செவ்வாய், 18 செப்டம்பர், 2012

ஆசிரியர் மாணவனுக்கு புத்தி புகட்டின கதை – பாகம் 2


விவசாயக்கல்லூரியில் அந்தக் காலத்தில் “ப்யூர் சைன்ஸ் கிரேஜுவேட்” (Pure Science Graduate) என்று சொல்லப்படுகின்றவர்கள் பலர் பல துறைகளில் வேலையில் இருந்தார்கள். அக்ரி கிரேஜுவேட்டுக்களுக்கும் இந்த ப்யூர் சைன்ஸ் கிரேஜுவேட்டுக்களுக்கும், யார் உயர்ந்தவர்கள் என்று ஒரு வித பனிப்போர் நடந்துகொண்டிருந்தது.

இந்தியாவில் பசுமைப்புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருந்த வேளை. அதற்கு அமெரிக்க விதைகளும், அமெரிக்கத் தொழில் நுட்பங்களும் இறக்குமதியாகிக் கொண்டிருந்த நிலை. அமெரிக்கா விவசாயத்தில் உயர்ந்து நிற்கக் காரணம், அந்நாட்டில் விவசாயம் கற்பிக்க தனிப்பட்ட விவசாய பல்கலைக்கழகங்கள் இருந்ததுதான் என்று நம் அரசியல்வாதிகள் கருதினார்கள். அதே மாதிரி நம் நாட்டிலும் விவசாயப் பல்கலைக் கழகங்களை ஏற்படுத்தவேண்டும் என்று முடிவு செய்து அதற்கான செயல் திட்டங்களை உருவாக்க ஒரு உயர்மட்ட கமிட்டி அமைத்தார்கள்.

அந்தக் கமிட்டியில் எங்கள் கல்லூரியைச் சேர்ந்த உயர்அதிகாரி ஒருவரும் உறுப்பினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ஒரு ப்யூர் சைன்ஸ் கிரேஜுவேட். கல்லூரியில் இருக்கும் அக்ரி கிரேஜுவேட் ஆசிரியர்கள், அந்த ஆபீசர் இந்தக் கமிட்டியில் இருந்தால் ப்யூர் சைன்ஸ் கிரேஜுவேட்களுக்கு ஆதரவாக சிபாரிசுகள் செய்வார், நம்முடைய எதிர்கால முன்னேற்றம் பாதிக்கப்படும் என்று கருதினார்கள். 
என்ன செய்ய முடியும்? ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள். எந்தப் போராட்டமும் நடத்த முடியாது. ஆகவே மாணவர்களைத் தூண்டிவிட்டு ஒரு போராட்டம் நடத்தினார்கள். அந்த உயர் ஆபீசர் கமிட்டியில் கலந்து கொள்ளச் செல்லவேண்டிய நாளுக்கு முந்தைய நாளில் மாணவர்கள் ஸ்டிரைக் செய்ய ஆரம்பித்தார்கள். கல்லூரி அலுவலர்கள் ஒருவரையும் கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை. ஒரு ஆபீசையும் திறக்க முடியவில்லை. ஒரு வேலையும் நடக்கவில்லை.

நான் அப்போது மாணவர் விடுதி வார்டன். இந்த டூர் போகும் ஆபீசர்தான் என்னுடைய நேரடி உயர் ஆபீசர். என்னுடைய குணம், நான் எந்த வேலை பார்த்தாலும், அந்த வேலைக்கு உண்மையாக இருப்பது. அன்று இரவு அவரை அவர் வீட்டில் சந்தித்தேன். அவர் வீடு கல்லூரி வளாகத்தினுள்ளேயே இருந்தது. மறுநாள் காலை அவர் அந்த உயர்மட்டக் கமிட்டியில் கலந்து கொள்ள சென்னை சென்று, அங்கிருந்து டில்லி செல்லவேண்டும். பயணத்திற்கான விமான டிக்கெட்டுகள் எல்லாம் தயார். மாணவர்கள் அவரை அந்தப் பயணம் மேற்கொள்ளாதவாறு தடுக்க காலையில் அவர் வீட்டை முற்றுகை இடுவதாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அவர் டூர் போகாவிட்டால் அவருடைய அந்தஸ்த்திற்கும் கல்லூரிக்கும் பெரும் அபவாதம் வரும். என்ன செய்வதென்று யோசித்தோம். அவரை தான் கேட்டேன்.

“சார், டவுனில் உங்களுக்கு வேண்டியவர்கள் யாராவது இருக்கிறார்களா?”

“இருக்கிறார்கள்” என்றார்.

