வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

ஸ்ரீலட்சுமி தேவி பிரசன்னமானாள்


              

சீக்கிரம் கோடிக்கணக்கில் பணம் பண்ணும் பலவிதமான வித்தைகளைப் பற்றிய செய்திகளை வாசித்து வாசித்து, இரவில் கொஞ்ச நாளாகவே அது சம்பந்தமான கனவுகளே வந்து கொண்டிருக்கின்றன. அது தவிர மனதிற்குள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாமும் ஒரு நூறு, இருநூறு கோடி தேத்தியிருக்கலாமே என்ற அங்கலாய்ப்பும் அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருக்கிறது.

இப்படி தூக்கம் வராமல் யோசித்துக்கொண்டு இருக்கையில், நேற்று இரவு சாட்சாத் ஸ்ரீலட்சுமிதேவி, என் கனவில் தரிசனம் தந்தாள். கையில் ஒரு பைரவரைப் பிடித்துக்கொண்டு இருந்தாள். மகனே, உன் அங்கலாய்ப்பைக் கேட்டேன். இன்னும் காலம் கெட்டுப் போய்விடவில்லைதமிழ்நாட்டு மக்கள் இன்னும் எத்தனை தடவை வேண்டுமானாலும் மொட்டை போட்டுக்கொண்டு நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வார்கள். நீ கவலைப்படாதே. இந் பைரவரை வைத்துக்கொண்டு உன் ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள் என்று திருவாய் மலர்ந்தருளினாள்.

ஆஹா, என்னே அம்மன் அருள் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு இனிமேல் என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு திட்டம் தயாரித்திருக்கிறேன். தமிழ் மக்கள் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பைரவர் நாய்த்தோல் கம்பெனி பிரைவேட் லிமிடெட்

அதிர்ஷ்டம் அழைக்கிறது
நாய்த்தோல் மிகவும் மென்மையானது. இதனால் செய்யப்படும் தோல் பொருட்களுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பயங்கர டிமாண்ட் இருக்கிறது. இந்தியாவில் மேனகா காந்தி புண்ணியத்தினால் பெரும் அளவில் நாய்கள் இருக்கின்றன. அதனால் இந்தியாவில் ஒரு நாய்த்தோல் மற்றும் நாய்த்தோலினால் செய்த கைவினைப் பொருள்கள் செய்யும் கம்பெனி ஆரம்பிக்கப் போகிறோம். தோல் உரித்த பிறகு அந்த நாயின் இறைச்சி பதப்படுத்தப்பட்டு பிலிப்பைன்ஸ், வியட்னாம், கொரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். அந்த நாடுகளில் நாய் இறைச்சிக்கு மிகுந்த தேவை இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த தொழிற்சாலைக்கு தினந்தோறும் ஆயிரம் நாய்கள் தேவைப்படுகின்றன. ஒரு நாய்க்கு ஆயிரம் ரூபாய் வீதம் ரொக்கம் கொடுத்து வாங்கப்படும். நூறு நாய்கள் சப்ளை செய்தவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் போனஸும், ஒரு தங்க நாணயமும் கொடுக்கப்படும்.

இந்தக் கம்பெனிக்கு நாய்கள் சப்ளை செய்ய விருப்பமுள்ளவர்கள் கம்பெனியில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளவேண்டும். டெபாசிட் தொகை பத்தாயிரம் ரூபாய் கட்டி, அடையாள அட்டை வாங்கிக் கொள்ளவேண்டும். உங்கள் டெபாசிட் பணத்திற்கு 100 % காரன்டி கொடுக்கும் நிறுவனம் இது ஒன்றே. மற்ற கம்பெனிகளைப்போல் ஏமாற்றி விடுவார்களோ என்ற சந்தேகம் அணுவளவு கூட வேண்டாம்.

குறிப்பிட்ட அளவு நபர்களை மட்டுமே ரிஜிஸ்டர் செய்வதால் உங்கள் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு முந்துங்கள்.

