பதிவுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மார்ச், 2016

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் !

                                                  Image result for பதிவர்கள்

ஒரு காலத்தில் (இப்பத்தானுங்க 2015 ல, அதாவது பத்து மாசத்துக்கு முன்னால) நான் இருந்த இருப்பன்ன? இன்றிருக்கும் இருப்பென்ன? நினைச்சுப் பாக்கவே ரொம்பவும் வேதனையாக இருக்கிறது.

 நான் ஒரு பதிவு போட்டா ஆயிரம் பேருக்குக் குறையாமப் பாப்பாங்களே.

31-5-15 அன்று நான் எழுதிய "அந்தக் காலத்து சினிமாத் தியேட்டர்கள்." என்ற பதிவிற்கு வந்த பார்வையாளர்கள் 1523 பேர்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் நான் எழுதியிருக்கும் "தேவலோக நகர்வலம்" என்ற பதிவிற்கு வந்திருக்கும் பார்வையாளர்கள் வெறும் 260 பேர்கள். இத்தனைக்கும் அந்தப் பதிவு நல்ல நகைச்சுவையான பதிவு.

பதிவர்கள் எல்லாம் எங்கே காணாமல் போனார்கள்?

ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் என் தமிழ்மணம் ரேங்க் 10 ல் இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் 260 பார்வையாளர்கள் மட்டுமே பார்த்திருக்கும் ஒரு தளம் பத்தாவது ரேங்கில் இருக்கிறது என்றால், நூறு, இருநூறு ரேங்கில் இருக்கும் தளங்களுக்கு எத்தனை பார்வையாளர்கள் வந்திருப்பார்கள்?

நான் நினைப்பது என்னவென்றால் இன்னும் ஓரிரு வருடங்களில் பதிவு எழுதுபவர்கள் என்னைப்போன்ற சில கிழடுகள் மட்டுமே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

புதன், 14 அக்டோபர், 2015

இரு பிரபல வலைப்பதிவர்களின் சந்திப்பு

                            Image result for திருச்ச மலைக்கோட்டை

புதுக்கோட்டை பதிவர் திருவிழாவிற்குச்  செல்வதென்று முடிவு செய்தவுடனேயே என்னுடைய பயணத்திட்டத்தில் திரு வை.கோபால கிருஷ்ணன் இடம் பிடித்து விட்டார். திருச்சியில் அவரை சந்தித்துவிட்டுப் பிறகு புதுக்கோட்டை செல்வதென்று முடிவு செய்து அவருக்கும் செய்தி அனுப்பினேன்.

உடனே அவரிடமிருந்து பதில் வந்தது. அந்த பதிலைப் பார்த்தவுடன்  "வாங்கோ, வாங்கோ, பேஷா வாங்கோ" என்கிற அழைப்புச் சத்தம் நேரில் கேட்கிற மாதிரியே இருந்தது. அவர் ஒரு பின்னூட்டப்போட்டி வைத்திருந்தது பதிவர்களுக்கு நினைவு இருக்கலாம். அந்தப் போட்டியை நான் நிறைவு செய்ததற்காக அவர் எனக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்பினார். ஆகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விடலாமே என்று திட்டமிட்டேன். அதற்குத் தகுந்த மாதிரி ரயில் டிக்கெட்டுகள் வாங்கினேன்.

திருச்சி ஜங்ஷனில் இறங்கியதுமே அவருக்குப் போன் செய்தேன். ஒன்றாம் நெம்பர் பஸ்சில் ஏறி மெயின்கார்டு கேட் வந்து இறங்குங்கள். நான் வந்து உங்களை "பிக்அப்" செய்துகொள்கிறேன் என்றார். அதே மாதிரி மெயின்கார்டு கேட்டில் இறங்கி ரோடை தாண்டியதுமே அங்கு காத்துக் கொண்டு இருந்தார். என்னை ஒரு ஆட்டோவில் ஏற்றி நேராக அவர் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் "மதுரா கபே" க்கு அழைத்துச் சென்றார்.




திரு வைகோவும் மதுரா கபே 
ஓட்டல் முதலாளி திரு ஸ்வாமிநாத அய்யரும்

அந்த ஓட்டலின் முதலாளி திரு.ஸ்வாமிநாதய்யர் தஞ்சாவூரிலிருந்து வெகு நாட்களுக்கு முன் இங்கு வந்து இந்த ஓட்டலை நடத்திக்கொண்டு இருக்கிறார், அவர் குடும்பம் முழுவதும் அங்கேயே குடியிருக்கிறார்கள். அனைத்து ஐட்டங்களையும் வீட்டில் செய்வது போலவே அவ்வளவு சுவையாகவும் சுத்தமாகவும் செய்கிறார்கள். தலை வாழை இலை போட்டு ஒவ்வொரு பதார்த்தத்தையும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுபவர்கள் திருப்தி அடையும் அளவிற்கு பரிமாறுகிறார்கள். சாப்பாடு "அன்லிமிடட்".

