புதன், 29 பிப்ரவரி, 2012

செயல் திட்டம் (புராஜெக்ட் வொர்க்) என்றால் என்ன?


நேற்று நடைப் பயிற்சிக்காக போகும்போது தெரு முனையில் ஒரு பது விளம்பரத்தைப் பார்த்தேன். Final Year Projects இங்கே கிடைக்கும் என்று எழுதியிருந்தது. என்னவென்று விசாரித்தேன். அந்த விசாரணையில் தெரிய வந்ததை உங்கள் பார்வைக்காக வைக்கிறேன்.

இப்போதுள்ள பாடத்திட்டங்களின்படி ஏறக்குறைய எல்லா தொழில் நுட்பப் படிப்புகளுக்கும் அந்தப் படிப்பின் கடைசி வருடத்தில் ஒரு புராஜெக்ட் வேலை கொடுத்து அதை முடித்து வருமாறு சொல்வார்கள். முன்பெல்லாம் இது முதுகலைப் பட்டப் படிப்புகளுக்குத்தான் இருந்தது. அதை தீஸிஸ் சமர்ப்பித்தல் என்று சொல்லுவார்கள்.

அந்த தீஸிஸ் வேலை என்றால் என்னவென்றால், ஒவ்வொரு மாணவனும் ஒரு ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாக சமர்ப்பிக்க வேண்டும். இதை ஒரு ஆய்வாளர் பரிசீலித்து, படிக்கும் படிப்புக்கு ஏற்றதாக இருக்கிறது என்றால்தான் அந்த மாணவனுக்கு அந்தப் பட்டம் கிடைக்கும். இந்த தீஸிஸ் வேலையில் அந்த மாணவனை வழி நடத்த ஒரு அனுபவம் உள்ள ஆசிரியரை வழிகாட்டியாக நியமிப்பார்கள். அவர் அந்த மாணவர் எழுதும் தீஸிஸ் அவராகவே புள்ளிவிபரங்கள் சேகரித்து அவராலேயே எழுதப்பட்டது என்று சான்று கொடுக்கவேண்டும். அப்போதுதான் அந்த தீஸிஸ் முழுமையானதாகக் கருதப்படும்.

இந்த வேலை எதற்காக என்றால், ஒரு முதுகலைப் பட்டப்படிப்பு படித்த மாணவனிடம் ஒரு வேலை கொடுத்தால், அந்த வேலையை எவ்வாறு திட்டமிட்டு, அதற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரித்து அந்த வேலையை முடித்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்கும் திறமையை வளர்ப்பதற்காகத்தான். அப்போதுதான் அவன் எந்த வேலையில் சேர்ந்தாலும் தன்னம்பிக்கையுடன் அந்த வேலையைச் செய்வான்.
நமது கல்வித் திட்டங்களில் மாற்றங்கள் அவ்வப்போது கொண்டு வருவார்கள். அது எதற்காக என்றால் அப்போதுதான் நமது மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்குமாம். இந்த மாற்றங்களில் எல்லா வித தொழில் படிப்புகளுக்கும் இந்த செயல் திட்டத்தை கட்டாயமாக்கினார்கள். நல்ல, உயரிய நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட மாற்றம்தான் இது.

ஆனால் கால ஓட்டத்திலே இந்த முறை சீரழிந்து, வெறும் சடங்காக மாறிவிட்டது. இது மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயமாக தற்போது இருக்கிறது. ஒவ்வொரு கல்லூரிக்குப் பக்கத்திலும் இருக்கும் கம்ப்யூட்டர் சென்டர்கள் இந்த செயல்திட்ட அறிக்கையை ரெடிமேடாக தயார் செய்து ஒரு விலை போட்டு கொடுக்கிறார்கள். மாணவர்களும் அதை வாங்கி அப்படியே கல்லூரியில் கொடுத்து விடுகிறார்கள். அவர்களை மேற்பார்வை பார்க்கும் ஆசிரியர்களும் சான்று கொடுத்து விடுகிறார்கள்.  

ஆக மொத்தம் செயல் திட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதில்லை. காலத்தின் மாற்றத்தினால் ஏற்படும் சீரழிவு இது. எங்களைப் போல் வாழ்வின் இறுதியில் இருக்கும் ஆசிரியர்கள் புலம்பத்தான் முடியும்!