“அப்படியானால் இன்று இரவே நீங்கள் அங்கு சென்று விடுங்கள். நான் நாளைக் காலையில் ஆபீஸ் வண்டியுடன் அங்கு வருகிறேன். அங்கிருந்து அப்படியே விமான நிலையம் சென்று விடலாம்” என்றேன்.

அவருக்கும் வேறு வழி தோன்றாததால் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டார். அதன்படியே அவரை இரவு பத்து மணிக்கு மேல் டவுனில், அருக்குத் தெரிந்தவர் வீட்டில் விட்டுவிட்டு, டிரைவரிடம் காலையில் 7 மணிக்கு என் வீட்டிற்கு வருமாறு சொல்லிவிட்டு, நான் வீட்டில் இறங்கிக்கொண்டேன். மறு நாள் ஏற்பாட்டின்படி வீட்டிற்கு ஆபீஸ் ஜீப் வந்தது. அதில் போய் ஆபீசரை, அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏற்றிக்கொண்டு ஏர்போர்ட் சென்று அவரைப் பிளேனில் ஏற்றிவிட்டு, கல்லூரிக்கு வந்தேன்.

அந்த ஆபீசர் வீட்டுக்கு முன்பு ஒரே மாணவர் கூட்டம். அவர் இன்னும் வீட்டிற்குள்தான் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, மாணவர்கள் அவர் வீட்டை முற்றுகையிட்டிருந்தார்கள். பத்து மணிக்கு மேல்தான் பட்சி பறந்துவிட்டது என்பது அவர்களுக்குத் தெரிய வந்தது.

அவர்களுக்கு ஏமாற்றத்தினால் கடும் கோபம். அந்த ஆபீசருக்கு ஒரு கொடும்பாவி கட்டி அவர் வீட்டிற்கு முன்பாக அதை எரித்து விட்டு கலைந்து போனார்கள். நான் இந்த விவகாரத்தில் ஈடுபட்டது எப்படியோ அவர்களுக்குத் தெரிந்து விட்டது.

அடுத்த நாள், இந்த ஸ்ட்ரைக்கைத் தூண்டிவிட்ட குழுவின் தலைவரை, கல்லூரித் துணைத்தலைவராக நியமனம் செய்து அரசு ஆணை தந்தி மூலம் வந்துவிட்டது. இப்போது அவர்தான் எனக்கு உயர் அதிகாரி. இந்த அரசு ஆணை விவரம் தெரிந்தவுடன் அவரைப்போய்ப் பார்த்தேன். அவர் என்னை அழைத்துக் கொண்டு இருவருமாக ஆபீசுக்குப் போனோம்.

ஆபீஸ் வாசலில் ஒரு நூறு மாணவர்கள் வழியை அடைத்துக்கொண்டு இருந்தார்கள். இந்தப் புது உயர் அதிகார், மாணவர்களிடம் சொன்னார். இப்படியே ஒருவரையும் உள்ளே போகவிடாமல் இருந்தால், உங்கள் பிரச்சினை எப்படித் தீரும். நாங்கள் யாராவது உள்ளே சென்று சென்னையிலுள்ள பெரிய ஆபீசர்களிடம் பேசி விவரங்களைச் சொன்னால்தானே உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றார். அவர்கள் சரி, சார், நீங்கள் உள்ளே செல்லுங்கள் என்று சொன்னார்கள். அவர் பிறகு, நான் மட்டும் உள்ளே போய் என்ன செய்ய முடியும்? எனக்கு உதவிக்கு யாராவது வார்டன் இருந்தால்தானே சௌகரியமாயிருக்கும் என்றார்.

சரி சார், ஒரு வார்டனை அழைத்துச் செல்லுங்கள் என்றனர். அந்த ஆபீசர் பின்னால் திரும்பி என்னைப் பார்த்து, “வா, கந்தசாமி, உள்ளே போகலாம்” என்று கூப்பிட்டார். நான் முன்னே செல்ல ஆயத்தமானேன். அப்போதுதான் அந்த மாணவர்கள் என்னைப் பார்த்தார்கள். அந்தக் கூட்டத்திலிருந்த மாணவர் மன்றத் தலைவர் என்னைப் பார்த்ததும், இந்த வார்டனை விடமாட்டோம் என்றான். நிலைமையைப் பார்த்ததும், “சார், நான் வரவில்லை, நீங்கள் மட்டும் உள்ளே செல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு, மனதிற்குள் நினைத்தேன்.

“மகனே, இன்று உன் நாக்கில் சனி இருந்து உன்னை இப்படி சொல்ல வைத்திருக்கிறது. வா, உன்னுடைய இறுதிப் பரீட்சைக்கு என்னிடம்தானே வரவேண்டும், அப்போது உன்னைக் கவனித்துக்கொள்கிறேன் என்று முடிவு செய்து கொண்டு போய்விட்டேன்.”

