என் பதிவுலக வளர்ச்சியைப் பொறுக்கமாட்டாமல் இந்த கார்ப்பரேஷன்காரர்கள் என்னுடைய டெலிபோன் கனெக்ஷ்னை துண்டித்து விட்டார்கள். ஐ.நா.சபையில் முறையிடலாமா என்று யோசித்தேன். ஆனால் அது அமெரிக்காவில் இருக்கிறதாமே? போய் வருவதற்கு உடலில் தெம்பில்லை. ஆகவே உள்ளூரிலேயே ஏதாவது செய்யலாம் என்று முயற்சித்தேன்.
முதலில் டெலிபோன் ஆபீசைப் படையெடுத்தேன். அவர்கள் சொன்னார்கள். உங்கள் வீதியில் பாதாள சாக்கடையும், சாதாரண சாக்கடையும் போடுவதற்காக கார்ப்பரேஷன்காரர்கள் குழி வெட்டும்போது டெலிபோன் வயர்களை எல்லாம் சின்னாபின்னமாக்கி விட்டார்கள். அவர்கள் வேலை எல்லாம் முடித்து விட்டுப் போகட்டும், அப்புறம் நாங்கள் டெலிபொன் லைனை சரி செய்து கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.
சரி என்று சாக்கடைக்காரர்களிடம் (அதாவது கார்ப்பரேஷன்) போனேன். எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடித்து விடுவோம் என்றார்கள்.
ஆகவே எனக்கு இன்னும் இரண்டு மாதத்திற்கு டெலிபோன் வேலை செய்யாது. கூடவே இன்டர்நெட்டும் காலி. எப்படிப் பதிவு போடுவது என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தபோது கடவுள் என் பேரன் மூலமாக ஒரு வழி காட்டினார். அதாவது என் பேரன் டாடா கம்பெனியின் டேட்டா கார்டு வைத்திருக்கிறான். (டாடா-டேடா, எப்படி எதுகை மோனை?). அதை உங்களுக்கு தினம் பதினைந்து நிமிடம் உபயோகப் படுத்தி இன்டர்நெட்டில் என்ன பண்ண வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் என்று சொன்னான்.
கொலைப் பசிக்காரனுக்கு ஒரு டம்ளர் கஞ்சி கிடைத்த மாதிரி சந்தோஷப் பட்டேன். அதை வைத்துத்தான் இந்த பதிவு போடுகிறேன். பதினைந்து நிமிடத்தில் பதிவைப் பதிவேற்றத்தான் முடியும். பதிவு முன்னமே தயார் செய்து வைத்திருக்கவேண்டும். மற்ற பதிவுகளைப் பார்ப்பதோ அல்லது பின்னூட்டங்களுக்குப் பதில் போடவோ முடியாது. சரி எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தபோது தலையில் இன்னொரு இடி.
திடீரென்று கம்ப்யூட்டர் ஸ்கிரீன் கருப்பாகி விட்டது. நன்றாக கவனித்துப் பார்த்ததில் வலது கீழ் மூலையில் ஒரு செய்தி. "உங்கள் தலையில் யாரோ மிளகாய் அரைத்து விட்டார்கள்" அப்படீன்னு இருந்தது. தலையை நன்றாகத் தடவிப் பார்த்தேன். மிளகாய் அரைத்த சுவடு ஒன்றையும் காணோம். கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு செய்தியை மறுபடியும் உன்னிப்பாகப் படித்தேன். “நீங்கள் உபயோகப் படுத்தும் இந்த விண்டோஸ் புரொக்ராம் ஒரிஜினல் இல்லை. யாரோ உங்களை ஏமாற்றிவிட்டார்கள்” என்று இருந்தது. மைக்ரோசாஃப்ட்காரன் எவ்வளவு நாசூக்கா "நீ திருட்டுப் புரோக்ராம் வச்சிருக்கறே" அப்படீன்னு சொல்றாம் பாருங்க.
என்னுடைய தன்மானம் ஆட்டம் பாம் போல வெடித்தது. மீசை துடித்தது. நான் வழக்கமாகப் போகும் கம்ப்யூட்டர் கடைக்குப் போனேன். “யோவ், உங்ககிட்டதானே கம்ப்யூட்டர, காசு கொடுத்துத்தானே வாங்கினேன், இப்ப ஒருத்தன் என்னைத் திருடன் அப்படீங்கறான், இது என்னய்யா அநியாயமா இருக்கு” அப்படீன்னு சத்தம் போட்டேன்.
