இந்தியாவில் பசுமைப்புரட்சி
ஏற்பட்டுக் கொண்டிருந்த வேளை. அதற்கு அமெரிக்க விதைகளும், அமெரிக்கத் தொழில் நுட்பங்களும்
இறக்குமதியாகிக் கொண்டிருந்த நிலை. அமெரிக்கா விவசாயத்தில் உயர்ந்து நிற்கக் காரணம்,
அந்நாட்டில் விவசாயம் கற்பிக்க தனிப்பட்ட விவசாய பல்கலைக்கழகங்கள் இருந்ததுதான் என்று
நம் அரசியல்வாதிகள் கருதினார்கள். அதே மாதிரி நம் நாட்டிலும் விவசாயப் பல்கலைக் கழகங்களை
ஏற்படுத்தவேண்டும் என்று முடிவு செய்து அதற்கான செயல் திட்டங்களை உருவாக்க ஒரு உயர்மட்ட
கமிட்டி அமைத்தார்கள்.
அந்தக் கமிட்டியில்
எங்கள் கல்லூரியைச் சேர்ந்த உயர்அதிகாரி ஒருவரும் உறுப்பினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக
அவர் ஒரு ப்யூர் சைன்ஸ் கிரேஜுவேட். கல்லூரியில் இருக்கும் அக்ரி கிரேஜுவேட் ஆசிரியர்கள்,
அந்த ஆபீசர் இந்தக் கமிட்டியில் இருந்தால் ப்யூர் சைன்ஸ் கிரேஜுவேட்களுக்கு ஆதரவாக
சிபாரிசுகள் செய்வார், நம்முடைய எதிர்கால முன்னேற்றம் பாதிக்கப்படும் என்று கருதினார்கள்.
என்ன செய்ய முடியும்?
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள். எந்தப் போராட்டமும் நடத்த முடியாது. ஆகவே மாணவர்களைத்
தூண்டிவிட்டு ஒரு போராட்டம் நடத்தினார்கள். அந்த உயர் ஆபீசர் கமிட்டியில் கலந்து கொள்ளச்
செல்லவேண்டிய நாளுக்கு முந்தைய நாளில் மாணவர்கள் ஸ்டிரைக் செய்ய ஆரம்பித்தார்கள். கல்லூரி
அலுவலர்கள் ஒருவரையும் கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை. ஒரு ஆபீசையும் திறக்க முடியவில்லை.
ஒரு வேலையும் நடக்கவில்லை.
நான் அப்போது மாணவர்
விடுதி வார்டன். இந்த டூர் போகும் ஆபீசர்தான் என்னுடைய நேரடி உயர் ஆபீசர். என்னுடைய
குணம், நான் எந்த வேலை பார்த்தாலும், அந்த வேலைக்கு உண்மையாக இருப்பது. அன்று இரவு அவரை
அவர் வீட்டில் சந்தித்தேன். அவர் வீடு கல்லூரி வளாகத்தினுள்ளேயே இருந்தது. மறுநாள்
காலை அவர் அந்த உயர்மட்டக் கமிட்டியில் கலந்து கொள்ள சென்னை சென்று, அங்கிருந்து டில்லி
செல்லவேண்டும். பயணத்திற்கான விமான டிக்கெட்டுகள் எல்லாம் தயார். மாணவர்கள் அவரை அந்தப்
பயணம் மேற்கொள்ளாதவாறு தடுக்க காலையில் அவர் வீட்டை முற்றுகை இடுவதாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அவர் டூர் போகாவிட்டால்
அவருடைய அந்தஸ்த்திற்கும் கல்லூரிக்கும் பெரும் அபவாதம் வரும். என்ன செய்வதென்று யோசித்தோம்.
அவரை தான் கேட்டேன்.
“சார், டவுனில்
உங்களுக்கு வேண்டியவர்கள் யாராவது இருக்கிறார்களா?”
“இருக்கிறார்கள்”
என்றார்.
“அப்படியானால்
இன்று இரவே நீங்கள் அங்கு சென்று விடுங்கள். நான் நாளைக் காலையில் ஆபீஸ் வண்டியுடன்
அங்கு வருகிறேன். அங்கிருந்து அப்படியே விமான நிலையம் சென்று விடலாம்” என்றேன்.
