நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அதாவது இல்லத்தரசிகளின் பாஷையிலே “தண்டச்சோறு”.
பொழுது போவதற்காக இந்தக் கருமத்தை (கம்ப்யூட்டரை என்று பொருள் கொள்ளவும்) நோண்டிக்கொண்டு
இருக்கிறேன். இதற்காக நான் பெறும் புகழ்மாலைகள் அளவிற்கரியது. முக்கியமாக மூன்று வேளைகளில்
கிடைப்பது – சாப்பிடக்கூப்பிட்டது கூடக் காது கேட்காமல் அந்தச் சனியனை எத்தனை நேரம்
கட்டீட்டு அழுவீங்க – இது ரொம்பவும் சாந்தமானது. உச்சத்தைக் கூறினால் உங்கள் இளகிய
மனது தாங்காது என்பதினால் தவிர்க்கிறேன்.
இப்படியாக பொழுது நல்லபடியாக போய்கொண்டிருக்கும் போது, ஏழரை நாட்டுச் சனி கூகுள்காரன்
ரூபத்தில் வந்தது. அவன் ஒரு நாள் ஒரு செய்தி போட்டிருந்தான். அதாவது மைக்ரோசாஃப்ட்
கம்பெனி ஒரு புது ஆபரேட்டிங்க் சிஸ்டம் வெளியிடப்போகிறான். “விண்டோஸ் 8” என்பது அதன்
பெயர். உலகத்தில் அந்த மாதிரியான புரோக்ராம் இது வரையில் வந்ததில்லை இனிமேலும் வரப்போவதில்லை,
அதனுடைய டெஸ்க் டாப்பைப் பார்த்தால் அப்படியே மயங்கி விழுந்து விடுவீர்கள், அதனுடைய
செயல் திறன் அலாவுதீனின் பூதத்தைக் காட்டிலும் அற்புதமாக இருக்கும், என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.
எனக்குச் சனி காத்துக்கொண்டிருப்பது தெரியாமல், நான் இந்த பசப்பு வார்த்தைகளில்
மயங்கி விட்டேன். அதுவும் இந்த விண்டோஸ் 8 புரொக்ராம் பரீட்சித்துப் பார்ப்பவர்களுக்காக
இலவசமாகத் தரப்படும் என்று வேறு போட்டிருந்தார்களா, அது வேறு என்னுடைய ஆர்வத்தை காட்டுத்தீ
போல வளர்த்தி விட்டது. சரி என்னதான் நடக்கும் பார்த்து விடலாம் என்று துணிந்து அதற்குண்டான
ஏற்பாடுகளில் இறங்கினேன்.
முதலில் அது சம்பந்தமான செய்திகளை எல்லாம் கூகுளில் தேடிப் படித்தேன். நிறையப்
பேர் சிபாரிசு செய்திருந்தார்கள். (இப்போதுதான் தெரிகிறது – எல்லாப் பயல்களும் மைக்ரோசாஃப்ட்
கம்பெனியில் கமிஷன் வாங்கும் பயல்கள் என்று). கொஞ்சம் பேர் இந்தப் புரொக்ராம் சரிப்படாது
என்றும் சொல்லியிருந்தார்கள். இவர்கள் எல்லாம் மைக்ரோசாஃப்ட் மேல் அவர்களுக்கு இருக்கும்
பொறாமையினால் அப்படி சொல்கிறார்கள் என்று நினைத்தேன்.
சரி, இந்த விண்டோஸ் 8 ஐ எப்படி கம்ப்யூட்டரில் நிறுவுவது என்று ஆராய்ச்சி பண்ணி,
நோட்ஸ் எடுத்து வைத்தேன். அதில் முதல் ஸ்டெப். இன்டர்நெட்டில் இருந்து அந்த புரொக்ராமை
டவுன்லோடு செய்யவேண்டும். அது மொத்தம் 2.5 ஜி.பி. அளவு கொண்டது. என் கம்பயூட்டரில்
நான் வைத்திருக்கும் இன்டர்நெட் பிளானில் அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரை டவுன்லோடு
இலவசம். அந்த தைரியத்தில் காலை 2 மணிக்கே எழுந்திருந்து டவுன் லோடை ஆரம்பித்தேன். டவுன்லோடிங்க்
ஆமை வேகத்தில் நடந்து நான்கு மணி நேரத்தில் முடிந்தது.