அவன் என்னை உட்கார வச்சு, காப்பி வாங்கிக் கொடுத்து, கம்ப்யூட்டர் கிளாஸ் ஒரு மணி நேரம் எடுத்தான். அப்பத்தான் தெரிஞ்சுது, என் தலையில நெஜமாகவே களிமண்ணுதான் இருக்குதுண்ணு. கம்ப்யூட்டர்ல ஹார்டுவேர், சாஃப்ட்வேர் அப்படீன்னு ரெண்டு இருக்குதாம். அதுல ஹார்டுவேர்தான் அவங்க விக்கறாங்களாம் சாஃப்ட்வேர் அவங்கவங்க வாங்கிக்கணுமாம். அந்த சாஃப்ட் வேர் அமெரிக்காவில ஒரு கொ(வெ)ள்ளைக்காரன்தான் விக்கறானாம். அவம்பேரு பில் கேட்ஸாம். அதுக்கு தனியா காசு கொடுத்து வாங்கோணும். அப்படீன்னு சொன்னான்.
சரி, உரல்ல தலையைக் கொடுத்தாச்சு, உலக்கைக்குப் பயந்தா ஆகுமா, அப்படீன்னு சரி, அது உங்க கிட்ட இருக்குதான்னு கேட்டேன். இருக்குதுன்னான். சரி, இருக்கிறதில வெல கம்மியா இருக்கிறத கொடு அப்படீன்னேன். விண்டோஸ் மட்டும் போதுமா, இல்ல ஆபீஸும் வேணுமான்னு கேட்டான். ரெண்டு எதுக்கய்யான்னு கேட்டேன். அவன் சொல்றான், ஒண்ணு கம்ப்யூட்டர ஓட வைக்கறதுக்கு, இன்னொண்ணு உங்க பிளாக் எழுத, கணக்கு வச்சுக்க, படம் போட அப்படீன்னான். சரி. ரெண்டு எளவையும் கொடுன்னு, வாங்கீட்டு வந்து வச்சேன்.
அப்பறம் நம்ம கம்யூட்டர வழக்கமா பாக்கற டாக்டர் வந்து பாத்துட்டு
சொல்றார். உங்க மிசினுக்கு வயசாயிடுச்சுங்க, சூடு வருது பாத்தீங்களா, இதையும் மாத்திப்புட்டா நல்லா இருக்கும்னு ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். டாக்டர் சொன்ன பொறவு செய்யாம இருக்க முடியுமுங்களா. சரின்னு அதையும் மாத்தியாச்சு. இந்த ரெண்டு சனியனையும் கம்ப்யூட்டருக்குள்ள போட்டாச்சு.
அப்புறம் நம்ம டாக்டர் சொல்றாரு. இனி ஒரு பயலும் விரலை நீட்டி ஒண்ணும் சொல்லமாட்டானுங்க, நீங்க தைரியமா உங்களை பூந்து விளையாடுங்க, அப்படீன்னு தைரியம் சொல்லீட்டுப் போனாருங்க. எல்லாமாச் சேர்ந்து சொளையா இருபது நோட்டு ஆயிப்போச்சுங்க.
பதிவுகளை சொந்த கம்ப்யூட்டர்ல போடறதுன்னா இவ்வளவு ரகளைகள் இருக்குங்க. ஏதாச்சும் ஆணி புடுங்கற வேலைக்குப் போனா, அங்க இருக்கற கம்ப்யூட்டர்ல நம்ம பதிவு வேலையைப் பாத்துக்லாம்னு நெனச்சா, 78 வயசில ஒனக்கு என்ன வேலை கொடுக்கறது? ஊருக்குப் போற வழியைப் பாருங்கன்னு சொல்றாங்க. உலகம் ரொம்பக் கெட்டுப் போச்சுங்க.
பின்குறிப்பு:
Windows 7 Home Basic = Rs.5000/=
MS Office 2010 Home and Student =
Rs.3200/=
இந்த ரெண்டும் நம்ம உபயோகத்திற்குப் போதும்.
ஐயா!
பதிலளிநீக்கு60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆளுக்கு ஒரு கம்யூட்டர் இலவச கோரிக்கையை 'அம்மா' விடம் வைத்தாலென்ன?
ஹி ஹி ஹி, நல்ல கோரிக்கைதான்!
நீக்குமிக நல்ல ஐடியா...ஆனா அதுக்கு அடுத்த எலக்ஷன் வருகிற வரைக்கும் காத்திருக்கணும்
நீக்குகண்டிப்பா கேட்கவேணும்.