இந்த விளம்பரம் முன்னணி செய்தித்தாள்களில் எல்லாம் நாளைக்கு வெளியாகும். பதிவுலக நண்பர்களுக்கு மட்டும் தனிச்சலுகையாக இன்றே ரிஜிஸ்டர் செய்யப்படும். முந்துங்கள்.

பின்குறிப்பு: ஈமு கோழி, வேலை வாய்ப்பு, நிதி நிறுவனங்கள் போன்ற கம்பெனிகளின் கேஸ்களை நடத்துவதிலும், முன் ஜாமீன் எடுப்பதிலும், முன் அனுபவமுள்ள, நல்ல வக்கீல்கள் தேவை. மாதக்கணக்கில் தலைமறைவாக இருக்க நல்ல பண்ணை வீடுகள் ஏற்பாடு செய்யவும் தெரிந்திருந்தால் நல்லது. நல்ல பீஸ் கொடுக்கப்படும். பதிவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உடனடியாக ஆபீஸுக்கு வரவும். – இந்த பின்குறிப்பு விளம்பரத்தில் வெளியாகாது.

25 கருத்துகள்:

 1. ஹா ஹா ஹா.. ஐயா உங்கள் திட்டம் அட்டகாசமாக உள்ளது.. தூரதிருஷ்டவசமாக இங்கே அமெரிக்காவில் தெரு நாய்கள் இல்லாததால் அதில் என்னால் சேர முடியவில்லை என பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன் :))

  ***

  உங்கள் கனவில் இப்படி அடிக்கடி வரும் லட்சுமி தேவியை கொஞ்சம் அவ்வப்போது எங்கள் பக்கமும் ரீடைரக்ட் செய்தால் நாங்களும் அவ்வப்போது பதிவு எழுதி பிழைப்போம், அருள் கூர்ந்து பரிசீலனை செய்யவும்!

  ***

  இப்போது இந்திய நேரம் அதிகாலை மூன்று, இந்த நேரத்தில் தூங்காமல் பதிவு போடுவதன் ரக்சியம் என்ன என்று கூறுங்களேன்? :) இப்படி இரவு முழுக்க முழித்திருந்தால், எப்போது லட்சுமிதேவி உங்கள் கனவில் வருகிறாள்? :)

  ***

  உங்க திட்டத்துக்கு பதிவர்கள் ஆதரவு இருக்கோ, இல்லியோ, பொதுமக்கள் ஆதரவு பிச்சுக் கொண்டு பெருகும்! வாழ்த்துகள்.. கூடிய சீக்கிரம் ஏதோ ஒரு டிவியில் பிசினஸ் மேக்னட்டாக தோன்றி காலை வணக்கம் நிகழ்ச்சி தருவீர்கள் என உறுதியாக நம்புகிறோம்!! :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு வாரமாக டெலிபோன் லைன் முடங்கிப்போனதால் இணையப்பக்கம் அதிகமாக வரமுடியவில்லை. நேற்றுதான் டெலிபோன் இணைப்பை உயிர்ப்பித்தார்கள். இரண்டாவது நான் வைத்திருக்கும் இணையத் திட்டத்தில் காலை 2 மணியிலிருந்து 8 மணி வரை மட்டுமே அன்லிமிடட் டவுன்லோடு வசதி உள்ளது. மற்ற நேரங்களில் ஃபிரீ டவுன்லோடு 1.5 ஜி.பி. மட்டுமே. உங்கள் ஊர் மாதிரி இணைய வசதிகள் இங்கு இல்லை. இன்று மாதக் கடைசி. நேற்றே என் ஃபிரீ லிமிட் முடிந்து 52 எம்.பி. அதிகமாகி விட்டது. 52 ரூபாய் தண்டம் அழுகவேண்டும். ஆகவே பழைய பாக்கிகளை (பின்னூட்டம் போடுவதுதான்-வேறென்ன?) தீர்த்து விடலாம் என்று நேரமே எழுந்து விட்டேன். தவிர காலை நேரங்களில் தூக்கம் வருவதுமில்லை.