அது ISO image ரூபத்தில் இருந்தது. அதை டிவிடி யில் காப்பி பண்ணவேண்டும். அந்த
வேலையை ஆரம்பித்தால் டவுன்லோடு சரியில்லை, எங்கேயோ ஒரு தப்பு இருக்கிறது, காப்பி செய்யமுடியாது
என்று கம்ப்யூட்டர் சொல்லிவிட்டு படுத்துக் கொண்டது. அதற்கு அப்பீல் கிடையாது. இந்த
இடத்தில் எனக்கு இந்த வேலை நமக்காகாது என்று புரிந்திருக்கவேண்டும். ஆனால் என் களிமண்
மூளைக்குப் புரியவில்லை.
எல்லாவற்றையும்
ஈரத்துணி + டெட்டால் போட்டுத்துடைத்து விட்டு மறுபடியும் ஆரம்பித்தேன். நாலு மணி நேரம்
டவுன் லோடிங்க். காப்பி பண்ண ஆரம்பித்தால், திரும்பவும் பழைய குருடிக் கதைதான். இதை
விடக்கூடாது என்று மறுபடியும் ஈரத்துணியில் ஸ்ட்ராங்க் பினாயிலில் தோய்த்து எல்லாவற்றையும்
துடைத்தேன்.
பிள்ளையாரைக்
கும்பிட்டு விட்டு அடுத்த நாள் மீண்டும் ஆரம்பித்தேன். எல்லாம் சரியாக நடந்தது. ISO image சரியாக
டவுன்லோடு ஆகி DVD யில் காப்பி செய்தாகி விட்டது. இனி இன்ஸ்டால் செய்யவேண்டியதுதான்
பாக்கி. மனதில் கடவுளை வேண்டிக்கொண்டு இன்ஸ்டலேஷனை ஆரம்பித்தேன். எல்லாம் சரியாக நடந்தது.
ஆஹா, இனி நாம் ஆகாயத்தில் மிதக்கப்போகிறோம் என்று கம்பயூட்டரை ஆன் செய்தேன். விண்டோஸ்
8 ன் வெல்கம் ஸ்கிரீன் தெரிந்தது. கலர் கலராக, கட்டம் கட்டமாக இருந்தது. என்ன செய்வது
என்று கொஞ்ச நேரம் விழித்தேன். நமக்குத் தெரிந்ததெல்லாம் மவுஸ்தானே. சரி என்று மவுஸை
ஒவ்வொரு கட்டமாக கொண்டு போய் அழுத்தினேன். அது உடனே இன்டர்நெட்டுக்குப் போகவேண்டும்
என்றது. சரி, போய்த்தொலை என்றதும் அங்கே போய் கொஞ்ச நேரம் இருந்து விட்டு பழைய இடத்திற்கே
வந்து விட்டது. அங்க போய் என்ன செய்ததோ கூகுளாண்டவர்க்கே வெளிச்சம். (ஒரு சமயம் பாத்ரூம்
போய்ட்டு வந்திருக்குமோ, என்னமோ?) அடுத்த கட்டத்தை அழுத்தினேன். அதுவும் ஸ்கூல் பையன்
ஒரு விரலைக் காட்டுவானே, அந்த மாதிரி இன்டர்நெட் போகவேண்டும் என்று காட்டியது. இப்படி
எந்தக் கட்டத்தை அழுத்தினாலும் இதே கதைதான்.