அவர்கள் முதல் நாள் அந்த ஆபீசர் வீட்டிற்கு முன்பாக கொடும்பாவி கட்டி எரித்தார்கள் அல்லவா? அவர்கள் அந்த அதிகாரிக்கு எதிராகத்தான் கொடும்பாவி கட்டி எரித்தார்கள். ஆனால் போலீஸ் அந்த சம்பவத்தை மாற்றி, கருணாநிதிக்கு கொடும்பாவி கட்டி எரித்தார்கள் என்று ரிப்போர்ட் அனுப்பிவிட்டார்கள். கருணாநிதி அப்போது முதல்மந்திரி. சும்மா இருப்பாரா? உடனே ஸ்ட்ரைக் செய்யும் மாணவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்திரவு போட்டுவிட்டார். மறு நாள் விடிவதற்குமுன் மாணவர் விடுதிக்குள் போலீஸ் புகுந்து எல்லா மாணவர்களையும் குண்டுக் கட்டாகத் தூக்கிக் கொண்டுபோய் சிறையில் அடைத்து விட்டார்கள். மொத்தம் 800 மாணவர்கள். மூன்று நாட்கள் சிறையில் வாடின பின் அவர்களை 50, 50 பேர்களாக வெளியில் விட்டு விடுதிக்கு கூட்டிக்கொண்டுவந்து அவர்களின் உடமைகளை எடுத்துக்கொள்ளச் செய்து, பஸ் ஸ்டேண்ட் அல்லது ரயில் நிலையத்தில் விட்டார்கள். வழிச் செலவிற்கு ஹாஸ்டலில் இருந்து பணம் கொடுத்தோம்.

இப்படியாக அந்த ஸ்ட்ரைக் முடிவிற்கு வந்தது. மாணவர்களைத் தூண்டி விட்ட ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களை எக்காலத்திலும் ஆசிரியர் பதவியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஆராய்ச்சி நிலையங்களுக்கு மாற்றப்பட்டார்கள்.

கதையின் கிளைமேக்ஸ்சுக்கு வருவோம். ஒரு மாதம் கழித்து கல்லூரி திறந்தது. மாணவர்களின் இறுதிப் பரீட்சையும் வந்தது. அந்தப் பரீட்சைக்கு நான் எக்ஸ்டேர்னல் எக்சாமினர். தியரி பேப்பர் நான்தான் திருத்த வேண்டும். நமது கதாநாயகனின் பேப்பரையும் எப்போதும் போல் திருத்தினேன். பாஸ் மார்க்கிற்கு மூன்று மார்க் குறைந்தது. சாதாரண மாணவனாக இருந்தால் இங்கும் அங்குமாக அரை மார்க், கால் மார்க் போட்டு பாஸ் லெவலுக்கு கொண்டு வந்திருப்பேன். ஆனால் கதாநாயகனுக்கெல்லாம் அப்படி செய்யலாமா? அப்படியே விட்டுவிட்டேன்.

நான் வேண்டுமென்றே அந்த மாணவனைப் பெயில் செய்து விட்தாக எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அதைக்கேட்டு நான் வருந்தவில்லை. நன்றாகப் படிக்கக் கூடிய மாணவனை இவ்வாறு வேண்டுமென்று பெயில் செய்திருந்தால் அது மன்னிக்க முடியாத குற்றம். ஆனால் நமது கதாநாயகன் அடி மட்ட மாணவன். தவிர அவர் மாணவர் மன்றத் தலைவர். படிப்பதற்கு அவருக்கு நேரம் ஏது? என்ன, நான் அவருக்கு கருணை காட்டவில்லை. அவ்வளவுதான். அதனால் அவர் பாஸாகவில்லை. ஆகையால் என் மனச்சாட்சி என்னை ஒன்றும் செய்யவில்லை.

அவர் அடுத்த முறை பரீட்சை எழுதி பாஸ் செய்தார். அப்போதும் மார்க் குறைவுதான். இருந்தாலும் இரண்டாவது முறையாதலால் கிரேஸ் மார்க் போட்டு பாஸ் பண்ணவைத்தேன்.

