புதன், 29 ஆகஸ்ட், 2012

என் கம்ப்யூட்டரை முடக்கி விட்டார்கள்


என் பதிவுலக வளர்ச்சியைப் பொறுக்கமாட்டாமல் இந்த கார்ப்பரேஷன்காரர்கள் என்னுடைய டெலிபோன் கனெக்ஷ்னை துண்டித்து விட்டார்கள். .நா.சபையில் முறையிடலாமா என்று யோசித்தேன். ஆனால் அது அமெரிக்காவில் இருக்கிறதாமே? போய் வருவதற்கு உடலில் தெம்பில்லை. ஆகவே உள்ளூரிலேயே ஏதாவது செய்யலாம் என்று முயற்சித்தேன்.

முதலில் டெலிபோன் ஆபீசைப் படையெடுத்தேன். அவர்கள் சொன்னார்கள். உங்கள் வீதியில் பாதாள சாக்கடையும், சாதாரண சாக்கடையும் போடுவதற்காக கார்ப்பரேஷன்காரர்கள் குழி வெட்டும்போது டெலிபோன் வயர்களை எல்லாம் சின்னாபின்னமாக்கி விட்டார்கள். அவர்கள் வேலை எல்லாம் முடித்து விட்டுப் போகட்டும், அப்புறம் நாங்கள் டெலிபொன் லைனை சரி செய்து கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.

சரி என்று சாக்கடைக்காரர்களிடம் (அதாவது கார்ப்பரேஷன்) போனேன். எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடித்து விடுவோம் என்றார்கள்.
ஆகவே எனக்கு இன்னும் இரண்டு மாதத்திற்கு டெலிபோன் வேலை செய்யாது. கூடவே இன்டர்நெட்டும் காலி. எப்படிப் பதிவு போடுவது என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தபோது கடவுள் என் பேரன் மூலமாக ஒரு வழி காட்டினார். அதாவது என் பேரன் டாடா கம்பெனியின் டேட்டா கார்டு வைத்திருக்கிறான். (டாடா-டேடா, எப்படி எதுகை மோனை?). அதை உங்களுக்கு தினம் பதினைந்து நிமிடம் உபயோகப் படுத்தி இன்டர்நெட்டில் என்ன பண்ண வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் என்று சொன்னான்.

கொலைப் பசிக்காரனுக்கு ஒரு டம்ளர் கஞ்சி கிடைத்த மாதிரி சந்தோஷப் பட்டேன். அதை வைத்துத்தான் இந்த பதிவு போடுகிறேன். பதினைந்து நிமிடத்தில் பதிவைப் பதிவேற்றத்தான் முடியும். பதிவு முன்னமே தயார் செய்து வைத்திருக்கவேண்டும். மற்ற பதிவுகளைப் பார்ப்பதோ அல்லது பின்னூட்டங்களுக்குப் பதில் போடவோ முடியாது. சரி எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தபோது தலையில் இன்னொரு இடி.

திடீரென்று கம்ப்யூட்டர் ஸ்கிரீன் கருப்பாகி விட்டது. நன்றாக கவனித்துப் பார்த்ததில் வலது கீழ் மூலையில் ஒரு செய்தி. "உங்கள் தலையில் யாரோ மிளகாய் அரைத்து விட்டார்கள்" அப்படீன்னு இருந்தது. தலையை நன்றாகத் தடவிப் பார்த்தேன். மிளகாய் அரைத்த சுவடு ஒன்றையும் காணோம். கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு செய்தியை மறுபடியும் உன்னிப்பாகப் படித்தேன். நீங்கள் உபயோகப் படுத்தும் இந்த விண்டோஸ் புரொக்ராம் ஒரிஜினல் இல்லை. யாரோ உங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று இருந்தது. மைக்ரோசாஃப்ட்காரன் எவ்வளவு நாசூக்கா "நீ திருட்டுப் புரோக்ராம் வச்சிருக்கறே" அப்படீன்னு சொல்றாம் பாருங்க.