இப்படி கொஞ்ச நேரம் விளையாடினோம். அப்புறம் எனக்குத் தூக்கம் ஆட்டியது. சரி,
கம்ப்யூட்டரை ஷட்டவுன் பண்ணலாம் என்றால் அதற்கு ஒரு வழியையும் காணவில்லை. நானும் அரை
மணி நேரம் போராடிவிட்டு கூகுளாண்டவரைக் கேட்டால், அதுவா, அதை ஒளித்து வைத்திருக்றோம்,
இங்க அமெரிக்காவில் யாரும் கம்ப்யூட்டரை ஷட்டவுனே பண்ணமாட்டார்கள், நீங்க ஏன் ஷட்டவுன்
பண்ணுகிறீர்கள் என்று கேட்டது. சாமி, எங்க ஊர்ல கரண்டுக்கு சார்ஜ் ஏகப்பட்டது கட்டவேண்டும்.
இன்டெர்நெட்டுக்கும் செலவு அதிகம். அதனால் வேலை முடிந்ததும் கம்ப்யூட்டரை ஷட்டவுன்
பண்ணுவதுதான் எங்கள் வழக்கம் என்றவுடன் ஷட்டவுன் பண்ணும் வழியைக் காட்டியது. ஒரு வழியாக
கம்ப்யூட்டரை ஷட்டவுன் பண்ணிவிட்டு கொஞ்ச நேரம் கண்ணசந்தேன்.
ஒரு கனவு. அலாவுதீன் பூதம் மாதிரி ஒரு பூதம் என்னை விழுங்க வருகிறது. அரண்டு
போய் எழுந்து பார்த்தால் கனவு என்று தெரிந்தது. உடம்பெல்லாம் பயத்தில் வேர்த்துப்போய்விட்டது.
எங்கு பார்த்தாலும் கலர் கலராக கட்டங்களே தெரிகின்றன. எதை என்ன செய்வது என்று புரியவில்லை.
இருட்டு ரூமுக்குள் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது என்று சொல்வார்கள். அது போல
ஆகிவிட்டது.
யோசித்தேன். இந்த வேலை நமக்கு உதவாது. பழைய சிஸ்டம்தான் சரி என்று எல்லாவற்றையும்
அழித்துவிட்டு விண்டோஸ் 7 க்குத் திரும்பி விட்டேன். இந்த விண்டோஸ் 8 சமாசாரம் டேப்ளட்
பிசி, மற்றும் 24 மணிநேர இன்டெர்நெட், கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்யத் தேவையில்லாத சூழ்நிலை
ஆகியவற்றுக்கு மிகவும் உகந்தது. இந்த விண்டோஸ் 8 இன்ஸ்டலேஷன் சி.டி. சும்மா இருக்கிறது.
யாருக்காவது தேவைப்பட்டால் தட்சிணையுடன் தானம் கொடுக்கப்படும். முந்தவும்.
இப்படியாக சட்டி சுட்டதடா, கை விட்டதடா என்று கையைச் சுட்டுக்கொண்டேன்.
காலை 7.45 மணி.
பின் குறிப்பு: இன்னும் விண்டோஸ் 8 ஐ அழிக்கவில்லை. இவ்வளவு வேலை செய்து அதை இன்ஸ்டால் பண்ணியிருக்கிறேன், அதை சும்மா விடுவதா என்று உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று அதை நான் ஜெயிக்கவேண்டும் இல்லை அது என்னை ஜெயிக்கவேண்டும். இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று துணிந்து விட்டேன்.
காலை 7.45 மணி.
பின் குறிப்பு: இன்னும் விண்டோஸ் 8 ஐ அழிக்கவில்லை. இவ்வளவு வேலை செய்து அதை இன்ஸ்டால் பண்ணியிருக்கிறேன், அதை சும்மா விடுவதா என்று உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று அதை நான் ஜெயிக்கவேண்டும் இல்லை அது என்னை ஜெயிக்கவேண்டும். இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று துணிந்து விட்டேன்.
Ha ha hilarious. Nice write up. Sontha selavil suuniyam.
பதிலளிநீக்குஒரு ரகசியம். மைக்ரோசாப்ட் பொருள் என்றால் எதையும் சர்வீஸ் பாக் 2 வரும் வரை உபயோகிக்கக்கூடாது! உபயோகித்தால் தொல்லை தான்!