நான் சாப்பிட்ட அன்று பீட்ரூட் பொரியல், புடலங்காய் கூட்டு, கடாரங்காய் ஊறுகாய், அப்பளம், வடை,பாயசம், சாம்பார், மோர்க்குழம்பு, ரசம், தயிர், மோர் ஆகியவை பரிமாறப்பட்டன. அனைத்தும் மிகவும் சுவையாக இருந்தன. நான் வழக்கமாக சாப்பிடுவதைப்போல் இரண்டு மடங்கு சாப்பிட்டேன்.

சாப்பிட்ட பிறகு வைகோ அவர்களின் வீட்டிற்குப் போனோம். அங்கு அவர்கள் எனக்கு மாலை மரியாதைகள் செய்து திக்கு முக்காடச் செய்துவிட்டார். அத்தோடு அவர் வைத்திருந்த போட்டிக்கான பரிசையும் கொடுத்தார்.



இந்தப் பரிசைப் பற்றின தகவல்கள் தனிப்பதிவாக வரும்.


நான் வைகோ அவர்களுக்குச் செய்த பதில் மரியாதை

இவ்வறு பரிசு மழையில் மூச்சு முட்டிப்போன நிலையில் அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொள்கிறீர்களா என்று கேட்டவுடன் அவர் அறையில் படுத்துவிட்டேன். ஏசி அறை. பயணக் களைப்பு. பிறகு சொல்லா வேண்டும். ஒரு மணி நேரம் சோர்க்கத்திற்குப் போய்த் திரும்பினேன்.

எழுந்து முகம் கழுவி வந்து உட்கார்ந்ததும் சூடாக பஜ்ஜி, இன்னும் பல பலகாரங்கள் வந்து விட்டன. முடிந்தவரை அவைகளைச் சாப்பிட்டுவிட்டுப் பிறகு வந்த டிகிரி காப்பியைக் குடித்தேன். மணி மூன்றரை ஆகிவிட்டது. உடனே புறப்பட்டால்தான் புதுக்கோட்டை மாலைக்குள் போய்ச்சேர முடியும். அதனால் அவர்களிடம் பிரியா விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.

வைகோ அவர்களின் வீட்டிலிருந்து சத்திரம் பஸ் ஸ்டேண்ட் இரண்டு பர்லாங்க் இருக்கும். என்னை ஆட்டோவில் ஏற்றி அங்கு கொண்டு விடுகிறேன் என்று வைகோ அடம் பிடித்தார். ஐயா, எனக்கு வழி நன்றாகத்தெரியும், நான் பத்திரமாக நடந்து போய்விடுவேன் என்று பல முறை வற்புறுத்திக் கூறியதால் அரை மனதாக என்னைத் தனியாகப் போக விட்டார். அப்போதும் லிப்டில் என்னுடன் கீழே இறங்கி வந்து "பார்த்துப்போங்கோ, பார்த்துப்போங்கோ," என்று பல முறை பத்திரம் சொல்லி என்னை வழியனுப்பினார்.

சில அடிகள் எடுத்து வைத்தவுடன் என்னைக் கூப்பிட்டுக்கொண்டே பின்னால் வந்து விட்டார். என்னவென்றால் அவர் வீடு இருக்கும் வீதி முனையில் ஒரு கருப்பராயன் கோவில் சமீபத்தில் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள். அந்த கருப்பராயனையும் தரிசனம் செய்து விட்டுப் போங்கோ என்று ஒரு வேண்டுகோள். அப்படியே செய்து விட்டு சத்திரம் பஸ் ஸ்டேண்ட் போய்ச்சேர்ந்தேன். உடனே ஒரு டவுன் பஸ் திருச்சி மத்திய பஸ் ஸ்டேண்ட் செல்லப் புறப்பட்டுக்கொண்டு இருந்தது. அதில் ஏறி எந்த விதமான சிரமமும் இல்லாமல் திருச்சி மத்திய பஸ் ஸ்டேண்ட் போய்ச் சேர்ந்தேன்.