17 கருத்துகள்:

 1. //அமெரிக்கா விவசாயத்தில் உயர்ந்து நிற்கக் காரணம், அந்நாட்டில் விவசாயம் கற்பிக்க தனிப்பட்ட விவசாய பல்கலைக்கழகங்கள் இருந்ததுதான் என்று நம் அரசியல்வாதிகள் கருதினார்கள்///

  இது ஒரு காரணம் அவ்வளவே! அதைத்தவிர ஆயிரம் காரணங்கள் உண்டு! நாட்டின் முதுகெலும்பு விவசாயம் எனபதை அறிந்த புரிந்த ஒரே நாடு அமெரிக்காவும் கனடாவும்! இந்தியாவில் அது ஒரு “slogan “மட்டுமே.

  கேள்விப்பட்டிருக்கிறீர்களா விவசாயம் செய்யவேண்டாம் என்று அரசாங்கம் “கெஞ்சி” மானியம் (subsidy) கொடுக்கும் நாடு அமெரிக்கா; காரணம் விவசாயி பஞ்சப் பரதேசியாக அவனுடைய விளைபொருள்களை அடிமாட்டு விலைக்கு விற்கக்கூடாது என்பதற்காக!

  விலை பொருள்களுக்கு சரியான விலை கிடைக்கவேண்டும். அதே சமயம் விவசாயியும் மனிதனாக வாழவேண்டும் என்று பயிர்களை விளவிக்கும் விவசாயிகளுக்கும் மானியம் கொடுக்கும் நாடு அமேரிக்கா. அது நம்ம புடலங்கா “இந்திய பட்ஜெட்டை” விட அதிகம்.

  இதனால், பரப்ப்பன, ஊர்வன, நடப்பன, இவை எல்லாவற்ரையும் எந்த “பன்னாடையும்” எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் (unlimited buffet); பணம் எவ்வளவு 6 or 7 டாலர்கள் தான். "அடிப்படை கூலியை" விட ஐம்பது சென்ட் குறைவே இங்கே! இங்கு எந்த வேலைக்கும் 7.50/hour, கீழே கொடுக்கமுடியாது!

  என்னடா எனக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும் என்று நினைக்கலாம். என் அப்பா பொரியியலாளரக ஒய்வு பெற்றுடன் அவர் பழனி அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்தார். நான் விவசாயமும் கற்றுக் கொண்டேன். நான் விரும்பிய மற்றொரு தொழில் விவசாயம்.

  அமெரிக்ககாவில் விவசாயம் செய்யும் ஆசை இருந்தது; இப்போது அதைக் கொன்று விட்டேன்!

  பின்குறிப்பு: இந்தியாவில் இழி பிறவி என்றால் விவசாயி தான்; அடிப்படையில் நான் ஒரு விவசாயி என்பதால் இதை ஒரு வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.

  BTW, tha. ma 1

  பதிலளிநீக்கு
 2. தங்களின் நியாயமான செயல்-இரண்டாவது முறை கிரேஸ் மார்க் போட்டு பாஸ் செய்ய வைத்ததில் இருந்து புரிகிறது...

  பதிலளிநீக்கு
 3. ரெண்டாவது முறையும் கிரேஸ் மார்க் போட்டுத்தான் பாஸ் பண்ணாப்லயா? அப்படியென்ன பாடம் அது - மண்ணியல் பாடமா?

  //ஒருவரையும் கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை//
  அப்படின்னா, உள்ளேர்ந்து வெளியேயும் போக முடியாதில்லியா? அப்ப அந்த ஆபிசர் எப்படி கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் வீட்டிலிருந்து வெளியே டவுனுக்குப் போனார்?

  விவசாயம் இங்கு அரபு நாடுகளிலும் போற்றப்படுகிறது. விவசாயிகளுக்குக் கிடைக்கும் மானியங்கள், உதவிகள், சலுகைகளை எல்லாம் பார்த்தால் நமக்குப் பொறாமையாக இருக்கும். அவர்கள் தங்கள் விளைபொருட்களை, விவசாய அலுவலகத்தில் தந்துவிட்டு உரிய விலை பெற்றுக் கொள்ளலாம். விற்பது அரசின் பொறுப்பு!!


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைத்து ஸ்ட்ரைக்குகளும் காலையில்தான் மும்முரமாக இருக்கும். நேரமாக நேரமாக வேகம் குறைந்து மாலை ஆகும்போது எல்லோரும் அவரவர்கள் வேலையைப் பார்க்க போய்விடுவார்கள். தொழிலாளிகளாக இருந்தால் டாஸ்மாக் போவார்கள். மாணவர்கள் மெஸ்சுக்குப் போவார்கள். இரவு 10 மணிக்கு எல்லோரும் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். இருந்தார்கள். அந்த சமயத்தில்தான் அவரை டவுனுக்கு கடத்தினேன்.

   நீக்கு
 4. எல்லாம் மன உணர்வுகள்தான் இல்லையா .....ரசித்துப் படித்துக் கொண்டேன்!