பதிலளிநீக்குஅட இவ்வளவுதூரம் பாடு பட்டு டவுன்லோட் செய்துவிட்டு அரங்கில் ஏறியும் ஆட முடியாமல் போய்விட்டதே உங்களால் கூகுள் ஆண்டவருடன் ஒரு டூ ......இந்தத் தட்சணையை இனி
பதிலளிநீக்குயாருக்குக் குடுக்கலாம்!..சொக்க நாதா எனக்கு வேண்டாம் சாமி .....:)))
Iyo pavam
பதிலளிநீக்குyou can not teach new tricks to an old dog இந்தப் பக்கங்கங்களில் ஒரு சொலவடை உண்டு.
பதிலளிநீக்குஆனாலும் நாமெல்லாம் இதுலே கொஞ்சம் பூந்து வெள்ளாடிக்கிட்டுத்தான் இருக்கோம்:-))))
சிரங்கு பிடிச்சவன் கையும் இரும்பு பிடிச்சவன் கையும் (மௌஸ் பிடிச்சவன் கையும்) சும்மா இருக்காதுன்னு பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க இல்ல? அது பொய்யாப் போயிடக்கூடதல்லவா?
நீக்குதுளசி கோபால் has left a new comment on your post "கையைச் சுட்டுக் கொண்டேன்.":
நீக்குஆடுன காலும், பாடுன வாயும், எழுதுற கையும் சும்மாக் கிடந்ததாச் சரித்திரமே இல்லை:-)
ஆடதெரியாத நாட்டியக்காரி வீதி கோணல்னாலாம்.. இப்படி கூட ஒன்னு இருக்கே
நீக்குஆனாலும் உங்களுக்கு ஆர்வம் அதிகம்தான் சார்.முதல் பாக் வெளியாகி அதில் இருக்கிற குறைகளை எல்லாம் சரி செய்யும் வரை அதை நாம் பயன் படுத்தாமல் இருப்பதே நல்லது.இந்த அனுபாத்தை அழகான பதிவாக்கிட்டீங்க
பதிலளிநீக்குஎன்ன பண்ணறதுங்க? கம்ப்யூட்டர் இருக்குது, இன்டெர்நெட் இருக்குது, நேரம் இருக்குது,தூக்கம் வர மாட்டேங்கிறது, பொழுது போகமாட்டேங்கிறது,பிளாக் வேற தினம் ஒண்ணு போடணும், மனுசனுக்கு எத்தனை தொந்திரவுகள் பாத்தீங்களா?
நீக்கு:)))))))))))
பதிலளிநீக்குநானெல்லாம் இன்னும் எக்ஸ்பி தான்!!
Old is gold. பிரச்சினை எதுவும் இல்லாத புரொக்ராம்.
நீக்குRespected Sir,
பதிலளிநீக்குபடித்தேன், ரஸித்தேன், நன்றாக நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். மகிழ்ச்சி, பாராட்டுக்கள்.
நன்றி, வைகோ.
நீக்கு//இதை விடக்கூடாது என்று மறுபடியும் ஈரத்துணியில் ஸ்ட்ராங்க் பினாயிலில் தோய்த்து எல்லாவற்றையும் துடைத்தேன்.//
பதிலளிநீக்குஹா ஹா ஹா.. ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு.. விண்டோஸ் 8 ல் ப்ரவுஸ் செய்ய முடிந்ததா இல்லையா? இண்டர்நெட்டே கனெக்டாக வில்லையா?
பின் குறிப்பு: இன்னும் விண்டோஸ் 8 ஐ அழிக்கவில்லை. இவ்வளவு வேலை செய்து அதை இன்ஸ்டால் பண்ணியிருக்கிறேன், அதை சும்மா விடுவதா என்று உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று அதை நான் ஜெயிக்கவேண்டும் இல்லை அது என்னை ஜெயிக்கவேண்டும். இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று துணிந்து விட்டேன்.