உடன் பிறந்தவர்கள் கூட இவ்வளவு பரிவுடன் ஒருவரை கவனிக்க மாட்டார்கள். அவ்வளவு பரிவுடனும் பாசத்துடனும் என்னை உபசரித்த திரு வைகோ அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. அவருக்கு என் நன்றியை பல முறை சொல்லிக்கொள்கிறேன்.

புதன், 25 ஏப்ரல், 2012

பதிவுகளில் எரிச்சலூட்டுபவை.


1. முகநூல் விளம்பரம்
நிறைய பதிவுகளில் இந்த முகநூல் விளம்பரம் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னால் வந்து நிற்கிறது. சின்னப் பசங்க அம்மா காலையே சுத்திச்சுத்தி வருவாங்களே அந்த மாதிரி. நாயை விட்டுகிற மாதிரி சூ, சூ என்றால் போகாமல் அப்படியே நிற்கிறது. பதிவை விட்டு ஓடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.


2. மேலும் படிக்க
பதிவுக்குள்ள போனமா, பதிவப் படிச்சமான்னு இருக்கணும். அதை உட்டுப்புட்டு மோர், தயிர், மேலும், இப்படீன்னு பல பதிவுகளில் போட்டிருக்கிறார்கள். அந்த மோரும் தயிரும் எங்கிருக்குதுன்னு கண்டுபிடிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போகுது.


3. கருப்பு பின்புலம்
வெள்ளையில் கருப்பு எழுத்துக்கள்தான் படிப்பதற்கு சுகம். சில பேர் கருப்பு பின்புலத்தில் வெள்ளை அல்லது வேறு கலர் எழுத்துகளை உபயோகிக்கிறார்கள். அந்த மாதிரி பதிவுகளைப் படிக்கவே முடிவதில்லை.


4. சிறிய எழுத்துகள்
எழுத்துகள் ஓரளவுக்கு படிக்கிற மாதிரி இருக்கணும். சின்ன சின்ன எழுத்துக்கள் படிப்பதற்கு கடினமாக இருக்கின்றன. அதைப் பெரிது பண்ணிப் படிக்க கம்ப்யூட்டரில் வசதி இருந்தாலும் அது ஒரு கூடுதல் வேலை. இதனால் பதிவைப் படிக்காமல் போவதற்கு வாய்ப்பு அதிகம்.


5. வரிகளுக்கிடையே போதிய இடைவெளி இல்லாமை.
ஒரு பக்கம் முழுவதும் இடைவெளி இல்லாமல் ஒரு பதிவு இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் போதிய இடைவெளி இருந்தால்தான் படிக்க சௌகரியம்.


6. பின்னூட்டம் போடுவதற்கு இடைஞ்சல்கள்
ஐயா பின்னூட்டம் போடுங்கள் என்று கோவில்களில் பிச்சைக்காரர்கள் கூவுகிற மாதிரி கூவுகின்ற பதிவுகளை நிறையப் பார்க்கின்றோம். சரி, ஐயோ பாவம் என்று பின்னூட்டம் போடப் போனால் வரும் உபத்திரவம் அதிகம். முதலில் தமிழில் பின்னூட்டம் போடுகின்றோம். முடித்து பப்ளிஷ் என்று சொன்னால் உடனே வேர்டு வெரிபிகேஷன் என்று ஒன்று. நீங்கள் ரோபோட் இல்லையென்று நிரூபியுங்கள் அப்படீன்னு ஒண்ணு. அதில மேகமூட்டத்தில கலங்கின மாதிரி ஆங்கில எழுத்துக்கள். அப்புறம் நீங்க ஆங்கிலத்திற்கு மாறி, அந்த எழுத்துக்களை ஒண்ணாம் கிளாஸ் பையன் மாதிரி எழுத்துக்கூட்டி டைப் பண்ணவேண்டும். அப்புறம் பப்ளிஷ் பண்ண வேண்டும்.


ஏதோ ரோபோட் வந்து இவங்க பதிவுல ஆயிரக்கணக்குல பின்னூட்டம் போட்ட மாதிரியும் அதைத் தடுக்க இந்த யுத்தியைக் கடைப்பிடிக்கற மாதிரியும் பாவலா. இதனால் வருகிற ஒன்றிரண்டு பின்னூட்டங்களும் ஓடிப்போய்விடும்.


பதிவுகள் போடுவது நாலு பேரு படிக்கட்டும் என்றுதானே. அதில் இவ்வளவு சங்கடங்கள் கொண்டு வந்தால் எப்படிங்க படிக்கிறது? எப்படிங்க பின்னூட்டம் போடறது? பதிவுலக கனவான்களே, சிந்தியுங்கள்.

