பதிவுலகத்தில் எழுதும் அனைவரும் பதிவர்களே. பதிவுலகத்தின்
நெளிவு சுளிவுகளை அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம் அல்லது அவர்களின் பதிவுலகப் பயணத்தில்
அறிந்து கொள்வார்கள். ஆகவே பதிவர்களுக்கு அறிவுரை கூற எனக்கு அருகதை இல்லை. தேவையும்
இல்லை. ஆனாலும் நான் இந்தப் பதிவை எழுதக் காரணம் என்னவென்றால் நான் கூறப் போகும் குறிப்புகள்
நான் என்னுடைய அனுபவத்தில் உணர்ந்தவை. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்.
1. பதிவுகளை
எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிமையாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அவை சீக்கிரம் தரவிறங்கும்.
பார்வையாளர்களுக்கு பதிவுகளுக்காக அதிக நேரம் காத்திருக்க பொறுமை இருக்காது. வேறு தளத்திற்கு
சென்று விடுவார்கள்.
2. பதிவுகளின்
எழுத்துக்கள் பெரிதாகவும், வரிகளுக்கிடையில் உள்ள இடைவெளி போதுமானதாகவும் இருக்கட்டும்.
இதை மிக எளிதாக செயல்படுத்தலாம். Edit Template
சென்று அதில் Line height 1.2 என்று இருப்பதை 2.0 என்று மாற்றவும். அதே போல் Font size 110% என்று இருப்பதை 120 அல்லது 130 என்று மாற்றவும்.
தவிர வெள்ளை பின்புலத்தில் கருப்பு எழுத்துகள்தான் படிப்பதற்கு மிகவும் எளிதானது.
3. பதிவுகளின்
தலைப்பைப் பார்த்துத்தான் பார்வையாளர்கள் பதிவுக்குள்ளே வருகிறார்கள். ஆகையால் தலைப்பு
கவர்ச்சியாக இருப்பது அவசியம். பூக்கடைக்கும் விளம்பரம் தேவைப்படும் காலம் இது.
4. எல்லோரும்
தங்கள் பதிவுகளை அதிகம் பேர் படிக்கவேண்டும் என்கிற ஆவலுடன்தான் எழுதுகிறார்கள். அப்படி
எழுதப்படும் பதிவில் ஏதாவது ஒரு உபயோகமான செய்தி அல்லது பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு
விஷயம் இருக்கவேண்டும்.
5. தமிழில்
எழுதும் அனைவரும் தமிழை பிழையில்லாமல் எழுத முயல வேண்டும். ற,ர வின் உபயோகம், ல,ள,ழ இவைகளின் வித்தியாசம், சந்தி விதிகள், ஆகியவைகளை
உணர்ந்து பயன் படுத்தினால் உங்கள் பதிவின் தரம் கூடும்.
6. பதிவுகளின்
எழுத்து நடை சரளமாக, எளிதில் புரிந்து கொள்ளும்படியாக இருக்கவேண்டும். பதிவை எழுதி முடித்தவுடன் ஒரு தடவைக்கு
இரு தடவை படித்துப் பாருங்கள். பிழைகளைக் களைய இது உதவும்.
7. பதிவுகள்
அதிக நீளமாக இருந்தால் படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும். இன்றுள்ள அவசர கதியில் பதிவுகளுக்காக
செலவிடப்படும் நேரத்தில் அதிக பதிவுகளைப் படிப்பதற்கே அனைவரும் விரும்புவர்.
8. போட்டோக்கள்
பதிவுகளுக்கு அழகு சேர்க்கின்றன என்பது முற்றும் உண்மை. அதற்காக அதிகப் போட்டோக்களை
சேர்த்தால் அனைத்து போட்டோக்களையும் முழுவதுமாக ரசிப்பது சிரமமாகி விடுகிறது.
9. பதிவர்கள்
தங்களுக்குப் பிடித்த தளங்களில் “பின்தொடர்பவர்கள்” ஆகிறார்கள். அவர்களுடைய Dash
Board ல் அந்த தளங்களின் பதிவுகள் தானாகவே தெரிகின்றன. ஆகவே தனியாக email அனுப்புவது
தேவையில்லை. Word Verification இருப்பது பெரும்பாலான சமயங்களில் பின்னூட்டமிடுபவர்களுக்கு
இடைஞ்சலாய் இருக்கிறது.
10. தங்கள்
பதிவுகளில் பின்னூட்டங்கள், ஹிட்ஸ்கள், முதலானவை அதிகரிக்கவேண்டும் என்று விரும்புபவர்கள்
அதற்குண்டான தளங்களுக்குச் சென்று அதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.
இப்பதிவைப் பார்வையிட்டதற்கு நன்றி.