நீக்குமிக அழகாக இயல்பு நடையில் சொல்லப்பட்ட விசயங்கள் மிக நன்றாக இருந்ததையா .துன்பமும் நகைச்சுவையும் கலந்து இன்றைய ஆக்கம் மனத்தைக் கவர்ந்துவிட்டது .தொடர வாழ்த்துக்கள் ஐயா .
பதிலளிநீக்குநன்றி. எப்படியோ, ஐந்து நிமிடம் முன்புதான் டெலிபோன் லைனை சரி செய்தார்கள்.
நீக்குஎல்லாம் புச்சா!!!!!
பதிலளிநீக்குஇனிய பாராட்டுகள்.
என்னதும் இப்பவோ எப்பவோன்னு இருக்கு:(
It is a shame you spend so much money when linux is there already. No need to change your old computer. it will run fine with old hardware.
பதிலளிநீக்குI was totally unhappy with the performance of linux.
நீக்குஐயா, லினக்ஸ் யில் சுலபமான தொகுப்புகளும் உள்ளன.
நீக்குமக்களிடம் விழிப்புணர்வு குறைவாக உள்ளது.
டைப் செய்வது, இணையத்தில் உலவுவது ஆகியவற்றிற்கு it is more than enough.
Try some easy versions like Linux mint or Ubuntu in your old computer.
Also try to get help from some experts in your area, just for startup
சாதாரணப் பயன்பாட்டுக்கு லினக்ஸ் போதும் என்பதே என் கருத்தும்!
நீக்குநகைச்சுவையாகச் சொல்லிப்போனாலும்
பதிலளிநீக்குசொல்லிச் சென்ற தகவல்கள் கனமானவையே
பயனுள்ள அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 2
பதிலளிநீக்குதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)
பதிலளிநீக்குwonderful post.grievances expressed in a humorous tone.
பதிலளிநீக்குkarthik [ponniyinselvan ]+amma
wonderful post.grievances expressed in a humorous tone.
பதிலளிநீக்குkarthik [ponniyinselvan ]+amma
///I was totally unhappy with the performance of க
பதிலளிநீக்குடாக்டர் கந்தசாமி அய்யா!
Unix or linux கற்றுக்கொள்வது சிறிது கடினம்; ஆனால் நல்லா stable systems; உங்களுக்கு Unix or linux or windows விட, கொஞ்சம் பணம் அதிகம் ஆனாலும், best and stable MAC; காரணம் முக்கால்வாசி Proprietary software - crash இருக்காது!
நான் அமெரிக்காவில், முதிலில் உபயோகப் படுத்தியது இதைத்தான்.
என்ன செய்யறது? பழகிப்போச்சுங்களே!
நீக்குகணினியில் பதிவிட எவ்வளவு சிரமங்கள் உள்ளன என்பதை நகைச்சுவையோடு பதிவிட்டுள்ளீர்கள்.
பதிலளிநீக்குதங்கள் பதிவில் மிகவும் இரசித்த சொல்லாடல்கள். சாக்கடைக்காரர்களிடம் (அதாவது கார்ப்பரேஷன்), கொ(வெ)ள்ளைக்காரன் வாழ்த்துக்கள்!
ஐயா உங்களிடமிருந்து இப்படியான ஒரு பதிவினை எதிர்பார்க்கவேயில்லை...மிக அழகாக பதிவிட்டுள்ளிர்கள்
பதிலளிநீக்குநான் படித்த உங்கள் பதிவுகளை விட இது மிகவும் வித்தியாசம்...
அனுபவத்தை ரசிக்கும் படி எழுதியிருக்கிறீர்கள் ஐயா
அச்சச்சோ...
பதிலளிநீக்குAiyaa apadiye oru airte 3Gl data card vaangidunga.nalla speeda pookum nettu.enna maasam oru 600 or 800 varum billu.data card rate 1600/-varum.entha itaththilum kondu poi velai seiyalaam.
பதிலளிநீக்குYappada, rompa naal kalichu oru nakaisuvai pathivu.:-))
பதிலளிநீக்குவிண்டோஸ் பழகியவர்களுக்கு லினக்ஸ் கடினம்தான். ஆனால் கொள்ளை லாபம் அடிக்கும்போது நாம் மாறிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்படி இல்லை என்றால் பைரேட்டட் மென்பொருளையே பயன் படுத்த வேண்டி இருக்கிறது.
