வியாழன், 6 செப்டம்பர், 2012

கையைச் சுட்டுக் கொண்டேன்.


நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அதாவது இல்லத்தரசிகளின் பாஷையிலே “தண்டச்சோறு”. பொழுது போவதற்காக இந்தக் கருமத்தை (கம்ப்யூட்டரை என்று பொருள் கொள்ளவும்) நோண்டிக்கொண்டு இருக்கிறேன். இதற்காக நான் பெறும் புகழ்மாலைகள் அளவிற்கரியது. முக்கியமாக மூன்று வேளைகளில் கிடைப்பது – சாப்பிடக்கூப்பிட்டது கூடக் காது கேட்காமல் அந்தச் சனியனை எத்தனை நேரம் கட்டீட்டு அழுவீங்க – இது ரொம்பவும் சாந்தமானது. உச்சத்தைக் கூறினால் உங்கள் இளகிய மனது தாங்காது என்பதினால் தவிர்க்கிறேன்.

இப்படியாக பொழுது நல்லபடியாக போய்கொண்டிருக்கும் போது, ஏழரை நாட்டுச் சனி கூகுள்காரன் ரூபத்தில் வந்தது. அவன் ஒரு நாள் ஒரு செய்தி போட்டிருந்தான். அதாவது மைக்ரோசாஃப்ட் கம்பெனி ஒரு புது ஆபரேட்டிங்க் சிஸ்டம் வெளியிடப்போகிறான். “விண்டோஸ் 8” என்பது அதன் பெயர். உலகத்தில் அந்த மாதிரியான புரோக்ராம் இது வரையில் வந்ததில்லை இனிமேலும் வரப்போவதில்லை, அதனுடைய டெஸ்க் டாப்பைப் பார்த்தால் அப்படியே மயங்கி விழுந்து விடுவீர்கள், அதனுடைய செயல் திறன் அலாவுதீனின் பூதத்தைக் காட்டிலும் அற்புதமாக இருக்கும், என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.

எனக்குச் சனி காத்துக்கொண்டிருப்பது தெரியாமல், நான் இந்த பசப்பு வார்த்தைகளில் மயங்கி விட்டேன். அதுவும் இந்த விண்டோஸ் 8 புரொக்ராம் பரீட்சித்துப் பார்ப்பவர்களுக்காக இலவசமாகத் தரப்படும் என்று வேறு போட்டிருந்தார்களா, அது வேறு என்னுடைய ஆர்வத்தை காட்டுத்தீ போல வளர்த்தி விட்டது. சரி என்னதான் நடக்கும் பார்த்து விடலாம் என்று துணிந்து அதற்குண்டான ஏற்பாடுகளில் இறங்கினேன்.

முதலில் அது சம்பந்தமான செய்திகளை எல்லாம் கூகுளில் தேடிப் படித்தேன். நிறையப் பேர் சிபாரிசு செய்திருந்தார்கள். (இப்போதுதான் தெரிகிறது – எல்லாப் பயல்களும் மைக்ரோசாஃப்ட் கம்பெனியில் கமிஷன் வாங்கும் பயல்கள் என்று). கொஞ்சம் பேர் இந்தப் புரொக்ராம் சரிப்படாது என்றும் சொல்லியிருந்தார்கள். இவர்கள் எல்லாம் மைக்ரோசாஃப்ட் மேல் அவர்களுக்கு இருக்கும் பொறாமையினால் அப்படி சொல்கிறார்கள் என்று நினைத்தேன்.

சரி, இந்த விண்டோஸ் 8 ஐ எப்படி கம்ப்யூட்டரில் நிறுவுவது என்று ஆராய்ச்சி பண்ணி, நோட்ஸ் எடுத்து வைத்தேன். அதில் முதல் ஸ்டெப். இன்டர்நெட்டில் இருந்து அந்த புரொக்ராமை டவுன்லோடு செய்யவேண்டும். அது மொத்தம் 2.5 ஜி.பி. அளவு கொண்டது. என் கம்பயூட்டரில் நான் வைத்திருக்கும் இன்டர்நெட் பிளானில் அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரை டவுன்லோடு இலவசம். அந்த தைரியத்தில் காலை 2 மணிக்கே எழுந்திருந்து டவுன் லோடை ஆரம்பித்தேன். டவுன்லோடிங்க் ஆமை வேகத்தில் நடந்து நான்கு மணி நேரத்தில் முடிந்தது.

அது ISO image ரூபத்தில் இருந்தது. அதை டிவிடி யில் காப்பி பண்ணவேண்டும். அந்த வேலையை ஆரம்பித்தால் டவுன்லோடு சரியில்லை, எங்கேயோ ஒரு தப்பு இருக்கிறது, காப்பி செய்யமுடியாது என்று கம்ப்யூட்டர் சொல்லிவிட்டு படுத்துக் கொண்டது. அதற்கு அப்பீல் கிடையாது. இந்த இடத்தில் எனக்கு இந்த வேலை நமக்காகாது என்று புரிந்திருக்கவேண்டும். ஆனால் என் களிமண் மூளைக்குப் புரியவில்லை.
எல்லாவற்றையும் ஈரத்துணி + டெட்டால் போட்டுத்துடைத்து விட்டு மறுபடியும் ஆரம்பித்தேன். நாலு மணி நேரம் டவுன் லோடிங்க். காப்பி பண்ண ஆரம்பித்தால், திரும்பவும் பழைய குருடிக் கதைதான். இதை விடக்கூடாது என்று மறுபடியும் ஈரத்துணியில் ஸ்ட்ராங்க் பினாயிலில் தோய்த்து எல்லாவற்றையும் துடைத்தேன்.

பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு அடுத்த நாள் மீண்டும் ஆரம்பித்தேன். எல்லாம் சரியாக நடந்தது. ISO image சரியாக டவுன்லோடு ஆகி DVD யில் காப்பி செய்தாகி விட்டது. இனி இன்ஸ்டால் செய்யவேண்டியதுதான் பாக்கி. மனதில் கடவுளை வேண்டிக்கொண்டு இன்ஸ்டலேஷனை ஆரம்பித்தேன். எல்லாம் சரியாக நடந்தது. ஆஹா, இனி நாம் ஆகாயத்தில் மிதக்கப்போகிறோம் என்று கம்பயூட்டரை ஆன் செய்தேன். விண்டோஸ் 8 ன் வெல்கம் ஸ்கிரீன் தெரிந்தது. கலர் கலராக, கட்டம் கட்டமாக இருந்தது. என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் விழித்தேன். நமக்குத் தெரிந்ததெல்லாம் மவுஸ்தானே. சரி என்று மவுஸை ஒவ்வொரு கட்டமாக கொண்டு போய் அழுத்தினேன். அது உடனே இன்டர்நெட்டுக்குப் போகவேண்டும் என்றது. சரி, போய்த்தொலை என்றதும் அங்கே போய் கொஞ்ச நேரம் இருந்து விட்டு பழைய இடத்திற்கே வந்து விட்டது. அங்க போய் என்ன செய்ததோ கூகுளாண்டவர்க்கே வெளிச்சம். (ஒரு சமயம் பாத்ரூம் போய்ட்டு வந்திருக்குமோ, என்னமோ?) அடுத்த கட்டத்தை அழுத்தினேன். அதுவும் ஸ்கூல் பையன் ஒரு விரலைக் காட்டுவானே, அந்த மாதிரி இன்டர்நெட் போகவேண்டும் என்று காட்டியது. இப்படி எந்தக் கட்டத்தை அழுத்தினாலும் இதே கதைதான்.

இப்படி கொஞ்ச நேரம் விளையாடினோம். அப்புறம் எனக்குத் தூக்கம் ஆட்டியது. சரி, கம்ப்யூட்டரை ஷட்டவுன் பண்ணலாம் என்றால் அதற்கு ஒரு வழியையும் காணவில்லை. நானும் அரை மணி நேரம் போராடிவிட்டு கூகுளாண்டவரைக் கேட்டால், அதுவா, அதை ஒளித்து வைத்திருக்றோம், இங்க அமெரிக்காவில் யாரும் கம்ப்யூட்டரை ஷட்டவுனே பண்ணமாட்டார்கள், நீங்க ஏன் ஷட்டவுன் பண்ணுகிறீர்கள் என்று கேட்டது. சாமி, எங்க ஊர்ல கரண்டுக்கு சார்ஜ் ஏகப்பட்டது கட்டவேண்டும். இன்டெர்நெட்டுக்கும் செலவு அதிகம். அதனால் வேலை முடிந்ததும் கம்ப்யூட்டரை ஷட்டவுன் பண்ணுவதுதான் எங்கள் வழக்கம் என்றவுடன் ஷட்டவுன் பண்ணும் வழியைக் காட்டியது. ஒரு வழியாக கம்ப்யூட்டரை ஷட்டவுன் பண்ணிவிட்டு கொஞ்ச நேரம் கண்ணசந்தேன்.

ஒரு கனவு. அலாவுதீன் பூதம் மாதிரி ஒரு பூதம் என்னை விழுங்க வருகிறது. அரண்டு போய் எழுந்து பார்த்தால் கனவு என்று தெரிந்தது. உடம்பெல்லாம் பயத்தில் வேர்த்துப்போய்விட்டது. எங்கு பார்த்தாலும் கலர் கலராக கட்டங்களே தெரிகின்றன. எதை என்ன செய்வது என்று புரியவில்லை. இருட்டு ரூமுக்குள் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது என்று சொல்வார்கள். அது போல ஆகிவிட்டது.   

யோசித்தேன். இந்த வேலை நமக்கு உதவாது. பழைய சிஸ்டம்தான் சரி என்று எல்லாவற்றையும் அழித்துவிட்டு விண்டோஸ் 7 க்குத் திரும்பி விட்டேன். இந்த விண்டோஸ் 8 சமாசாரம் டேப்ளட் பிசி, மற்றும் 24 மணிநேர இன்டெர்நெட், கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்யத் தேவையில்லாத சூழ்நிலை ஆகியவற்றுக்கு மிகவும் உகந்தது. இந்த விண்டோஸ் 8 இன்ஸ்டலேஷன் சி.டி. சும்மா இருக்கிறது. யாருக்காவது தேவைப்பட்டால் தட்சிணையுடன் தானம் கொடுக்கப்படும். முந்தவும்.
 
இப்படியாக சட்டி சுட்டதடா, கை விட்டதடா என்று கையைச் சுட்டுக்கொண்டேன்.                                     

காலை 7.45 மணி.

பின் குறிப்பு: இன்னும் விண்டோஸ் 8 ஐ அழிக்கவில்லை. இவ்வளவு வேலை செய்து அதை இன்ஸ்டால் பண்ணியிருக்கிறேன், அதை சும்மா விடுவதா என்று உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று அதை நான் ஜெயிக்கவேண்டும் இல்லை அது என்னை ஜெயிக்கவேண்டும். இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று துணிந்து விட்டேன்.