நீக்குஐயா, இந்த ரெண்டில ஒண்ணுதான் நடக்கும்
நீக்குஉங்கள் தொழில் நுட்ப அறிவு வியக்க வைக்கிறது, கணிணி துறையில் வேலை செய்யாதவர்கள் பொதுவா அச்சப்படுவதையெல்லாம் நீங்க தொட்டு விளையாடுகிறீர்கள். வெல்டன்
பதிலளிநீக்குஎன்னங்க பின்ன, புரொக்ராம் எழுதறதுக்குத்தான் தெரியலைன்னாலும் அதை யூஸ் பண்ணக்கூடத் தெரியாட்டி எப்படீங்க?
நீக்குஆகா ஆகா - வழக்கமா வர பிரச்னைகள் தான் - சமாளிச்சுத்தான் கரை ஏறணூம் - பொரூர்த்திருக்ங்க - பிளாக்கரஸ் நெரெய எழுதுவாங்க - எப்படி இன்ஸ்டால் செய்யணும்னு - அப்புறம் ஒரு ஆறு மாசம் கழிச்சு பண்னிக்கலாம் - சரியா ... விரைவினில் பயன படுத்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குநன்றிங்க.
நீக்குஆறு மாசம் கழிச்சா? ஐயோ, அதுக்கெல்லாம் நாள் இல்லீங்க. இப்ப எல்லாம் ஒண்ணை நெனச்சா அதை உடனே செய்து விடணும். நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியுமுங்க?
ஐயோ எவ்வளவு சிரமமான காரியத்தை செய்து முடித்திருக்கிறீர்கள்...
பதிலளிநீக்குநமெக்கெல்லாம் 500 MB க்கு மேல டவுன் லோட் பன்னவே பிடிக்காது...
பொருமையாக இருந்து டவுன்லோட் பன்னியிருக்கிறீர்கள்..
அப்புறம் மைக்கிரோசாப்ட் காரன் முதலாவதா வெளிவிடுவதுக்ளில் நிறைய ஆப்புகள் இருக்கிறது அதை பரீட்சித்துப் பார்ப்பதற்காகவே வெளியிடுகிறார்கள் நாம் ஏன் வம்புல மாட்டே...
பதிவ பார்த்திட்டேனில்ல இனி கிட்டவும் நெருங்க மாட்டேன்
உங்கள் ஆர்வத்தை கண்டு ஆச்சரியமாக இருக்கு சார்... வீட்டில் டெட்டால் பினாயில் - காலி ஆயிடுச்சா...? பல வரிகள் ரசிக்க வைத்தது...
பதிலளிநீக்குநீங்கள் டெஸ்க்டாப் என்ற கட்டத்தை அமுக்கினால் டெஸ்க்டாப் மோடு வந்திருக்குமே. என்ன ஸ்டார்ட் மெனு மட்டும் இருக்காது. ப்ரோக்ராம்ஸ் மற்றும் கண்ட்ரோல் பேநெல் மெனு டூல் பார் கொண்டு வருவது மிகவும் எளிது. அதே போல் அந்த கட்டங்களையும் நன்றாக மாற்றி அமைக்க முடியும். சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் போல் நீங்கள் பழகி விட்டால் விண்டோஸ் 8 எளிதே. மீண்டும் விண்டோஸ் 8 நிறுவினால் இலவசமாக உங்களுக்கு தொலைபேசியில் அல்லது இ-மெயிலில் சொல்லி தர நான் தயார்.
பதிலளிநீக்கு//எல்லாப் பயல்களும் மைக்ரோசாஃப்ட் கம்பெனியில் கமிஷன் வாங்கும் பயல்கள் என்று
பின் குறிப்பு: எனக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை :)
அய்யய்யோ, உங்களை எல்லாம் அப்படிச் சொல்லுவனாங்க, அது அமெரிக்காப் பசங்களைச் சொன்னதுங்க. அக்டோபர் 26 இந்த விண்டோஸ் 8 ஐ அதிகார பூர்வமா வெளியிடறாங்களாம். அதுக்கு கொஞ்சமா காசு கொடுத்தாப் போதுமாம். (2000)
நீக்குRefer to below for get start menu
பதிலளிநீக்குhttp://www.techrepublic.com/blog/window-on-windows/easily-revive-the-classic-start-menu-hidden-within-windows-8/5945?tag=content;siu-container
or
http://www.howtogeek.com/107711/how-to-get-the-classic-start-menu-back-in-windows-8/
I hope you have installed the antivirus correctly. Don't rely much on Windows defender.
