திங்கள், 23 ஏப்ரல், 2012

நல்ல ஆஸ்பத்திரியை அடையாளம் காண்பது எப்படி?



மனிதனாகப் பிறந்தவர்களுக்கு ஆண்டவன் பல சோதனைகளைக் கொடுக்கிறான். அதில் ஒன்றுதான் உடல்நலக் குறைவு. சாதாரண தலைவலி, காய்ச்சல் போன்ற வியாதிகளென்றால் நாம் வழக்கமாகப் போகும் டாக்டரிடம் சென்று வைத்தியம் செய்து கொள்ளலாம்.


ஆனால் சற்றுப் பெரிய, குறிப்பாக நெஞ்சுவலி போன்ற நோய்கள் வந்து விட்டால், வீட்டில் பெரிய குழப்பம் ஏற்பட்டுவிடும். என்ன செய்வது, எந்த ஆஸ்பத்திரியில் சேர்ப்பது என்பது பற்றி ஆளாளுக்கு யோசனை சொல்வார்கள். வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளவர்களானால் பிரச்சினை இல்லை. ஊரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம். எவ்வளவு செலவானாலும் கொடுத்துவிட்டு வந்து விடலாம்.


ஏழைக்குடும்பங்களுக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. நேராக கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போய் விடுவார்கள். அங்கு என்ன ஆனாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப் பக்குவம் அவர்களுக்கு உண்டு.


ஆனால் நடுத்தர வசதியுள்ள குடும்பங்களில் இந்த மாதிரி சமயங்களில் முடிவு எடுப்பது மிகவும் கடினம். கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போவது அவர்களுக்கு கௌரவக்குறைச்சல். பெரிய ஆஸ்பத்திரிகளுக்குப் போய் அங்கு ஆகும் செலவுகளைத் தாக்குப் பிடிப்பதுவும் கடினம். இவர்கள் நிலை பரிதாபத்திற்குரியது.


இவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா நபர்களுக்கும் மெடிகல் இன்சூரன்ஸ் எடுப்பது மிக மிக அவசியம். அதுவும் ஆஸ்பத்திரிகளில் பணம் செலுத்த வேண்டியிராத பாலிசி எடுப்பது அவசியம். அது தவிர இந்த வசதிகளைச் செயல்படுத்தும் ஆஸ்பத்திரிகள் எவை என்று கண்டு பிடித்து, அவைகளுடன் தொடர்பு வைத்திருப்பது அவசியம். 


இவைகளையெல்லாம் தங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்போதே செய்து வைத்திருப்பது அவசியம். தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது போல் இருக்கக்கூடாது.


இந்தக் குறிப்புகளை நான் குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. டாக்டர்கள் கண் கண்ட தெய்வங்கள்தான். அதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம். ஆனால் அவர்கள் ஆஸ்பத்திரி என்று ஒன்று கட்டிவிட்டார்களேயானால் அவர்களே சாத்தான்களின் மறு அவதாரமாகி விடுகிறார்கள்.


உலகத்தில உசிரோட இருக்கிற நோயாளிகளுக்குத்தான் வைத்தியம் பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனா எனக்குத் தெரிந்து இங்குள்ள பெரிய கார்பரேட் ஆஸ்பத்திரியில் செத்துப் போனவர்களுக்குக் கூட வைத்தியம் பார்ப்பார்கள். சினிமா இல்லைங்க. நிஜம்.


ஒருவர் சீரியஸ் நோயாளியாக இருந்தால் அவரை உடனடியாக ICU வில் வைத்து விடுவார்கள். இது எல்லாருக்கும் தெரியும். நெருங்கிய உறவினர்களை மட்டும் தினம் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ பார்க்க விடுவார்கள். என்ன வைத்தியம் பார்க்கிறார்கள் என்ற விவரம் சொல்ல மாட்டார்கள். தினம் காலையில் டாக்டர் வந்து விட்டுப் போனவுடன் ஒரு முழ நீளத்திற்கு மருந்து லிஸ்ட் கொடுப்பார்கள். அந்த மருந்துகளை அந்த ஆஸ்பத்திரியில் இருக்கும் கடையில்தான் வாங்க வேண்டும்.


அதை ICU வாசலில் கொண்டு போய்க் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். நாம் என்ன நினைப்போமென்றால், இந்த மருந்துகளை எல்லாம் நம் உறவினருக்குக் கொடுப்பார்கள் என்றுதானே? உங்கள் நினைப்பு தவறு. அந்த மருந்துகள் அப்படியே மருந்துக் கடைக்குப் போய் விடும். தினந்தோறும் இப்படி லிஸ்ட் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். நாமும் வாங்கிக்கொடுத்துக்கொண்டே இருப்போம்.


இதை நம்புவது கடினம். பெரிய ஆஸ்பத்திரிகளில் இப்படியும் மனச்சாட்சி இல்லாமல் இருப்பார்களா என்ற சந்தேகம் வரும். இது நடக்கிறது என்று நான் உறுதியாகச் சொல்லுகிறேன்.


ஆகவே நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் உங்கள் ஊரில் இருக்கும் ஆஸ்பத்திரிகளைப் பற்றி நன்கு விசாரித்து,ICU இல்லாத ஆஸ்பத்திரியைக் கண்டுபிடித்து அந்த ஆஸ்பத்திரியின் டாக்டரிடம் தொடர்ந்து தொடர்பில் இருங்கள். 


சில ஆஸ்பத்திரி டாக்டர்கள் நோயாளிகளிடம் அதீத அன்புடையவர்களாய் இருப்பார்கள். அவர்கள் ஆஸ்பத்திரிக்குப் போய் விட்டால் நோய் குணமானபின்பும் உங்களை டிஸ்சார்ஜ் செய்யமாட்டார். நீங்களாக டாக்டரை நச்சரித்தால் ஒழிய உங்களை டிஸ்சார்ஜ் பண்ண மாட்டார். அப்படிப்பட்ட ஆஸ்பத்திரியில் போய் சிக்கிக் கொள்ளவேண்டாம்.


நீங்கள் எப்பேர்ப்பட்ட வியாதியிலிருந்தும் குணமாவது உங்கள் விதியைப் பொருத்துத்தான் அமையும் என்பதை மனதில் கொள்ளவும். அதனால் உங்களுடைய வசதிக்கு மீறீன வைத்தியத்திற்குத் தலைப்படாதீர்கள்.


உங்களுக்கு எப்போதும் நல்ல உடல் நலம் வாய்க்க ஆண்டவன் அருள் புரியட்டும்.