என்னுடைய தன்மானம் ஆட்டம் பாம் போல வெடித்தது. மீசை துடித்தது. நான் வழக்கமாகப் போகும் கம்ப்யூட்டர் கடைக்குப் போனேன். “யோவ், உங்ககிட்டதானே கம்ப்யூட்ட, காசு கொடுத்துத்தானே வாங்கினேன், இப்ப ஒருத்தன் என்னைத் திருடன் அப்படீங்கறான், இது என்னய்யா அநியாயமா இருக்குஅப்படீன்னு சத்தம் போட்டேன்.  அவன் என்னை உட்கார வச்சு, காப்பி வாங்கிக் கொடுத்து, கம்ப்யூட்டர் கிளாஸ் ஒரு மணி நேரம் எடுத்தான். அப்பத்தான் தெரிஞ்சுது, என் தலையில நெஜமாகவே களிமண்ணுதான் இருக்குதுண்ணு. கம்ப்யூட்டர்ல ஹார்டுவேர், சாஃப்ட்வேர் அப்படீன்னு ரெண்டு இருக்குதாம். அதுல ஹார்டுவேர்தான் அவங்க விக்கறாங்களாம் சாஃப்ட்வேர் அவங்கவங்க வாங்கிக்கணுமாம். அந்த சாஃப்ட் வேர் அமெரிக்காவில ஒரு கொ(வெ)ள்ளைக்காரன்தான் விக்கறானாம். அவம்பேரு பில் கேட்ஸாம். அதுக்கு தனியா காசு கொடுத்து வாங்கோணும். அப்படீன்னு சொன்னான்.

சரி, உரல்ல தலையைக் கொடுத்தாச்சு, உலக்கைக்குப் பயந்தா ஆகுமா, அப்படீன்னு சரி, அது உங்க கிட்ட இருக்குதான்னு கேட்டேன். இருக்குதுன்னான். சரி, இருக்கிறதில வெல கம்மியா இருக்கிறத கொடு அப்படீன்னேன். விண்டோஸ் மட்டும் போதுமா, இல்ல ஆபீஸும் வேணுமான்னு கேட்டான். ரெண்டு எதுக்கய்யான்னு கேட்டேன். அவன் சொல்றான், ஒண்ணு கம்ப்யூட்டர ஓட வைக்கறதுக்கு, இன்னொண்ணு உங்க பிளாக் எழுத, கணக்கு வச்சுக்க, படம் போட அப்படீன்னான். சரி. ரெண்டு எளவையும் கொடுன்னு, வாங்கீட்டு வந்து வச்சேன்

அப்பறம் நம்ம கம்யூட்டர வழக்கமா பாக்கற டாக்டர் வந்து பாத்துட்டு சொல்றார். உங்க மிசினுக்கு வயசாயிடுச்சுங்க, சூடு வருது பாத்தீங்களா, இதையும் மாத்திப்புட்டா நல்லா இருக்கும்னு ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். டாக்டர் சொன்ன பொறவு செய்யாம இருக்க முடியுமுங்களா. சரின்னு அதையும் மாத்தியாச்சு. இந்த ரெண்டு சனியனையும் கம்ப்யூட்டருக்குள்ள போட்டாச்சு.

அப்புறம் நம்ம டாக்டர் சொல்றாரு. இனி ஒரு பயலும் விரலை நீட்டி ஒண்ணும் சொல்லமாட்டானுங்க, நீங்க தைரியமா உங்களை பூந்து விளையாடுங்க, அப்படீன்னு தைரியம் சொல்லீட்டுப் போனாருங்க. எல்லாமாச் சேர்ந்து சொளையா இருபது நோட்டு ஆயிப்போச்சுங்க.
பதிவுகளை சொந்த கம்ப்யூட்டர்ல போடறதுன்னா இவ்வளவு ரகளைகள் இருக்குங்க. ஏதாச்சும் ஆணி புடுங்கற வேலைக்குப் போனா, அங்க இருக்கற கம்ப்யூட்டர்ல நம்ம பதிவு வேலையைப் பாத்துக்லாம்னு நெனச்சா, 78 வயசில ஒனக்கு என்ன வேலை கொடுக்கறது? ஊருக்குப் போற வழியைப் பாருங்கன்னு சொல்றாங்க. உலகம் ரொம்பக் கெட்டுப் போச்சுங்க.

பின்குறிப்பு:
Windows 7 Home Basic = Rs.5000/=
MS Office 2010 Home and Student = Rs.3200/=
இந்த ரெண்டும் நம்ம உபயோகத்திற்குப் போதும்.