ரஸித்தேன்
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவையாக ரசிக்கும்படி எழுதியுள்ளீர்கள்!
பதிலளிநீக்குஇது எனக்கு பல மாதங்களுக்கு முன்பே நடந்தது. விண்டோஸ் 8 தொகுப்பு முதன் முதலில் வெளிவந்த போதே அதன் மீது ஆசை கொண்டு அதனை பதிவிறக்கி பின்னர் அதன் செயல் பாடுகளில் விருப்பமில்லாமல் மறுபடியும் விண்டோஸ் 7 இக்கு மீண்டும் வந்தது. தப்பாக போனாலும் புதிய தொழில் நுட்பங்களை நாம் அறிந்து கொள்வதே நல்லது.
பதிலளிநீக்குSurprised to see your interest in IT
பதிலளிநீக்குவிண்டோஸ் 8 இல் வெல்கம் ஸ்க்ரீன் மட்டும்தான் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்ஸ் மாதிரி கலர் கலர் கட்டமாக இருக்கும். டெஸ்க்டாப் கட்டத்தை கிளிக் பண்ணினால் விண்டோஸ் 7 மாதிரியேதான் இருக்கும். ஒரே ஒரு வித்தியாசம் விண்டோஸ் 8 இல் start பட்டன் இருக்காது. கீபோர்டில் இருக்கும் ஸ்டார்ட் கீயை அழுத்தினால் கலர் கலர் கட்டங்கள் திரையில் தோன்றும்.
பதிலளிநீக்குநிறைய புதிய அவதிகளை அறிந்துகொண்டேன்...
பதிலளிநீக்குஇது என்ன பெரிய ஆச்சரியம். வெற்றிகரமாக முதல் முறையாக வீட்டுக்கு என்று தனியாக ஒரு கணினி, மற்றும் பிஎஸ்என்எல் இணைப்பு என்று வாங்கிய தொடக்க காலத்தில் என்னுடைய முதல் வேலையே பார்ப்பது அத்தனையையும் தரவிறக்கம் செய்வது தான். அப்போது சில மாதங்களில் மாத கட்டணமாக 5000 கூட கட்டியுள்ளேன். இது ஒரு வருடமாக செய்து வந்தது. ஏன் எதற்கு என்று தெரியாமலேயே. சொந்த காச செலவு செஞ்சு இன்றைக்கு இந்த அளவுக்கு கற்று இருக்கின்றோம் என்று நினைத்துக் கொள்வதுண்டு. இன்று வரை முறைப்படி கணினி அறிவுக்கென்று எங்கேயும் போய் கற்றுக் கொண்டதே இல்லை. ராத்திரி முழுக்க கொட்ட கொட்ட கொஞ்சம் கொஞ்சமாக இறங்குவதையும் வேடிக்கை பார்த்ததும் உண்டு. ஆனா என் வயசுக்கு உடம்பு ஒத்துழைத்தது. உங்க உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்க.
பதிலளிநீக்குமிக்க நன்றி, ஜோதிஜி.
நீக்குAiyaa unga pathivu nakaipai uruvaakkiyathu unmai :)
பதிலளிநீக்குசும்மா இருந்த கம்பியூட்டரை சீண்டிப் பார்த்த உங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! ;) :D
பதிலளிநீக்குசும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்று சும்மாவா சொன்னாங்க.
நீக்கு
பதிலளிநீக்குஎன்னென்னவோ கேட்டு எழுதினேன். Page not available. Reload after some time என்று வந்தது. நான் முதலில் எழுதியதெல்லாம் போச். போயே போச்.!
நன்றி, GMB
நீக்குநாங்களெல்லாம் இன்னும் விஸ்டாஸ்லியே இருக்கோம். நமக்கு ஏன் வம்பு என்று.
