சீர்கள் செய்வதற்கு சீர்க்காரி வேண்டுமென்று போன பதிவிலசொல்லீர்ந்தனுங்களா. அது யாருன்னா, முழுக்காதங்கூட்டத்துபொம்பளயா இருக்கோணும். தன் குழந்தைகளுக்கு காது குத்திமுழுக்காத சீர், எழுதிங்க சீர் இந்த ரெண்டும்பண்ணீருக்கோணும். கட்டுக்களுத்தியா இருக்கோணும். சிலகல்யாணங்களுக்கு யாராவது இன்னோரு சீர்க்காரி கூட சேர்ந்துசீர் பண்ணி பழகியிருக்கோணும். அப்படிஇருக்கிறவங்களைத்தான் சீர்க்காரின்னு சொல்லுவாங்க.கல்யாணத்துல அவங்கதான் எல்லாச் சீர்களையும்பண்ணோணுமுங்க. நம்ம ஊட்டுப்பையனும் (நாசிவன்)தொணைக்கு இருந்து இப்பிடி இப்பிடி செய்யுங்கன்னு வளிசொல்லுவானுங்க.
ஈரோட்டுக்கு கெளக்கே வளிமொறை வேற மாதிரிங்க. அங்க“அருமைக்காரங்க” ன்னு இருப்பாங்க. அவங்கதான் இந்தசீரெல்லாம் செய்வாங்க. கோயமுத்தூர்ல முகூர்த்தத்துக்குஅய்யரத்தான் வச்சுக்குவாங்க. பொண்ணூட்டு அய்யருதான்முகூர்த்தத்துக்கு வருவாருங்க. சேலம் பக்கமெல்லாம் இந்தஅருமைக்காரங்களேதான் முகூர்த்த சமயத்துல தாலியஎடுத்துக்கொடுத்து மாப்பிள்ள தாலி கட்டுவாருங்க. ஹோமம்வளர்த்தறது, மந்தரம் சொல்றது எல்லாம் இல்லீங்க. முந்திகாலத்துல எல்லாம் இந்த அருமைக்காரங்க சொந்தக்காரங்கள்லஇருப்பாங்க. அவங்க இந்தக்காரியங்களையெல்லாம் ஒறவுமொறைக்காக சும்மாதான் செய்வாங்க. காசு கேக்கறதயெல்லாம்கேவலமா நெனைப்பாங்க. ஆனா, இப்பெல்லாம் இந்தஅருமைக்காரங்க பணம் ஆயரக்கணக்குல கேக்கறதாசொல்றாங்க. அதோட அவங்க பண்ற ரவுசு இருக்குதுங்களே,அது பொறுக்கமுடியாமெ இருக்கும். காலம் மாறுதுங்க. ஆனாகோயமுத்தூர்ல சீரு பண்றவங்க யாரும் இந்த மாதிரிகாசெல்லாம் கேக்க மாட்டாங்க.
என்னென்ன சீரெல்லாம் செய்யோணுமுன்னு சொல்லீட்டுவாரனுங்க, கொஞ்சம் குனிப்பா பாத்துக்கோணுங்க,தூங்கிப்போயிடாதீங்க. மொதல்ல மாப்பிள்ளக்கி உருமாலைகட்ற சீருங்க. இந்த சீரு தாய் மாமன்தான் செய்யோணுமுங்க.பளய காலத்துல மாப்பிள்ள பையனை மாமன் அவங்கஊட்டுக்கே கூட்டிட்டுப்பாயித்தான் இந்த சீரைச்செய்வாங்க.இப்பெல்லாம் கல்யாண ஊட்டுலயே இந்தச்சீரை செஞ்சுடறாங்க.