திங்கள், 5 டிசம்பர், 2011

நல்ல பதிவர் யார்?


நண்பர் அப்துல் பஸ்ஜித் அவர்கள் பிளாக்

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-8]

 Abdul Basith 

இந்தப் பதிவில் நண்பர் அப்துல் பஸ்ஜித் அவர்கள் பதிவு ஆரம்பிப்பது எப்படி என்று ஒரு தொடர் எழுதி வருகிறார். ஆனால் பிரபல பதிவர் ஆவது எப்படி என்று ஒரு செய்தியையும் கொடுக்கவில்லை. அதற்காகத்தான் இந்தப் பதிவு.

1.   தினம் ஒரு பதிவு போடவேண்டும். அதற்கு மேலும் போடவேண்டுமென்றால் சி.பி.செந்தில்குமாரிடம் (ஈரோடு) பர்மிஷன் வாங்க வேண்டும். அதற்கான காப்பிரைட் உரிமையை அவர்தான் வைத்திருக்கிறார்.

2.   பதிவுகளை சனி, ஞாயிறு, மற்றும் விடுமுறை நாட்களில் போடாதீர்கள். யாரும் படிக்க வர மாட்டார்கள். இதில் ஒரு பெரிய தொழில் நுணுக்கம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்னைத் தனியே தொடர்பு கொள்ளவும்.

3.   பதிவு போட்டவுடன் அதை எல்லா திரட்டிகளிலும் இணைக்கவேண்டும்.

4.   தெரிந்தவர்கள், நண்பர்கள், எதிரிகள், முன்பின் தெரியாதவர்கள் அனைவருக்கும் ஈமெயில், ட்விட்டர், முகப்புத்தகம் மூலமாக பதிவு போட்ட செய்தியை அனுப்பவேண்டும்.

5.   ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பிளாக்கை ஓபன் செய்து கீழ்க்கண்டவைகளை பரிசோதிக்க வேண்டும்.
a.   பின்னூட்டங்கள்.
b.   ஹிட் கவுன்ட்டர்
c.   பின்பற்றுவோர்
d.   ஓட்டு நிலவரம்
e.   தமிழ்மணம் மற்றும் அலெக்ஸா ரேட்டிங்க்.

6.   எல்லாப் பின்னூட்டங்களுக்கும் பதில் போடவேண்டும்.

7.   பின்னூட்டம் போட்ட பதிவர்களின் பதிவுகளுக்குப் போய், அங்கு பின்னூட்டம் மற்றும் ஓட்டுகள் போடவேண்டும்.

8.   அந்தப் பதிவுகளில் பின்பற்றுவோர் ஆக சேரவேண்டும்.

9.   மற்ற நேரங்களில், புதிய பதிவுகளைப் பார்த்து பின்னூட்டம் போடவேண்டும்.

10. தங்கள் பதிவுகளிலேயே திரட்டிகளுக்கு ஒரு ஓட்டுப்போட வசதி உண்டு. அதைத் தவறாமல் போடவும்.

11. அதிக பின்னூட்டங்கள் வராவிடில் நண்பர்களுடன் சிண்டிகேட் ஏற்படுத்தி பின்னூட்டங்களை அதிகப் படுத்தவும். இதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ள, அதிக பின்னூட்டங்கள் (நூற்றுக்கு மேல்) வரும் பதிவரைத் தொடர்பு கொள்ளவும்.

12. தொடர் பதிவுகளை ஆரம்பித்து அப்பாவிப் பதிவர்களைக் கோர்த்து விடவும்.

13. தொழில் நுட்ப பதிவுகளைத் தவறாமல் பார்த்து அடிக்கடி பதிவை மேம்படுத்திக் கொள்ளவும்.

14. முடிந்தால் யாரையாவது அடிக்கடி வம்புக்கு இழுக்கவும். வம்பு சமாளிக்க முடியாமல் போனால் உடனே ஒரு மன்னிப்புப் பதிவு போட்டுவிட வேண்டும். (காசா, பணமா?)

நீங்கள் முதல் பதிவு போட்டவுடனேயே பிரபலமாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.


