இலவச அரிசியை வாங்கி, இலவச வெட்கிரைண்டரில் அரைத்து, இலவச காஸ் அடுப்பில் இட்லியாக்கி, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து, இலவச கான்கிரீட் வீட்டில் உட்கார்ந்து, இலவச மின் விசிறியை சுழலவிட்டபடி சாப்பிட்டு, இலவச டி.வி.யில் படம் பார்த்து மகிழ்ந்தால் வாழ்வு சுகமாகத்தானே இருக்கும். அப்படி உட்கார்ந்து சாப்பிட்டால் வரும் பல்வேறு இலவச நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இருக்கவே இருக்கிறது இலவச காப்பீட்டுத் திட்டம். வயதாகி ஓய்ந்துபோனால் ஊர் சென்றுவர இலவச பஸ் வசதியும், மாதாமாதம் இலவசமாகப் பணமும் தருவார்கள். மக்களைப் பெறப்போகும் கர்ப்பிணிகளுக்கு அரசாங்கமே ஆயிரக்கணக்கான ரூபாய்களை அள்ளித் தரப்போகிறது. அதுவும் பெண் குழந்தையாயின் அவள் வளர்ந்த பின் திருமணம் செய்யத் தங்கத் தாலியும் பணமும் கிடைக்கப்போகிறது. நல்ல வேளை மாப்பிள்ளையும் தேடிக் கொடுக்கப்படும் என்று கூறவில்லை! எனவே குடும்பத்துக்காகவோ, எதிர்காலத்துக்காகவோ, நாட்டுக்காகவோ எதற்காக உழைக்க வேண்டும்? அதனால் இந்த நாடும் மக்களும் எப்படிப் போனால் என்ன? என்ற நிலைமைக்கு மக்கள் வந்து விட்டார்கள் போலிருக்கிறது; அல்லது அந்த நிலையை இருபெரும் கட்சிகளும் உருவாக்கிவிட்டன என்றுதான் கூற வேண்டும்.