மாப்பிள்ளப் பையனைக் குளிப்பாட்டி புதுத் துணி குடுத்துகட்டுக்கச்சொல்லி, ஊட்டுக்குள்ளு ஆஜாரத்துல ஒருசேரைப்போட்டு பையனை உக்கார வைப்பாங்க. நல்ல பெரியதுண்டு உருமாலை கட்றதுக்குன்னு வாங்கியிருப்பாங்க. அந்ததுண்டுல ஒரு மூலைல ஒரு ரூபாய் காசெ முடிஞ்சுஉடுவாங்க. மாமன்காரன் அதை எடுத்து பையன் தலைலஉருமாலை (முண்டாசு) கட்டி உடுவாருங்க. அந்த உருமாலைலஒரு மொழம் மல்லிகைப்பூவ சொருகி உடுவாங்க. அப்பறம்நெத்திக்கு திண்ணூறு பூசி, சந்தனப்பொட்டு வச்சு, செகப்புபொட்டும் வைப்பாங்க. அப்பறம் மாப்பிள்ளைப்பையன் மாமன்கால்ல உளுந்து ஆசீர்வாதம் வாங்கீப்பானுங்க. அப்பமாமன்மாரன் அவஞ்சக்திக்கு தகுந்தாமாதிரி பணமோஇல்லேன்னா ஏதாச்சும் மோதிரமோ, சங்கிலியோபோடுவாருங்க. அப்பறம் ஏதாச்சும் கோயில் பக்கத்துல இருந்தாஅங்கெ போயி சாமி கும்பிட்டுட்டு வருவாங்க. இல்லைன்னாஊட்டுல இருக்கற சாமிய கும்பிட்டுக்குவாங்க. இல்லைன்னாஒவ்வொருத்தரு பையன் உக்காந்திருக்கற சேருக்குமுன்னாலயே, ஒரு புள்ளாரைப் புடிச்சு வச்சு அங்கயே சாமிகும்பிட்டுக்குவாங்க. இதுதாங்க உருமாலைக்கட்டு சீருங்க.
அப்பறம் கூப்பிட்டு இருக்கற ஒரைம்பரக்காரங்க எல்லாரும்உக்காந்து விருந்து சாப்புட்டுட்டு பையனைக் கூப்பிட்டுட்டுப்போய் அவன் ஊட்டுல உட்டுட்டு வருவாங்க.
இந்த சமயத்துல கல்யாண ஊட்டுல வேலைகள் எல்லாம்மும்முரமா நடந்துக்கிட்டு இருக்குமுங்க. பந்தல் போட்டு பச்சஓலையெல்லாம் காட்டிடுவாங்க. அந்தப்பந்தல் ஓரத்திலகொசவன் சின்னசின்னதா பொம்மை செஞ்சு வச்சிருப்பானுங்க,அதைக்கட்டி உடுவானுங்க. பண்ணயத்து ஆளுங்கவாசலுக்கெல்லாம் சாணி போட்டு வளிச்சு வுடுவாங்க. அந்தஊரு ஆசாரி வந்து மர அகப்பை சேத்துவானுங்க. எத்தன பேருமர அகப்பை பாத்திருப்பீங்கன்னு தெரியலைங்க. அப்பெல்லாம்இப்பத்த மாதிரி பெரிய கரண்டி எல்லாம் கெடயாதுங்க.தேங்காய்த்தொட்டியில சைடுல சின்னதா ரெண்டு ஓட்டைபோட்டு அதில நீளமா ஒரு மூங்கக்குச்சிய சொருகுனா,அதுதான் மர அகப்பைங்க. கொளம்பு, மொளசாறுவைக்கறப்பவும், எடுத்து ஊத்தறப்பவும் இந்த மரஅகப்பையைத்தான் உபயோகிப்பாங்க. இந்த வேலைகள்எல்லாம் கனஜோரா நடந்துட்டு இருக்குமுங்க.
மறுச்சு நாளு அதாவது கல்யாணத்தண்ணிக்கு பந்தல்லவாளைமரம், எளனி, தேங்காய்ப்பாளை எல்லாம் மொகப்புலகட்டுவாங்க. அக்கம் பக்கத்து ஊட்டுல இருந்துசாமான்செட்டுகள் இருக்கறதெயெல்லாம் கொண்டுவந்துருவாங்க. காய்கறியெல்லாம் சொந்தக்காரங்க கொண்டுவந்துருவாங்க. முகூர்த்தத்திற்கு முந்தின நாள் பொளுதோடஇருந்து சீர்களெல்லாம் பண்ணுவாங்க. அந்தப்பொளுதுக்குகல்யாணம்னு எங்கூர்ல சொல்லுவாங்க. மறுச்சு நாளு தாலிகட்டறத முகூர்த்தம்னு சொல்றதுங்க. எல்லாரும் நேரத்தோடகல்யாணத்துக்கு வந்துடுங்க.
தொடரும்….