திங்கள், 23 ஏப்ரல், 2012

நல்ல ஆஸ்பத்திரியை அடையாளம் காண்பது எப்படி?மனிதனாகப் பிறந்தவர்களுக்கு ஆண்டவன் பல சோதனைகளைக் கொடுக்கிறான். அதில் ஒன்றுதான் உடல்நலக் குறைவு. சாதாரண தலைவலி, காய்ச்சல் போன்ற வியாதிகளென்றால் நாம் வழக்கமாகப் போகும் டாக்டரிடம் சென்று வைத்தியம் செய்து கொள்ளலாம்.


ஆனால் சற்றுப் பெரிய, குறிப்பாக நெஞ்சுவலி போன்ற நோய்கள் வந்து விட்டால், வீட்டில் பெரிய குழப்பம் ஏற்பட்டுவிடும். என்ன செய்வது, எந்த ஆஸ்பத்திரியில் சேர்ப்பது என்பது பற்றி ஆளாளுக்கு யோசனை சொல்வார்கள். வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளவர்களானால் பிரச்சினை இல்லை. ஊரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம். எவ்வளவு செலவானாலும் கொடுத்துவிட்டு வந்து விடலாம்.


ஏழைக்குடும்பங்களுக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. நேராக கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போய் விடுவார்கள். அங்கு என்ன ஆனாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப் பக்குவம் அவர்களுக்கு உண்டு.


ஆனால் நடுத்தர வசதியுள்ள குடும்பங்களில் இந்த மாதிரி சமயங்களில் முடிவு எடுப்பது மிகவும் கடினம். கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போவது அவர்களுக்கு கௌரவக்குறைச்சல். பெரிய ஆஸ்பத்திரிகளுக்குப் போய் அங்கு ஆகும் செலவுகளைத் தாக்குப் பிடிப்பதுவும் கடினம். இவர்கள் நிலை பரிதாபத்திற்குரியது.


இவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா நபர்களுக்கும் மெடிகல் இன்சூரன்ஸ் எடுப்பது மிக மிக அவசியம். அதுவும் ஆஸ்பத்திரிகளில் பணம் செலுத்த வேண்டியிராத பாலிசி எடுப்பது அவசியம். அது தவிர இந்த வசதிகளைச் செயல்படுத்தும் ஆஸ்பத்திரிகள் எவை என்று கண்டு பிடித்து, அவைகளுடன் தொடர்பு வைத்திருப்பது அவசியம். 


இவைகளையெல்லாம் தங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்போதே செய்து வைத்திருப்பது அவசியம். தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது போல் இருக்கக்கூடாது.


இந்தக் குறிப்புகளை நான் குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. டாக்டர்கள் கண் கண்ட தெய்வங்கள்தான். அதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம். ஆனால் அவர்கள் ஆஸ்பத்திரி என்று ஒன்று கட்டிவிட்டார்களேயானால் அவர்களே சாத்தான்களின் மறு அவதாரமாகி விடுகிறார்கள்.


உலகத்தில உசிரோட இருக்கிற நோயாளிகளுக்குத்தான் வைத்தியம் பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனா எனக்குத் தெரிந்து இங்குள்ள பெரிய கார்பரேட் ஆஸ்பத்திரியில் செத்துப் போனவர்களுக்குக் கூட வைத்தியம் பார்ப்பார்கள். சினிமா இல்லைங்க. நிஜம்.


ஒருவர் சீரியஸ் நோயாளியாக இருந்தால் அவரை உடனடியாக ICU வில் வைத்து விடுவார்கள். இது எல்லாருக்கும் தெரியும். நெருங்கிய உறவினர்களை மட்டும் தினம் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ பார்க்க விடுவார்கள். என்ன வைத்தியம் பார்க்கிறார்கள் என்ற விவரம் சொல்ல மாட்டார்கள். தினம் காலையில் டாக்டர் வந்து விட்டுப் போனவுடன் ஒரு முழ நீளத்திற்கு மருந்து லிஸ்ட் கொடுப்பார்கள். அந்த மருந்துகளை அந்த ஆஸ்பத்திரியில் இருக்கும் கடையில்தான் வாங்க வேண்டும்.


அதை ICU வாசலில் கொண்டு போய்க் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். நாம் என்ன நினைப்போமென்றால், இந்த மருந்துகளை எல்லாம் நம் உறவினருக்குக் கொடுப்பார்கள் என்றுதானே? உங்கள் நினைப்பு தவறு. அந்த மருந்துகள் அப்படியே மருந்துக் கடைக்குப் போய் விடும். தினந்தோறும் இப்படி லிஸ்ட் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். நாமும் வாங்கிக்கொடுத்துக்கொண்டே இருப்போம்.