பதிலளிநீக்குஇரவு முழுவதும் கண் விழித்து ஏன் கஷ்டப் பட வேண்டும் ?
பதிலளிநீக்குTorrent Client இன்ஸ்டால் செய்து அதன் மூலமாக தரவிறக்கம் செய்தால் சுலபமாக முடியும்.
மேலும் அதில் உள்ள sheduler பயன் படுத்தி நீங்கள் விரும்பும் நேரங்களில் தரவிறக்கம் செய்து பில் குறைக்கலாம்
காலையில் எழுந்து பார்த்ததும் அனைத்தும் தரவிறக்கம் ஆகி இருக்கும் .
மேலும் புது இயங்கு தளங்கள் நிறுவிப் பார்ப்பதற்கு
Virtual Box போன்ற மெய்நிகர் கணினிகள் (Virtual Machines ) உபயோகிக்கவும்.
லினக்ஸ், விண்டோஸ் எல்லாவற்றையும் விண்டோஸ் 7 க்கு உள்ளேயே திறக்கலாம்.
செய்து பார்த்து விடுகிறேன். நன்றி.
நீக்குஇந்த அளவுக்கு இதுல போட்ட முயற்சியில் சிறிதளவு போட்டிருந்தால் லினக்ஸ் நீங்க இன்ஸ்டால் பண்ணியிருக்கலாம் சார்!!
பதிலளிநீக்குஅது என்னமோ பழிகினத விடமுடிய மாட்டேங்குது தாஸ். இப்ப பாருங்க, இருக்கிற பொண்டாட்டிய விலக்கிட்டு புதுசா ஒண்ணைக் கட்டிக்கிடலாம்னு நெனைச்சா, முடியுமுங்களா? அது மாதிரின்னு வச்சுக்குங்களேன்.
நீக்குஇருந்தாலும் உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி.
//சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்று சும்மாவா சொன்னாங்க. //
பதிலளிநீக்குஅச்சச்சோ............... ஊதிக்கெடுத்தானாம் டேஷ் டேஷ்ன்னு சொல்லி இருக்கணும். அந்த டேஷ் டேஷை ஒரு பதிவில் எழுதிட்டு ஒரு வாசகரால் நான் பட்ட பாடு சொல்லி மாளாது. அது சாதியைக் குறிக்குதுன்னு அவர் விடாமல் மல்லுக்கட்டி அந்த டேஷைப் பதிவில் இருந்து தூக்கணுமுன்னு கண்ணீர்காவியம் வரை பின்னூட்டம் எழுதி என்னை ஒரு வழி பண்ணிட்டார்.
அஞ்சு பெண் பெற்றால் அரசனும் டேஷ் டேஷ் என்று பழமொழியைக் குறிப்பிட்டதுதான் நான் செஞ்ச தவறு!
பெரிய புதிர் போட்டுட்டீங்க, டீச்சரல்லவா, புரொபசரையே மடக்கிட்டீங்க. பொறுங்க, அந்த டேஷ் டேஷ் என்னன்னு கண்டு பிடிச்சிட்டு உங்க கிட்ட மெடல் வாங்கிக்கிறேன்.
நீக்கு"ஆண்டிப் ப**ரம்" னு சொல்லீட்டீங்களோ?
நீக்குநகைச்சுவை ததும்பும் வண்ணம் படைத்திருக்கின்றீர்கள்.. இடையில் தாங்கள் பட்ட வேதனைகளையும் எங்களுக்கு முன் பாடமாக வழங்கியிருக்கின்றீர்கள்.
பதிலளிநீக்குவிண்டோஸ் 7 ல் பேசிக் வெர்சனிலே நான் நின்று கொண்டிருப்பதால் எனக்கு இதனைப் பற்றி அவ்வளவு சரியாக தெரியாது. ஆகையால் மற்றவர்கள் சொல்லும் கருத்துரைகளைப் படிக்க மட்டுமே என்னால் செய்ய இயலும்.
நன்றி