   ஏன் சார், உங்க ஊர்ல இல்லாத லட்சுமியா?

   தெருநாய்கள் மட்டுமல்லாமல் வீட்டு நாய்களும் வாங்கிக் கொள்ளப்படும். ஆகவே அங்கிருந்தும் உங்கள் பங்களிப்பைக் கொடுக்கலாம். வாஷிங்க்டனில் ஒரு பிராஞ்ச் போடலாம் என்று இருக்கிறோம். அதை நீங்கள் எடுத்து பார்ட் டைமாக நடத்தலாமே?

   உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. டி.வி. யில் தோன்றுவது உறுதி. அது என்ன நிகழ்ச்சி என்பது பிற்பாடுதான் தெரியும்?!

   நீக்கு
 2. ஐயோ..... ஆட்டைக் கடிச்சு மாட்டைக்கடிச்சு, இப்போ நாயைக் கடிச்சுருச்சா இந்த அதிர்ஷ்ட தேவதை!!!

  பதிலளிநீக்கு
 3. ஹா... ஹா... எப்படி சார் இப்படி எல்லாம் சிந்திக்க முடிகிறது...? எல்லோரையும் சிரிக்க வைத்து விடுகிறீர்கள்... (அதற்கு, எனக்கு பீஸ் தர வேண்டும் என்று சொல்லி விடாதீர்கள்... ஹா... ஹா...)

  நன்றி... (TM2)

  பதிலளிநீக்கு
 4. அய்யா.. இந்த பத்தாயிரம் கட்டினா ஒரு தங்க நாணயம் தர மாதிரி ஒரு ஸ்கீம் இருக்குதாமே.. அதே மாதிரி ஈரோட்ல இருபதாயிரம் கட்னா எலிபன்ட் குடுக்கறதா பேசிக்கறாங்களே, அத பத்தின விவரம் எதாவது இருக்குதுங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆறு மாசம் பொறுத்துக்குங்க, நானே அந்த திட்டத்தையும் ஆரம்பிச்சுடறேன். யானையைக் கட்டறதுக்கு இப்பவே எடம் தயார் பண்ணீடுங்க.

   நீக்கு
 5. நான் போட்ட பின்னூட்டத்தைக் காணோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயையோ. நான் ஒண்ணும் பண்ணலயே, ஸ்ரீராம் சார். எங்கயாச்சும் காணாக்கிட்டீங்களா? இல்ல நீங்க போட்ட டெபாசிட்ட காணலியா? இன்னும் நான் டெபாசிட் வாங்கவே ஆரம்பிக்கலியே?

   நீக்கு
 6. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நினைக்கிறீர்கள் போலும். அந்த விளம்பரத்தைவிட கீழே தந்துள்ள பின் குறிப்புதான் அருமை!

  பதிலளிநீக்கு

 7. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஒரு செய்தி படித்தேன்.அதில் நாய்களைப் பிடித்துப் போய், மயக்க மருந்து கொடுத்து பின் அதைக் கொன்று தோலுரித்து வ்ற்பதாகவும் அந்த நாய்க்கறிகள் ரோடோர டாபாக்களுக்கு விற்பதாகவும் நாய் பிரியானி செய்து விற்கிறார்கள் என்றும் எழுதி இருந்தது.அவர்கள் கனவிலும் லக்ஷ்மி வந்திருப்பாளோ என்னவோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தீர்களா என் தீர்க்க தரிசனத்தை? இந்த உலகில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

   நீக்கு
 8. ஸ்ரீலட்சுமிதேவி, என் கனவில் தரிசனம் தந்தாள். கையில் ஒரு பைரவரைப் பிடித்துக்கொண்டு இருந்தாள்.

  திட்டம் வெற்றிகரமாக குரைக்கும் போலிருக்கிறது... பாராட்டுக்கள் !