இதை நம்புவது கடினம். பெரிய ஆஸ்பத்திரிகளில் இப்படியும் மனச்சாட்சி இல்லாமல் இருப்பார்களா என்ற சந்தேகம் வரும். இது நடக்கிறது என்று நான் உறுதியாகச் சொல்லுகிறேன்.


ஆகவே நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் உங்கள் ஊரில் இருக்கும் ஆஸ்பத்திரிகளைப் பற்றி நன்கு விசாரித்து,ICU இல்லாத ஆஸ்பத்திரியைக் கண்டுபிடித்து அந்த ஆஸ்பத்திரியின் டாக்டரிடம் தொடர்ந்து தொடர்பில் இருங்கள். 


சில ஆஸ்பத்திரி டாக்டர்கள் நோயாளிகளிடம் அதீத அன்புடையவர்களாய் இருப்பார்கள். அவர்கள் ஆஸ்பத்திரிக்குப் போய் விட்டால் நோய் குணமானபின்பும் உங்களை டிஸ்சார்ஜ் செய்யமாட்டார். நீங்களாக டாக்டரை நச்சரித்தால் ஒழிய உங்களை டிஸ்சார்ஜ் பண்ண மாட்டார். அப்படிப்பட்ட ஆஸ்பத்திரியில் போய் சிக்கிக் கொள்ளவேண்டாம்.


நீங்கள் எப்பேர்ப்பட்ட வியாதியிலிருந்தும் குணமாவது உங்கள் விதியைப் பொருத்துத்தான் அமையும் என்பதை மனதில் கொள்ளவும். அதனால் உங்களுடைய வசதிக்கு மீறீன வைத்தியத்திற்குத் தலைப்படாதீர்கள்.


உங்களுக்கு எப்போதும் நல்ல உடல் நலம் வாய்க்க ஆண்டவன் அருள் புரியட்டும்.18 கருத்துகள்:

 1. உண்மையான கருத்துக்கள். பெரிய ஆஸ்பத்திரியை கட்டிக்கொண்டு ஒரு மாயையை ஏற்படுத்துகிறார்கள். அந்தக்கால டாக்டர்கள் இன்னமும் 10 ரூபாய், 20ரூபாய் வாங்கிக்கொண்டு வைத்தியம் செய்கிறார்கள். முக்கியமாக நோய் குண்மாகிறது.

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி
  மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்தான்
  மருத்துவமனை கட்டாதவரை...
  பயனுள்ள பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. நல்ல கட்டுரை; நானும் கேள்விப் பட்டேன். வருத்தமாக இருக்கிறது. கக்ட்டாயம் இதைப் பற்றி ஒரு பதிவு உண்டு!

  நல்ல ஆஸ்பத்திரியை அடையாளம் காண்பது எப்படி? இதைப் பற்றி நீங்கள் சரியாக கூறவில்லையே?

  கூறுங்கள் எப்படி "நல்ல ஆஸ்பத்திரியை அடையாளம் காண்பது" என்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது விதிப்பிரகாரம்தான் அமையும். அதனால்தான் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

   நீக்கு
  2. என்ன சார் நீங்களும் விதி அப்படின்னு சொல்லிட்டீங்க? இந்த எல்லா "விதிகளையும்" ஒழிச்சாலே இந்தியா வல்லரசாகிவிடும்!

   நீக்கு
 4. உண்மைதான். கோபாலுக்கு ரத்த அழுத்த மருந்து (இங்கிருந்து கொண்டுபோனது தீர்ந்துருச்சுன்னு) சென்னையில் ஒரு புகழ் பெற்ற (!!!) மருத்துவமனைக்குப்போய் வசமா மாட்டிக்கிட்டார். செக்கப் செக்கப்புன்னு நாலுநாள் ...............இந்த அழகுலே நீயும் செக்கப் செஞ்சுக்கோன்னு என்னைப்பிடுங்கி எடுத்துட்டார். நல்லவேளையா பிடிவாதமா நின்னு தப்பிச்சேன்.

  இங்கே நியூஸியில் இந்தக் கஷ்டம் ஒன்னும் இல்லை. தனியார் மருத்துவமனைகள் கிடையாது. அரசு மருத்துவமனைக்குத்தான் போகணும் எல்லோரும். நல்ல கவனிப்பு. 5 ஸ்டார் ஹொட்டேல் போல கட்டிவச்சுருக்காங்க.

  பதிலளிநீக்கு
 5. தவிர்க்க வேண்டிய விஷயங்களைப் பற்றி பயனுள்ள தகவல்கள் தந்துள்ளீர்கள்!

