வியாழன், 19 ஏப்ரல், 2012

கழுத்து வலியைக் குணப்படுத்த வழி


நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல். - குறள்.

ஆகவே எந்த நோயாக இருந்தாலும் அது எப்படி, எதனால் வந்தது என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்த நாளில் கழுத்து வலி வருவதற்கு முக்கியமான மூன்று காரணங்கள்.

1. இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களில் போகும்போது குண்டு குழிகளில், வேகத்தடுப்பான்களில், வேகத்தைக் குறைக்காமல் வேகமாகப் போகும்போது ஏற்படும் அதிர்ச்சி.

2. கணிணி முன் மணிக்கணக்காக ஒரே நிலையில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பது.

3. தலையணையின் உயரம் ஒத்துக் கொள்ளாமல் போவது.

முதல் இரண்டு காரணங்களையும் பலர் அறிந்திருப்பார்கள். அதற்கு உண்டான வைத்தியத்தையும் அறிந்திருப்பார்கள். இந்த மூன்றாவது தலையணை காரணத்தையும் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கக் கூடும். இது நாள் வரை டாக்டர்கள் சொல்லி வந்தது என்னவென்றால் தலையணை அதிக உயரம் கூடாது என்பதுதான்.

என்னுடைய தனிப்பட்ட அனுபவம் என்னவென்றால் இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதே. ஆகவே நீங்கள் உங்களுக்கு எவ்வளவு உயரமான தலையணை வேண்டும் என்பதை அனுபவத்தில் கண்டு பிடித்து அதை உபயோகப்படுத்தவேண்டும்.

நான் உயரம் குறைவான தலையணையைத்தான் உபயோகித்து வந்தேன். கழுத்து வலி இருந்து கொண்டே இருந்தது. ஒரு பரிசோதனைக்காக ஒரு உயரமான தலையணையை உபயோகித்தேன். இரண்டு மூன்று நாளில் கழுத்து வலி குறைந்து, ஒரு வாரத்தில் முற்றிலும் சரியாகி விட்டது.

இதுலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், ஒவ்வொருவரும் தங்களுக்குப் பொருத்தமான தலையணையைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கவேண்டும்.