  பதிலளிநீக்கு
 9. ஹாஹஹா... ரூம் போட்டு யோசுச்சதாங்க சார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லீங்க, இதெல்லாம் அப்படியே நம்ம களிமண் மூளைல முளைக்கற காளானுங்க.

   நீக்கு
 10. "மணிராஜ்" தளத்தின் மூலம் வந்தேன்!
  இந்த திட்டம் செயலுக்கு வந்தாலும் ஆச்சர்யம் இல்லை!

  பார்க்க:

  தாமரை மதுரை

  பதிலளிநீக்கு
 11. பைரவர் சேவை நாட்டுக்கு சேவை. எப்படியும் கூட்டி கழிச்சுப் பார்த்தா நம்ம தோஸ்த் சத்யராஜ் உங்களுக்கு சொந்தமாக கூட இருக்கலாம். அவர் ராசி நல்ல ராசி!

  மற்றொரு இலவச சட்ட உதவி சத்யராசுக்கு. சத்யராசு சொல்லலாம், "நான் கடவுள் கூடத்தான் இல்லன்னு சொல்றேன்; நீங்க கேட்டீங்களா?"

  பதிலளிநீக்கு
 12. //பைரவர் சேவை நாட்டுக்கு தேவை.//

  கல்யாணப் பரிசு தங்கவேலு ஜோக்கை இன்னும் ஞாபகம் வைத்திருப்பதைப் பாராட்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 13. பைரவர் சேவை நாட்டுக்கு சேவை. இது, typing மிஷ்டீக்; இந்த தவறை சுட்டிக் காட்டாமல் 'கல்யாணப் பரிசு தங்கவேலு ஜோக்கை இன்னும் ஞாபகம் வைத்திருப்பதைப் பாராட்டுகிறேன்" என்று சொன்னது உங்க பெருந்தன்மையை காட்டுகிறது..

  சரியான வசனம், "பைரவர் சேவை நாட்டுக்கு தேவை!"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பைரவர் சேவை நாட்டுக்கு சேவை//

   இதுவும் சரிதானே. தெரு நாய்களை ஒழிப்பது நாட்ட மக்களுக்கு செய்யும் சேவைதானே.

   நீக்கு
 14. அட்டகாசமான ஐடியாவா இருக்கே...

  மேனகா காந்தி மெம்பரா சேரணும்னு கேட்க போறாங்க! :)

  பதிலளிநீக்கு
 15. மதிப்பிற்குறிய ஐயா

  தங்கள் எண்ணமும் எனது எண்ண ஓட்டமும் ஒரே மாதிரி இருப்பதனால் என்னையும் தங்கள் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துகொள்ளும்படி கேட்டு கொல்லு கிறேன்,

  (பின்குறிப்பு) முதலீடு செய்யாத பங்குதாரராக மறந்துவிட வேண்டாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //என்னையும் தங்கள் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துகொள்ளும்படி கேட்டு கொல்லுகிறேன்//

   கட்டாயம் சேர்த்துக்கிறேன். ஆனால் உங்கள் வார்த்தைகள்தான் என்னை (கொல்லுகிறேன்) கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. நான் இன்னும் கொஞ்ச நாள் இப்பூவுலகில் இருக்கலாம் என்று திட்டம் போட்டுருக்கிறேன். இந்த மாதிரி திட்டங்கள் நிறைய கைவசம் இருக்கிறது. அதையெல்லாம் நிறைவேற்ற வேண்டும். எதற்கும் போகும்போது உங்கள் பெயரை என் உயிலில் குறிப்பிட்டு விட்டுப்போகிறேன். கட்டாயம் போலீஸ் உங்கள் வீடு தேடி வரும்.

   நீக்கு
 16. இன்று வலைச்சரத்தில் உங்க பதிவை பகிர்ந்துள்ளேன்.வருக! கருத்திடுக!
  மிக்க நன்றி!

  http://blogintamil.blogspot.in/

  பதிலளிநீக்கு