நரியும் திராக்ஷைக் குலைகளும் கதையைக் கேட்காதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்தக் கதை ஒரு எதிர் மறைத் தத்துவத்தை எடுத்துக் காட்டத்தான் பெரும்பாலும் சொல்லப் படுகிறது.
ஏதோ நரி சொல்லத்தகாத வார்தைகளைச் சொல்லிவிட்ட மாதிரியான தொனி இந்தக் கதையில் வலியுறுத்தப்படுகிறது. இந்த மாதிரி சொல்பவர்கள் எல்லாம் கேலிக்குரியவர்கள் என்றுதான் நமக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அருமையான வாழ்க்கைத்த் தத்துவம் இந்தக் கதையில் அடங்கியிருக்கிறது. இதை உணராமல் நாம் எல்லோரும் அந்த பாவப்பட்ட நரியை ஏளனமாகப் பார்த்து வந்திருக்கிறோம்.
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். ஒருவன் நன்றாகப் படித்து நல்ல பட்டங்கள் எல்லாம் வாங்கியிருக்கிறான். அவன் பல வேலைகளுக்கு விண்ணப்பிக்கிறான். நேர்முகத் தேர்விற்கு பலரால் அழைக்கப்படுகிறான். அவனுக்கு ஏதோ ஒரு கம்பெனியில் வேலைக்கான உத்திரவு கிடைக்கிறது. ஆனால் அவன் எதிர்பார்த்ததோ வேறு ஒரு கம்பெனியின் உத்திரவை.
இப்போது அவன் என்ன செய்யவேண்டும்? அவன் எதிர்பார்த்த கம்பெனியில் இருந்து உத்திரவு வரவில்லையே, என் வாழ்வு வீணாகிப் போனதே என்று புலம்பிக்கொண்டு இருந்தால் என்ன ஆகும்? அவன் வாழ்வு வீணாகித்தான் போகும்.
சரி, கிடைத்த வேலையில் சேர்வோம், அந்த வேலை என்ன பெரிய சர்க்கரைக் கட்டியா? என்று மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டு கிடைத்த வேலையில் சேர்வதுதானே புத்திசாலித்தனம்?
நரி அதைத்தானே செய்தது? அந்த திராக்ஷைப் பழம் எட்டவில்லை. அதற்காக அங்கேயே உட்கார்ந்து கொண்டு புலம்பினால் அந்தப் பழம் கிடைக்குமா என்ன? ஆகவே அது புத்திசாலித்தனமாக கிடைக்காத பழம் புளித்த பழம், நாம் இன்னொரு தோட்டத்தில் முயன்றால் நல்ல இனிப்பான பழம் கிடைக்கக் கூடும் என்று அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டது.
இது புத்திசாலித்தனமா? இல்லை அங்கேயே நின்று கொண்டு கிடைக்காத பழத்தைப் பார்த்து ஏக்கப்பட்டுக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமா? மக்களே, யோசியுங்கள். வாழ்க்கையில் நம்மால் எது முடியுமோ அதைச் செய்யுங்கள். நம்மால் முடியாதவற்றை எண்ணி ஏங்கிக்கொண்டு இருக்காதீர்கள்.