  பதிலளிநீக்கு
 6. //உங்களுக்கு எப்போதும் நல்ல உடல் நலம் வாய்க்க ஆண்டவன் அருள் புரியட்டும்.//

  கடைசியில் மிகவும் ஆறுதலான வார்த்தையாகக் கூறிவிட்டீர்கள்.

  யாருக்கு எந்த நேரம் என்ன வியாதி வருமோ, எவ்வளவு செலவாகுமோ என்ற கவலை ஏற்படத்தான் செய்கிறது.

  பயனுள்ள முன்னெச்சரிக்கை தரும் பதிவு. நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 7. ஐயா வணக்கம் .

  //இதை நம்புவது கடினம். பெரிய ஆஸ்பத்திரிகளில் இப்படியும் மனச்சாட்சி இல்லாமல் இருப்பார்களா என்ற சந்தேகம் வரும். இது நடக்கிறது என்று நான் உறுதியாகச் சொல்லுகிறேன்.
  //

  உண்மைதான்.

  2000 வருடங்களுகு முன்பே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - சும்மாவா சொல்லியிருகிரார்கள்.

  அப்புறம் இலவச மருத்துவ முகாம் - என்று சொல்லி, நல்லா இருக்கிற உடம்பை பயமுறுத்தி மருத்துவ மனைக்கு வரச்சொல்லி இருதையதுல அடைப்பு இருக்கு என்று பயமுறுத்தி உடனே ஆபரேசன் என்று பெரிய தொகையை கறந்து விடுகிறார்கள் .
  இலவச மருத்துவ முகாம் - என்றால் நம்மை பொறியில் சிக்கவைக்கும் ஒரு உபாயம் என்பதை மறந்துவிடவேண்டாம்.

  பதிலளிநீக்கு
 8. ஆனந்த விகடனில் கிருஷ்ணா டாவின்சி எழுதிய “காலா அருகில் வாடா” சிறுகதையைப் படிக்க வேண்டுகிறேன். 18-4-2012 இதழ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறைந்த கிருஷ்ணா டாவின்ஸியின் கதையை படித்தேன்.கதிர்ரேசனுக்கு ஏற்பட்ட நிகழ்வும் மருத்துவர்கள் காட்டிய பயமும்,அதற்கெல்லாம் அஞ்சாமல் விவேகமான முடிவெடுத்து இறுதியில் சுபமான முடிவு மனதை நெகிழ்த்தி விட்டது.அருமையான கதைகள் வடித்த அந்த எழுத்தாளர் இப்பொழுது ந்ம்முடன் இல்லை என்பது மனதினை கனக்க வைக்கின்றது.

   நீக்கு
 9. அதிர்ச்சியாக இருக்கிறது.
  இப்படியெல்லாம் கூட மக்களை ஏமாத்துவார்களா?
  மருத்துவனான எனக்கு வெட்கமாகவும் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. பயனுள்ள பகிர்வு. இங்கும் இதே நிலை இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 11. நல்ல மருத்துவர்களும் இருக்கிறார்கள், பணத்தை பிடுங்குவதையே குறிக்கோளாக கொண்டவர்களும் உள்ளார்கள். நம்ம விதி எப்படியோ அப்படித் தான் எல்லாம்.......

  பதிலளிநீக்கு
 12. குறித்து வைத்துக்கொள்ளக்கூடிய அத்யாவசிய குறிப்புகள்.


  நீங்கள் எப்பேர்ப்பட்ட வியாதியிலிருந்தும் குணமாவது உங்கள் விதியைப் பொருத்துத்தான் அமையும் என்பதை மனதில் கொள்ளவும். அதனால் உங்களுடைய வசதிக்கு மீறீன வைத்தியத்திற்குத் தலைப்படாதீர்கள்.
  // சரியாக சொன்னீர்கள்..இந்த மனோபாவம் அனைவருக்கும் இருந்து விட்டால் ஏச்சிபிழைக்கும் மருத்துவமனைகள் இருக்காது.

  பதிலளிநீக்கு
 13. எனக்கு எங்க ஊர்ல 30 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் தான் சாமி! :)

  பதிலளிநீக்கு
 14. "மறுமொழிகள்" மொத்தத்தையும் ஒட்டுமொத்தமா குத்தகைக்கு எடுத்தாமாதிரி, முழுக்க முழுக்க உங்க ஆதிக்கம்! என்ன நடக்குது இங்க! எதாவது அண்டர்கிரௌண்ட் அண்டர்ஸ்டான்டிகா?

  பதிலளிநீக்கு