பதிலளிநீக்குஉடனுக்குடன் சரி செய்யா விட்டால் தூக்கம் வராதே.
பதிலளிநீக்குஆமாங்க.
நீக்குநல்ல காமெடி கும்மி! சரளமான எழுத்து நடை!
பதிலளிநீக்குWindows Home Basic also another failure OS i think.
பதிலளிநீக்குஉங்களுக்காச்சும் பரவாயில்லிங்க, எனக்கு கம்யூட்ரே, போச்சுங்கோ............
பதிலளிநீக்குபண்டம் மாற்று முறை என்று ஒன்று உண்டு; அதன் படி எப்படி சிறய இடுகையை சிறப்பாக எழுதுவது என்று பொட்டி தட்டும் பொடியன்களுக்கு நீங்கள் கத்துக் கொடுங்கள்; பதிலுக்கு அவர்கள் பொட்டி அழகாக தட்டுவது எப்படி என்று கற்றுக்கொடுக்கட்டும்!
பதிலளிநீக்குநண்பரே... லினக்ஸ் இயங்குதளம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்று எழுதியிருக்கின்றீர்கள்... யாரோ உங்களிடம் தப்பா சொல்லியிருக்காங்கன்னு (அறிமுகப்படுத்தியிருக்காங்கன்னு) நெனைக்கிறேன்...
பதிலளிநீக்குலினக்ஸின் ஒரு சில பதிப்புகள் பிடிக்காமல் போயிருக்கலாம்... இப்போது லினக்ஸில் பல்வேறு பதிப்புகள் கிடைக்கின்றன.
லினக்ஸ் பயன்படுத்த தொடங்குபவர்கள், Ubuntu-ல் இருந்து ஆரம்பிக்கலாம்... இப்போது இதன் இடைமுகமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது நாட்டில் எழுதப்பட்ட BOSS (Bharat Operating System Solution) பயன்படுத்த எளிதாகவும் குறைந்த வன்பொருள் வசதியினைக்கொண்ட கணிப்பொறியிலும் நன்றாக இயங்ககூடியது. முதலில் தேவையான மென்பொருட்களை நிறுவும் வரை மட்டுமே லினக்ஸ் கடினமாக தோன்றும்.. ஆனால் பயன்படுத்த தொடங்கிவிட்டால், மிகவும் எளிதாக இருக்கும்.
இப்பொழுதுதான் MS windows Home basic பயன்படுத்தும் உரிமையை வாங்கியிருக்கின்றீர்கள்... ஆதலால் அதனையே தொடர்ந்து பயன்படுத்தலாம். இருப்பினும் BOSS/Ubunutu பயன்படுத்தி பார்க்க விரும்பினால் சொல்லுங்கள்.. எளிதான பயன்பாட்டிற்கான முறைகளின் திரைக்காட்சிகளை தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கின்றேன்.
பின்குறிப்பு : MS windows இயங்குதளத்தினை வாங்கிவிட்டீர்கள்... இனி நாம் கணிப்பொறியின் வழியே உரையடுவது பிடிக்காமல் ஊரில் இருக்கும் நல்லவர்கள் வைரஸ் (Virus) மென்பொருட்களை நீங்கள் கேட்காமலேயே தருவார்களே அப்போது என்ன செய்வீர்கள்...????
லினக்ஸ் முற்றிலும் வைரஸ் தொல்லை இல்லாமல் இயங்கும்... நாமும் எந்தவித தொந்தரவும் இன்றி தமிழிலேயே உரையாடலாம்...
மிக்க நன்றி நண்பரே. நான் ஒரு முறை லினக்ஸ்ஸை என்னுடைய கணினியால் நிறுவினேன். என்னுடைய பழக்கத்திற்கு சரிப்பட்டு வரவில்லை. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Known Devil is better than unknown Angel. அந்த பழமொழிக்கு சரியான உதாரணம் நான்தான். இருப்பினும் இன்னொரு முறை முயற்சிக்கிறேன்.
நீக்குஐயா, அருமையாக உங்கள் அனுபவத்தை நகைச்சுவையுடன் விளக்கி உள்ளீர்கள்.. நன்றி! கணிப்பொறி எப்போது வாங்கினீர்கள்? அதில் என்ன மாற்றி உள்ளீர்கள்?
