ஒரே மாதிரியான பதிவுகள் சலிப்புத்தட்டும். அதற்காக நான் சினிமா விமரிசனம் எழுத முடியுமா? ஆகவே ஆன்மீகத்தில் கொஞ்சம் நம் சரக்கை விற்கலாமென்ற முடிவின் பயனே இந்தப் பதிவு.
நான் யார்?
இதைத் தெரிந்து கொண்டால் முக்தியடையலாம் என்று காலம் காலமாக ஆன்மீக குருமார்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நானும் முக்தியடையலாம் என்று ஆசைப்பட்டு இந்த சோதனையில் இறங்கினேன்.
கேள்வி: நீ யார்?
பதில்: நான் கந்தசாமி.
கே: அது உன் பெயர். நீ யார்?
ப: நான் ஒரு மனிதன்.
கே: அது உன் உருவத்தின் பெயர். அது நீயல்ல.
ப: அப்படியானால் நான் யார் என்று நீங்களே சொல்லுங்கள்.
கே: இல்லை. நீதான் உன்னை அறிய வேண்டும்.
ப: எனக்குத்தான் தெரியவில்லையே ஸவாமி, நீங்களே சொல்லப்படாதா?
கே: நீயாகத் தெரிந்து கொண்டால்தான் உனக்கு ஞானம் வரும்.
ப: என்னால் முடியவில்லையே?
கே: உன்னால் முடியும். தீவிரமாக முயற்சி செய்.
ப: ஆகட்டும், முயற்சிக்கிறேன், ஸ்வாமி.
இப்படியாகப் பேசிப் பேசியே நம் கழுத்தை அறுப்பவர்கள்தான் ஆன்மீகக் குருக்கள். ரமண மகரிஷி என்பவரின் உபதேசங்கள் எல்லாம் இப்படியே இருக்கும். நானும் என்னுடைய சிறு வயது முதற்கொண்டு இந்த ஆன்மீகப் பிரசங்கங்களைக் கேட்டுக்கொண்டு வருகிறேன். இந்தக் கேள்வி ஞானத்தை வைத்துக்கொண்டு என்னுடைய ஆராய்ச்சி மூளையைப் பயன்படுத்திக் கண்டு பிடித்தது என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் ஆத்மாவின் ஸ்வரூபம். அதனால் எல்லோரும் ஒருவரை ஒருவர் வித்தியாசப்படுத்திப் பார்க்கக் கூடாது.
ஆஹா, என்ன ஒரு பரோபகாரத் தத்துவம் என்று நானும் முதலில் மயங்கி விட்டேன். பிறகுதான் உண்மையைப் புரிந்து கொண்டேன். எல்லோரும் சமம் என்பது உண்மைதான். ஆனால் அதில் சில வரைமுறைகள் இருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன். என்னவென்றால் குருவிற்கு அதிக காணிக்கை கொடுப்பவர்கள் அவர்களுக்குள் சமம். ஆனால் குறைவாக காணிக்கை கொடுப்பவர்களுக்கும் அவர்களுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. குருவே அவர்களை பெயர் சொல்லிக் கூப்பிடுவார். அருகில் அமர்த்திக்கொள்வார். மற்றவர்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தால் கூட ஏறெடுத்தும் பார்க்கமாட்டார். இன்னும் பல காரணங்களினால் மக்கள் வேறுபடுகிறார்கள். அவைகளை விவரித்தால் பதிவு முடிவு பெறாது.
குரு என்பவர் சாதாரண லௌகீக விவகாரங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்களும் காவி கட்டிய சம்சாரிகள்தான் என்று புரிந்து கொண்டேன். உண்மையான துறவிகள் இருக்கலாம். அவர்களை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.