எந்த ஒரு சிக்கலான தத்துவத்தையோ பொருளையோ நன்கு
புரிந்து கொள்ளவேண்டுமானால், அதை அதன் எளிய பகுப்புகளாகப் பிரித்துத்தான் புரிந்து கொள்ள இயலும். நான் யார் என்பது ஆன்மீக
மார்க்கத்தில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி. நான் ஒரு மனிதன் என்று உடனே கூறிவிடலாம்.
ஆனால் அது சரியல்ல. மனிதன் என்பவன் உடல், மனம்,
புத்தி, ஆன்மா என்கிற இவை நான்கும் சேர்ந்த கலவைதான் என்று ஆன்மீகவாதிகள் சொல்கிறார்கள்.
இவைகளை ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
உடல் எது என்பதில் யாருக்கும் சந்தேகம் வர வாய்ப்பில்லை.
ஆனால் ஆன்மாவைப் பற்றி எப்பொழுதும் ஒரு குழப்பமான நிலையே நிலவுகிறது. சாதாரண மனிதர்களாகிய
நாம் தற்போதைக்கு ஆன்மா என்பதும் உயிர் என்பதும் ஒன்று என்று வைத்துக்கொள்வோம். அப்போது
உடல் என்பது ஜடமாகவும் ஆன்மா என்பது சக்தியாகவும் அமைகிறது. ஆன்மா இல்லையென்றால் உடலை
சவம் என்று சொல்லி அதை அடக்கம் செய்கிறோம்.
இப்போது மீதம் இருப்பது மனம், புத்தி, இரண்டும்தான்.
முதலில் மனம் என்றால் என்ன என்று பார்ப்போம். எண்ணங்களின்
தொகுப்புதான் மனம் என்று அடையாளம் காணப்படுகின்றது. எண்ணங்கள் மனிதனின் மூளையில்தான்
தோன்றுகின்றன. உண்மையில் மனம் என்று ஒரு பகுதி மூளையில் கிடையாது. நாம் நம் புரிதலுக்காக
இந்த அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.
ஒருவன் பிறந்தவுடன் எண்ணங்கள் தானாகத் தோன்றுவதில்லை.
மரபணுக்கள், சுற்றம், சூழ்நிலை, இவைகளின் கூட்டுத் தாக்கத்தினால்தான் ஒருவனின் எண்ணங்கள்
உருவாகின்றன. எண்ணங்கள் செயல்களைத் தோற்றுவிக்கின்றன. செயல்களினால் அனுபவங்கள் ஏற்படுகின்றன.
ஒருவனுக்கு ஏற்படும் அனுபவங்கள் மீண்டும் எண்ணங்கள் உருவாக காரணமாய் அமைகின்றன. இப்படி
சுழற்சியாக ஏற்படும் அனுபவங்களும் எண்ணங்களும்தான் மூளையில் நினைவுகளாகப் பதிகின்றன.
காலப்போக்கில் இந்த நினைவுகளின் அடிப்படையில் அவனுடைய
புத்தி உருவாகிறது. புத்தி என்பது ஒருவனுடைய நினைவுகளின் அடிப்படையில் உண்டாகும் மூளையின்
ஒரு நிலை. இதுதான் மனிதனின் எந்தவொரு செயலுக்கும் வழி காட்டுகிறது. இந்தப் புத்திதான்
ஒருவனுடைய நடைமுறை வாழ்க்கையை வழி நடத்துகிறது. இந்தப் புத்தி எல்லோருக்கும் ஒரே மாதிரி
இருக்கிறதா என்றால் இல்லை. ஏன் என்று யோசிப்போமா?
தொடரும்…