த லெட்டர் மறுநாள் ஆபீசர் கையெழுத்து போட்டு டைப்பிஸ்ட்டிடம் வந்து அவர் அதை டைப் அடித்து மூன்று நாள் கழித்து என்னிடம் வந்தது. நானும் அதை என்னிடம் மூன்று நாள் வைத்திருந்து திரும்பக் கொடுத்தேன். அப்புறம் அந்தக் கடிதம் ஆபீசர் கையெழுத்துப்போட்டு தபாலில் சேர இரண்டு நாள் ஆயிற்று. ஆக மொத்தம் முன்பு ஒரே நாளில் பதிலளித்த கடிதத்திற்கு, புது ஆர்டர் போட்டபிறகு 18 நாட்கள் கழித்து பதில் போனது. ஆனால் இதுதான் சரியான அரசு ஆபீஸ் நடைமுறை ஆகும். யாருக்கு என்ன வந்தது? அரசு அலுவலகங்களில் ரூல்ஸை அனுசரித்தால் போதும்.

இதைத்தான் சிவப்பு நாடா தர்பார் என்று சொல்வார்கள்.