வெள்ளி, 9 செப்டம்பர், 2011

அதிக ஹிட்ஸ், ஓட்டுகள், பின்னூட்டங்கள் வேண்டுமா, இங்க வாங்கோ


இவங்க ரொம்ப நல்லா நடிப்பாங்க

என்னுடைய பதிவர்களுக்கு பத்து குறிப்புகள் என்ற பதிவிற்கு, பதிவுலக வரலாறு காணாத அளவில் அன்பும் ஆதரவும் கொட்டிக் கொடுத்த அனைவரது பாதார விந்தங்களுக்கும் அநேகம் கோடி நமஸ்காரங்கள். (இது எப்படி இருக்கு!)

இந்தப் பதிவில் எழுதிய குறிப்புகள் போதாதென்று சிலபல பதிவர்கள் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்தபடியால் அந்தக் குறையை நிவர்த்திக்கும் பொருட்டு இந்தப் பதிவை போடுகிறேன். இந்த உலகத்தில எப்பொழுதும் நல்லதுக்கு காலமில்லைன்னு பெரியவங்க சொன்னது ரொம்ப ரொம்ப உண்மை.
குறை தெரிவித்ததில் ஒரு சேம்பிள்:
//JOTHIG ஜோதிஜி said...
அதற்குண்டான தளங்களுக்குச் சென்று அதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

அய் அய் இதானே வேண்டாங்றது. நீங்க தான் இந்த பிரச்சனையையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்து (எனக்கு மட்டுமாவது) சொல்லிக்கொடுக்கோணும்//

சரீங்க, நீங்க சொல்றதுனால அதையும் போட்டுடறனுங்க. அதை ஏன் பாக்கி வைக்கோணும்? முட்ட நனைஞ்சதுக்கப்புறம் முக்காடு எதுக்கு?

என்ன, ரொம்பப் பேருக்கு உடம்பெரியும். எரியட்டுமே, நமக்கென்ன? அப்புறம் என்ன, நெறய, மைனஸ் ஓட்டு விழும். விழட்டுமே! நம்ம லெவலுக்கு பிளஸ், மைனஸ் எல்லாம் ஒண்ணுதானுங்களே?

அப்புறம் நான் வாத்தியாருங்க, வகுப்புல எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் கிளாஸ் எடுப்பேன். ட்யூஷன் கிளாஸ் எல்லாம் வைக்கறது கிடையாது.

எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்கோ. இப்ப பாடத்தை ஒழுங்கா கவனியுங்கோ.

1.   உங்கள் பதிவிற்கு, உலகத்தில் இதுவரை யாரும் வைக்காத, பெயர் வைக்கவேண்டும். முடிசூடா மொக்கை மன்னன், கும்மாலக்கிடி கும்மா, சுளுக்கு சுந்தரி, இப்படி நல்லதா ஒரு தலைப்பு தேர்ந்தெடுங்கள். அப்புறம் பதிவருக்கு ஒரு முகமூடி பெயர் வேண்டும். தெருநாய், குப்பைவண்டி, தெருப்பொறுக்கி, ரெட்டைவால் குரங்கு, இந்த மாதிரி பெயர் வைத்துக்கொள்ளுங்கள். உண்மைப் பெயருடன் போட்டோவையும் பதிவில் போடும் தவறை எக்காலத்திலும் செய்யாதீர்கள். அது சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வதற்கு ஒப்பாகும். பிளாக்கில் ஈமெயில் விவரத்தைக் கொடுக்காதீர்கள். அது நிச்சயமாக வீட்டுக்கு ஆட்டோவை வரவழைக்கும்.

2.   ஒரு அரை டஜன் சகாக்களை தயார் செய்யுங்கள். எல்லோரும் கம்ப்யூட்டரே கதி என்று இருப்பவர்களாக இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் ஆளுக்கு அரை டஜன் email ID தயார் செய்யவேண்டும். ஆக மொத்தம் 36 email ID தயார். இப்போ நீங்கள் பதிவு இடுவதற்கு தகுதி அடைந்து விட்டீர்கள்.

3.   பதிவின் தலைப்பு யாரும் கனவில் கூட நினைத்திராதபடி இருக்கவேண்டும். (உ-ம்) காதல் கன்னியுடன் இரவில் ஜாலி…… தலைப்பு, பார்த்தவுடன் பசங்களை அப்படியே சுண்டி இழுக்கவேண்டும். இதில் எந்த தவறும் கிடையாது. ஒரு கண்ணியமிக்க, பிரபல பதிவரே சமீபத்தில் இந்த மாதிரி தலைப்பு வைத்துத்தான் வாசகர்களை தன் பதிவின் பக்கம் இழுத்தார்.

