வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

ஸ்ரீலட்சுமி தேவி பிரசன்னமானாள்


              

சீக்கிரம் கோடிக்கணக்கில் பணம் பண்ணும் பலவிதமான வித்தைகளைப் பற்றிய செய்திகளை வாசித்து வாசித்து, இரவில் கொஞ்ச நாளாகவே அது சம்பந்தமான கனவுகளே வந்து கொண்டிருக்கின்றன. அது தவிர மனதிற்குள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாமும் ஒரு நூறு, இருநூறு கோடி தேத்தியிருக்கலாமே என்ற அங்கலாய்ப்பும் அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருக்கிறது.

இப்படி தூக்கம் வராமல் யோசித்துக்கொண்டு இருக்கையில், நேற்று இரவு சாட்சாத் ஸ்ரீலட்சுமிதேவி, என் கனவில் தரிசனம் தந்தாள். கையில் ஒரு பைரவரைப் பிடித்துக்கொண்டு இருந்தாள். மகனே, உன் அங்கலாய்ப்பைக் கேட்டேன். இன்னும் காலம் கெட்டுப் போய்விடவில்லைதமிழ்நாட்டு மக்கள் இன்னும் எத்தனை தடவை வேண்டுமானாலும் மொட்டை போட்டுக்கொண்டு நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வார்கள். நீ கவலைப்படாதே. இந் பைரவரை வைத்துக்கொண்டு உன் ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள் என்று திருவாய் மலர்ந்தருளினாள்.

ஆஹா, என்னே அம்மன் அருள் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு இனிமேல் என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு திட்டம் தயாரித்திருக்கிறேன். தமிழ் மக்கள் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பைரவர் நாய்த்தோல் கம்பெனி பிரைவேட் லிமிடெட்

அதிர்ஷ்டம் அழைக்கிறது
நாய்த்தோல் மிகவும் மென்மையானது. இதனால் செய்யப்படும் தோல் பொருட்களுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பயங்கர டிமாண்ட் இருக்கிறது. இந்தியாவில் மேனகா காந்தி புண்ணியத்தினால் பெரும் அளவில் நாய்கள் இருக்கின்றன. அதனால் இந்தியாவில் ஒரு நாய்த்தோல் மற்றும் நாய்த்தோலினால் செய்த கைவினைப் பொருள்கள் செய்யும் கம்பெனி ஆரம்பிக்கப் போகிறோம். தோல் உரித்த பிறகு அந்த நாயின் இறைச்சி பதப்படுத்தப்பட்டு பிலிப்பைன்ஸ், வியட்னாம், கொரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். அந்த நாடுகளில் நாய் இறைச்சிக்கு மிகுந்த தேவை இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த தொழிற்சாலைக்கு தினந்தோறும் ஆயிரம் நாய்கள் தேவைப்படுகின்றன. ஒரு நாய்க்கு ஆயிரம் ரூபாய் வீதம் ரொக்கம் கொடுத்து வாங்கப்படும். நூறு நாய்கள் சப்ளை செய்தவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் போனஸும், ஒரு தங்க நாணயமும் கொடுக்கப்படும்.

இந்தக் கம்பெனிக்கு நாய்கள் சப்ளை செய்ய விருப்பமுள்ளவர்கள் கம்பெனியில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளவேண்டும். டெபாசிட் தொகை பத்தாயிரம் ரூபாய் கட்டி, அடையாள அட்டை வாங்கிக் கொள்ளவேண்டும். உங்கள் டெபாசிட் பணத்திற்கு 100 % காரன்டி கொடுக்கும் நிறுவனம் இது ஒன்றே. மற்ற கம்பெனிகளைப்போல் ஏமாற்றி விடுவார்களோ என்ற சந்தேகம் அணுவளவு கூட வேண்டாம்.

குறிப்பிட்ட அளவு நபர்களை மட்டுமே ரிஜிஸ்டர் செய்வதால் உங்கள் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு முந்துங்கள்.

இந்த விளம்பரம் முன்னணி செய்தித்தாள்களில் எல்லாம் நாளைக்கு வெளியாகும். பதிவுலக நண்பர்களுக்கு மட்டும் தனிச்சலுகையாக இன்றே ரிஜிஸ்டர் செய்யப்படும். முந்துங்கள்.

பின்குறிப்பு: ஈமு கோழி, வேலை வாய்ப்பு, நிதி நிறுவனங்கள் போன்ற கம்பெனிகளின் கேஸ்களை நடத்துவதிலும், முன் ஜாமீன் எடுப்பதிலும், முன் அனுபவமுள்ள, நல்ல வக்கீல்கள் தேவை. மாதக்கணக்கில் தலைமறைவாக இருக்க நல்ல பண்ணை வீடுகள் ஏற்பாடு செய்யவும் தெரிந்திருந்தால் நல்லது. நல்ல பீஸ் கொடுக்கப்படும். பதிவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உடனடியாக ஆபீஸுக்கு வரவும். – இந்த பின்குறிப்பு விளம்பரத்தில் வெளியாகாது.