அவருக்கும் வேறு
வழி தோன்றாததால் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டார். அதன்படியே அவரை இரவு பத்து மணிக்கு
மேல் டவுனில், அருக்குத் தெரிந்தவர் வீட்டில் விட்டுவிட்டு, டிரைவரிடம் காலையில் 7 மணிக்கு என் வீட்டிற்கு வருமாறு
சொல்லிவிட்டு, நான் வீட்டில் இறங்கிக்கொண்டேன். மறு நாள் ஏற்பாட்டின்படி வீட்டிற்கு
ஆபீஸ் ஜீப் வந்தது. அதில் போய் ஆபீசரை, அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏற்றிக்கொண்டு
ஏர்போர்ட் சென்று அவரைப் பிளேனில் ஏற்றிவிட்டு, கல்லூரிக்கு வந்தேன்.
அந்த ஆபீசர் வீட்டுக்கு
முன்பு ஒரே மாணவர் கூட்டம். அவர் இன்னும் வீட்டிற்குள்தான் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, மாணவர்கள் அவர் வீட்டை முற்றுகையிட்டிருந்தார்கள். பத்து மணிக்கு மேல்தான் பட்சி பறந்துவிட்டது
என்பது அவர்களுக்குத் தெரிய வந்தது.
அவர்களுக்கு ஏமாற்றத்தினால்
கடும் கோபம். அந்த ஆபீசருக்கு ஒரு கொடும்பாவி கட்டி அவர் வீட்டிற்கு முன்பாக அதை எரித்து
விட்டு கலைந்து போனார்கள். நான் இந்த விவகாரத்தில் ஈடுபட்டது எப்படியோ அவர்களுக்குத்
தெரிந்து விட்டது.
அடுத்த நாள், இந்த
ஸ்ட்ரைக்கைத் தூண்டிவிட்ட குழுவின் தலைவரை, கல்லூரித் துணைத்தலைவராக நியமனம் செய்து
அரசு ஆணை தந்தி மூலம் வந்துவிட்டது. இப்போது அவர்தான் எனக்கு உயர் அதிகாரி. இந்த அரசு
ஆணை விவரம் தெரிந்தவுடன் அவரைப்போய்ப் பார்த்தேன். அவர் என்னை அழைத்துக் கொண்டு இருவருமாக
ஆபீசுக்குப் போனோம்.
ஆபீஸ் வாசலில்
ஒரு நூறு மாணவர்கள் வழியை அடைத்துக்கொண்டு இருந்தார்கள். இந்தப் புது உயர் அதிகார்,
மாணவர்களிடம் சொன்னார். இப்படியே ஒருவரையும் உள்ளே போகவிடாமல் இருந்தால், உங்கள் பிரச்சினை
எப்படித் தீரும். நாங்கள் யாராவது உள்ளே சென்று சென்னையிலுள்ள பெரிய ஆபீசர்களிடம் பேசி
விவரங்களைச் சொன்னால்தானே உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றார். அவர்கள்
சரி, சார், நீங்கள் உள்ளே செல்லுங்கள் என்று சொன்னார்கள். அவர் பிறகு, நான் மட்டும்
உள்ளே போய் என்ன செய்ய முடியும்? எனக்கு உதவிக்கு யாராவது வார்டன் இருந்தால்தானே சௌகரியமாயிருக்கும்
என்றார்.
சரி சார், ஒரு
வார்டனை அழைத்துச் செல்லுங்கள் என்றனர். அந்த ஆபீசர் பின்னால் திரும்பி என்னைப்
பார்த்து, “வா, கந்தசாமி, உள்ளே போகலாம்” என்று கூப்பிட்டார். நான் முன்னே செல்ல ஆயத்தமானேன்.
அப்போதுதான் அந்த மாணவர்கள் என்னைப் பார்த்தார்கள். அந்தக் கூட்டத்திலிருந்த மாணவர்
மன்றத் தலைவர் என்னைப் பார்த்ததும், இந்த வார்டனை விடமாட்டோம் என்றான். நிலைமையைப்
பார்த்ததும், “சார், நான் வரவில்லை, நீங்கள் மட்டும் உள்ளே செல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு,
மனதிற்குள் நினைத்தேன்.
“மகனே, இன்று உன்
நாக்கில் சனி இருந்து உன்னை இப்படி சொல்ல வைத்திருக்கிறது. வா, உன்னுடைய இறுதிப் பரீட்சைக்கு
என்னிடம்தானே வரவேண்டும், அப்போது உன்னைக் கவனித்துக்கொள்கிறேன் என்று முடிவு செய்து
கொண்டு போய்விட்டேன்.”