பதிலளிநீக்குகம்ப்யூட்டர் என் பெண் தானமாகக் கொடுத்தது. வாங்கி 10 வருடத்திற்கு மேல் ஆகிறது. சிபியூ வில் சூடு வருகிறது. இந்தச் சூட்டினால் சில சமயம் கம்ப்யூட்டர் தானாக ஷட்டவுன் ஆகி விடுகிறது. அதனால் மொத்த சிபியூ வையும் காற்ற முடிவெடுத்து மாற்றினேன். புராசஸ்ஸர் ஏறக்குறைய பழைய ஸ்பீடுதான். ஆனால் இன்டெல் மதர்போர்டு. எல்லா கார்டுகளும் அதிலேயே இருக்கின்றன. ஹார்டு டிஸக் முன்பு 80 ஜிபி. இப்போது 500 ஜிபி. சிபியூ இப்போது சூடாவதில்லை.
நீக்குமானிடர், கீபோர்டு, மவுஸ் பழையவையே.
எந்த சாமானாக இருந்தாலும் எனக்கு பழசு சரியில்லை என்றால் உடனே அதை கழிச்சுக் கட்டி விட்டு புதிது வாங்கி விட வேண்டும். அதை ரிப்பேர் பண்ணி உபயோகிப்பது எனக்குப் பிடிக்காத ஒன்று. இந்த உடம்பு ஒன்றைத்தான் மாற்ற இன்னும் நேரம் வரவில்லை.
Sir.....
பதிலளிநீக்குVery excellant and Informative one.
ஐயா, ஆபீஸ் வாங்கியிருக்க வேண்டியதில்லை - ஓபன்ஆபீஸ் டவுன்லோட் செய்து உபயோகப்படுத்தியிருக்கலாம்!
பதிலளிநீக்குஅதையும் செஞ்சு பார்தேனுங்களே, நிலவன்பன். என்னமோ என்னுடைய கம்ப்யூட்டரில் சரியாக வேலை செய்யவில்லை. அப்புறம் வந்த எரிச்சலில்தான் அதையும் வாங்கினேன்.
நீக்குநன்றி ஐயா விளக்கமான பதிலுக்கு! அப்போ இனிமே சுடச்சுட நிறைய பதிவுகள் எழுதுவீங்கன்னு சொல்லுங்க! வாழ்த்தி வணங்குகிறேன்!
பதிலளிநீக்குசார், இந்தப் பதிவைப் படிச்சதும் நான் சொல்ல நினைத்ததை நண்பர் Rajasekaran Viswanathan அவர்கள் சொல்லிவிட்டார்கள், மேலும், நான் refer செய்ய இருந்த நண்பர் மென்பொருள் பிரபு ஏற்கனவே பின்னோட்டமிட்டுவிட்டார். உபுண்டு லினக்ஸ் இன்ஸ்டால் செய்வதற்கு, CD tray யை ஓபன் செய்து CDயை அதில் போட்டு க்ளோஸ் செய்யத் தெரிந்திருந்தாலே போதும், இன்ஸ்டால் செய்த பின்னர் உங்களுக்கு விண்டோசுக்கும் லினக்சுக்கும் வித்தியாசமே தெரியாத அளவுக்கு தற்போது லினக்சை எளிது படுத்திவிட்டார்கள். கணினியை ஆண் செய்தவுடன் டெஸ்க் டாப் வரும், பிரவுசரை கிளிக் செய்து உங்கள் வேலைகள் எல்லாம் செய்யலாம், கஷ்டமே இல்லை. எல்லாமே மவுஸ் கிளிக்கிலேயே செய்யலாம். வைரஸ் வராது, ஆபீஸ் இலவசம். மைக்ரோசாப்ட் காரன் உலகளாவிய அளவில் ஈமுக் கோழிப் பண்ணை நடத்துபவன் என்பது நம்மில் பலருக்குத் தெரியாத காரணத்தால் இன்னமும் அவனை நம்பியிருக்கிறோம். நிச்சயம் லினக்ஸ் சற்று மாறுபட்டதுதான், ஆனால் அந்த மாற்றத்துக்கு நம்மை வழக்கப் படுத்திக் கொள்வது மிக எளிது. சந்தேகங்களைத் தீர்க்க பதிவுலகில் பல ஜாம்பவான்கள் உள்ளனர், அதில் முக்கியமானவர் லினக்ஸ் பிரபு. அவர் வலைப்பூவிலும், தொலைபேசி மூலமாகவும் வேண்டிய உதவிகளைச் செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர். ஏன் வீட்டில் நான் லினக்ஸ் தான் பயன்படுத்துகிறேன், எனக்கும் லினக்ஸ் பற்றி ஒன்றுமே தெரியாது!!
பதிலளிநீக்கு