4.   பதிவில் நடிகைகளின் நல்ல (?) போட்டோக்கள் நாலைந்து கட்டாயம் போடவேண்டும். பதிவின் மேட்டர் எப்படியிருந்தாலும் சரி. இதில் எந்தத் தவறும் கிடையாது. அழகை ஆராதிப்பதில் என்ன தவறு வந்து விடும்?  

இந்த மாதிரி பதிவுகளுக்குத்தான் மொக்கைப் பதிவுகள் என்ற பெயர். இந்தப் பதிவர்களுக்கு “மொக்கைப் பதிவர்கள்” என்ற அடை மொழி உண்டு. இந்தப் பெயர் வாங்குவது மிகக் கடினம். ஆனால் ஒருமுறை இந்தப் பட்டத்தை வாங்கிவிட்டால் ஆயுளுக்கும் உங்களை விடாது.

5.   பதிவு போட்டவுடன் ரன்னிங்க் ரேசில் சொல்வார்களே, அந்த மாதிரி  On your marks, get set, ready, start என்று சொல்ல ஒரு சங்கேத வார்த்தையை முதலிலேயே நண்பர்களுடன் பேசி வைத்துக்கொள்ளுங்கள். பதிவு போட்டவுடன் இந்த சங்கேத வார்த்தையை உங்கள் நண்பர்களுக்கு மெயில் செய்து விடுங்கள். பதிவுகள் பொதுவாக இரவு 11 மணிக்குத்தான் போடவேண்டும்.

6.   திட்டம் என்னவென்றால் இந்த சங்கேத வார்த்தை கிடைத்தவுடன் உங்கள் நண்பர்களெல்லாம் உங்கள் பதிவுக்கு வந்து ஒரு நிமிஷத்துக்கு ஒன்று என்ற ரேட்டில் அவர்களுடைய ஆறு ID யிலிருந்தும் சகட்டு மேனிக்கு பின்னூட்டங்கள் போடவேண்டியது. பதிவுக்கும் பின்னூட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வேண்டியதில்லை. நீங்களும் இரவு முழுவதும் தூங்காமல் வந்த பின்னூட்டங்களுக்கெல்லாம் பதில் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். விடிவதற்குள் எப்படியும் ஆயிரம் பின்னூட்டங்கள் தேத்தி விடவேண்டும்.

7.   விடிந்து ஆணி பிடுங்கப் போகும் இடத்தில் நண்பர்கள் எல்லாம் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை இந்தப் பதிவுக்குப் போய் ஒவ்வொரு ஐ.டி.யிலும் ஹிட்ஸ் கொடுத்து விட்டு, ஓட்டும் போடவேண்டியது.

8.   ஒரு கம்ப்யூட்டரிலிருந்து ஒரு திரட்டியில் ஒரு முறைதான் ஓட்டுப் போட முடியும் என்பது பதிவுலகின் துர்ப்பாக்கியம். ஆகவே எங்கு புதிதாக கம்ப்யூட்டரைப் பார்த்தாலும் உடனே அதில் புகுந்து ஒரு ஓட்டைப் போட்டுவிடவேண்டும்.

9.   யாராவது ஒரு பதிவர், குறிப்பாக பெண் பதிவர்கள், ஒரு சின்ன விஷயத்தை யதார்த்தமாக எழுதியிருந்தாலும், அதில் நண்பர்கள் எல்லோரும் படையெடுத்து அந்த மேட்டரை ஊதி ஊதி பெரிசாக்கி, பூதாகாரமாகப் பண்ணி, அந்தப் பதிவர் ஊரை விட்டே ஓடும்படியாகச் செய்யவேண்டும்.

10. பிரபலமான பதிவர்களின் பதிவிற்குச் சென்று அவர்களை உசுப்பேற்றி அவர்கள் ஏமாந்து சொல்லும் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு கும்மியடிக்கவேண்டும்.

கைவசம் இன்னும் நிறைய உத்திகள் இருக்கின்றன. இப்போதைக்கு இவை போதும் என்று நினைக்கிறேன். இவைகளைக் கடைப்பிடித்து உங்கள் தளத்தை உலகப் பிரசித்தி பெற்ற தளமாக மாற்ற, என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

வாத்தியார் பேரைக் கெடுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

டிஸ்கி: இந்தப் பதிவில் கொடுத்திருக்கும் எந்தக் குறிப்பும், யாரையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி யாராவது நினைத்தால் பொது நலம் கருதி அதை மறந்து விடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

       
            இவங்க பெங்கால்ல ரொம்ப பிரபல பாடகி.