  பதிலளிநீக்கு
 5. \\ஆனால் போலீஸ் அந்த சம்பவத்தை மாற்றி, கருணாநிதிக்கு கொடும்பாவி கட்டி எரித்தார்கள் என்று ரிப்போர்ட் அனுப்பிவிட்டார்கள். \\ ஹா.....ஹா......ஹா...... அதுசரி, அவங்க எதுக்கு சார் அப்படிச் செஞ்சாங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த ஸ்ட்ரைக்கை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வரத்தான் அப்படி செய்தார்கள். இல்லையென்றால் மாவட்ட கலெக்டருக்கும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் கெட்ட பெயர் வந்துவிடுமல்லவா?

   நீக்கு
 6. உங்க ஸ்டார் ஹோட்டல் தில்லுமுல்லுகள் ரொம்ப சூடா இருக்கு; தமிழ்மனத்தில் சென்று பார்க்கவும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சார், அதில ஒரு தப்பு நடந்து போச்சு. எங்கயோ கை பட்டு அந்த போஸ்ட் குறைப்பிரசவமா ஆயிடுச்சு. அதை இன்குபேட்டர்ல வச்சு தேத்தி இன்னிக்கு வெளில உட்ட்டிருக்கேன்.

   நீக்கு
 7. படிக்க சுவாரசியமாக இருந்தது.தங்களின் மிகையான கடின உழைப்புதான் இவ்வளவு பெரிய பதிவு எழுத தூண்டியுள்ளது என்று நம்புகிறேன்.
  இந்த ஆர்வமும் ,சுறுசுறுப்பும் தங்களை இன்றளவும் இளமையாக வைத்துள்ளது.தங்களின் உற்சாக பதிவுக்கு வாழ்த்துகளுடன், ஆண்டவனின் அருளும்.நன்றி ஐயா (அ) சார் இதில் எது நன்றாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சும்மா இருப்பது போன்ற கடினமான வேலை எதுவும் இல்லை. ஆகவே கொஞ்சம் ஓய்விற்காக பதிவு எழுதுகிறேன். அவ்வளவுதான்.

   நீக்கு
  2. .நன்றி ஐயா (அ) சார் இதில் எது நன்றாக உள்ளது.
   இதற்கு விடையே சொல்லவில்லையே?

   நீக்கு
  3. ஐயாவே நல்லா இருக்கு ஆரிஃப். முதல்ல போட்ட கமென்ட்டை சரியாகப் படிக்கவில்லை, அதனால்தான் பதில் போடவில்லை. எல்லாம் வயசுக் கோளாறுதான். இது சின்ன வயசுக்காரங்களுக்கு சொல்றது. பெரிசுகளுக்கும் சொல்லலாம்னு நான் நெனைக்கறேன்.

   நீக்கு
 8. மாணவர்களின் நிலைமையை பார்த்தீர்களா மக்களே. போராட்டத்தை தூண்டிய ஆசிரியருக்கு (குழு தலைவர்) துணைத்தலைவர் (முதல்வர்?) பதவி, ஆசிரியரின் பேச்சை கேட்டு அவர்களுக்காக போராடிய மாணவர் தலைவன் தேர்வில் தோல்வி. ஆசிரியரே இது நியாயமா?
  விடைத்தாளில் மாணவர் பெயரையா எழுதுவார்கள்? மாணவர் பெயருக்கு பதிலாக தேர்வு எண் எல்லாம் இப்போது தானா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலக வழக்கமே அப்படித்தானே. மக்கள் போராடுவார்கள், குண்டடி பட்டுச் சாவார்கள், அரசியல் தலைவர்கள் மந்திரிகளாகி மக்களைச் சுரண்டுவார்கள். காலம் காலமாக நடக்கும் வழமைதானே. ஆசிரிய-மாணவ சமுதாயம் மட்டும் இந்த விதிக்கு விலக்காக இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறல்லவா?

   150 பேர் எழுதும் பரீட்சையில் மாணவர்களின் பெயரையும் அவர்களின் தேர்வு எண்ணையும் கண்டு பிடிப்பது என்ன அவ்வளவு பெரிய வித்தையா என்ன? உங்கள் டெபிட் கார்டு நெம்பரைக் கொடுத்தால் அடுத்த நொடியில் உங்கள் ரகசிய பின் நெம்பரைக் கண்டுபிடித்து உங்கள் கணக்கிலுள்ள பணம் முழுவதையும் ஸ்வாஹா பண்ணுகிறார்கள். மாணவர்களின் தேர்வு எண்ணைக் கண்டுபிடிப்பதா அதிசயம்?

   நீக்கு