அவர்கள் முதல்
நாள் அந்த ஆபீசர் வீட்டிற்கு முன்பாக கொடும்பாவி கட்டி எரித்தார்கள் அல்லவா? அவர்கள்
அந்த அதிகாரிக்கு எதிராகத்தான் கொடும்பாவி கட்டி எரித்தார்கள். ஆனால் போலீஸ் அந்த சம்பவத்தை
மாற்றி, கருணாநிதிக்கு கொடும்பாவி கட்டி எரித்தார்கள் என்று ரிப்போர்ட் அனுப்பிவிட்டார்கள்.
கருணாநிதி அப்போது முதல்மந்திரி. சும்மா இருப்பாரா? உடனே ஸ்ட்ரைக் செய்யும் மாணவர்களைக்
கைது செய்து சிறையில் அடைக்க உத்திரவு போட்டுவிட்டார். மறு நாள் விடிவதற்குமுன் மாணவர்
விடுதிக்குள் போலீஸ் புகுந்து எல்லா மாணவர்களையும் குண்டுக் கட்டாகத் தூக்கிக் கொண்டுபோய்
சிறையில் அடைத்து விட்டார்கள். மொத்தம் 800 மாணவர்கள். மூன்று நாட்கள் சிறையில் வாடின
பின் அவர்களை 50, 50 பேர்களாக வெளியில் விட்டு விடுதிக்கு கூட்டிக்கொண்டுவந்து அவர்களின்
உடமைகளை எடுத்துக்கொள்ளச் செய்து, பஸ் ஸ்டேண்ட் அல்லது ரயில் நிலையத்தில் விட்டார்கள்.
வழிச் செலவிற்கு ஹாஸ்டலில் இருந்து பணம் கொடுத்தோம்.
இப்படியாக அந்த
ஸ்ட்ரைக் முடிவிற்கு வந்தது. மாணவர்களைத் தூண்டி விட்ட ஆசிரியர்களை அடையாளம் கண்டு,
அவர்களை எக்காலத்திலும் ஆசிரியர் பதவியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஆராய்ச்சி
நிலையங்களுக்கு மாற்றப்பட்டார்கள்.
கதையின் கிளைமேக்ஸ்சுக்கு
வருவோம். ஒரு மாதம் கழித்து கல்லூரி திறந்தது. மாணவர்களின் இறுதிப் பரீட்சையும் வந்தது.
அந்தப் பரீட்சைக்கு நான் எக்ஸ்டேர்னல் எக்சாமினர். தியரி பேப்பர் நான்தான் திருத்த
வேண்டும். நமது கதாநாயகனின் பேப்பரையும் எப்போதும் போல் திருத்தினேன். பாஸ் மார்க்கிற்கு
மூன்று மார்க் குறைந்தது. சாதாரண மாணவனாக இருந்தால் இங்கும் அங்குமாக அரை மார்க், கால்
மார்க் போட்டு பாஸ் லெவலுக்கு கொண்டு வந்திருப்பேன். ஆனால் கதாநாயகனுக்கெல்லாம் அப்படி
செய்யலாமா? அப்படியே விட்டுவிட்டேன்.
நான் வேண்டுமென்றே அந்த மாணவனைப் பெயில் செய்து விட்தாக எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அதைக்கேட்டு நான் வருந்தவில்லை.
நன்றாகப் படிக்கக் கூடிய மாணவனை இவ்வாறு வேண்டுமென்று பெயில் செய்திருந்தால் அது மன்னிக்க
முடியாத குற்றம். ஆனால் நமது கதாநாயகன் அடி மட்ட மாணவன். தவிர அவர் மாணவர் மன்றத் தலைவர்.
படிப்பதற்கு அவருக்கு நேரம் ஏது? என்ன, நான் அவருக்கு கருணை காட்டவில்லை. அவ்வளவுதான். அதனால் அவர் பாஸாகவில்லை. ஆகையால் என் மனச்சாட்சி என்னை ஒன்றும் செய்யவில்லை.
அவர் அடுத்த முறை
பரீட்சை எழுதி பாஸ் செய்தார். அப்போதும் மார்க் குறைவுதான். இருந்தாலும் இரண்டாவது முறையாதலால் கிரேஸ் மார்க்
போட்டு பாஸ் பண்ணவைத்தேன்.