மனிதர்களுடைய குணங்கள் அவர்களுடைய மரபணு தொகுப்பினால்
ஆக்கப்பட்டவை என்று பார்த்தோம். இந்த குணங்களினால் சிலர் சமூகத்திற்கு எதிரான கொள்கைகளைக்
கொண்டிருப்பார்கள். அவர்களுடைய செயல்கள் எந்நாளும் தீயவைகளையே கருவாகக் கொண்டிருக்கும்.
அவர்களுடைய தோழர்களும் இதே மாதிரியான குணங்கள் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்
கிடையேதான் நெருக்கம் ஏற்படும். இது அவர்களின் மரபணுக்கள் ஏற்படுத்தும் குணங்கள்.
அவர்கள் தங்கள் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள
மாட்டார்கள். அவர்களைத் திருத்தும் நோக்கோடு கற்றவர்கள் கூறும் அறிவுரைகளை எந்நாளும்
ஏற்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் மரபணுக்களின் குணம் அவர்களை இவ்வாறு ஆக்கியிருக்கிறது.
நல்ல பதப்படுத்தப்பட்ட நிலத்தில் விதைக்கும் விதைகள்தான் முளைத்து, வளர்ந்து பலன் கொடுக்கும்.
கட்டாந்தரையில் விதைக்கும் விதைகள் முளைக்க மாட்டாது.
இவர்கள் கட்டாந்தரையைப் போன்றவர்கள். இவர்களைச்
சீர்திருத்தம் செய்ய முயலுவது, கானல் நீரைப் பருக ஆசைப்படுவது போலத்தான் அமையும். சூழ்நிலை
மாற்றங்களைச் சந்திக்க இவர்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் எதிர்மறையாகவே இருக்கும்.
பல குடும்பங்கள் கெட்டுப்போவதற்கு இவர்களின் இந்தக் குணங்களே காரணம்.
விதி அல்லது கர்மவினை என்பதை பலர் இவர்களின் நிலைக்குக்
காரணமாகக் காட்டுவார்கள். சோதிடர்கள் அவர்களின் கிரக நிலை அவர்களை இப்படி ஆட்டுவிக்கிறது
என்பார்கள். விஞ்ஞானிகள் அவர்களின் மரபணுக்கூறுதான் இதற்கு காரணம் என்பார்கள். எப்படியானாலும்
அவர்களின் நிலை மாறப்போவதில்லை.