ஒரு சம்பவத்தில் சொந்த அத்தை மகளையே, அவளுடைய முறைப் பையன் கொலை செய்த சம்பவமும் நடந்திருக்கிறது.
ஒரு சம்பவத்தில் பெண்ணின் தாய் தந்தை இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெண் இங்கே ஒரு உறவினர் வீட்டில் இருந்து கொண்டு படித்துக்கொண்டு இருக்கிறது. இது என்ன குடும்பம் என்று புரியவில்லை.
நேற்று செய்தித்தாளில் படித்த ஒரு செய்தி. முகநூல் மூலம் அறிமுகமானவர்கள். ஒரு லீவு நாளில் வெளியூர் போகலாம் என்று அழைத்தானாம். இரு தோழிகள் இரண்டு முகநூல் நண்பர்களுடன் வெளியூர் போனார்களாம். அங்கு லாட்ஜில் ரூம் போட்டுத் தங்கினார்களாம். பிறகு என்ன நடக்கும் என்பதுதான் நன்கு தெரியுமே? இப்பொது அவர்கள் போட்டோவைக் காட்டி மிரட்டுகிறார்களாம். அப்படீன்னு போலீஸில் புகார் செய்திருக்கிறார்கள்.
பால் குடிக்கும் பாப்பா. ஒன்றுமே தெரியாது பாருங்கள். இவர்களையெல்லாம் எப்படித் திருத்த முடியும்?
இது தவிர, நகைக்காக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து தாக்குவதும் கொலை செய்வதும் பல இடங்களில் நடந்துள்ளன.
இவை எல்லாம் மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறான் என்று சந்தேகப்பட வைக்கின்றது.
இதற்கென்ன காரணம் என்று மக்கள் சிந்திக்கவேண்டும். காரணம் எதுவாக இருப்பினும், தற்காப்புக்காக மக்கள் தேவையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். தற்காப்புக்கான வழிமுறைகள் தெரிந்திருந்தும் கடைப்பிடிப்பதில்லை என்பதே நடைமுறை உண்மை.
குழந்தைகளைப் பெறுவது என்பது பெரும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகும். குழந்தைகள் தானாக வளர்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு இருப்பது தவறு. அவர்களின் செயல்பாடுகளை நன்கு கவனித்து, அவர்கள் போகும் பாதை சரியானதுதானா என்று கண்காணிக்கவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகும்.
நகரங்களில் உள்ள வீடுகளில் குடியிருப்பவர்கள் புதிதாக வீட்டிற்கு வரும் நபர்களை வீட்டினுள் எக்காரணம் கொண்டும் விடக்கூடாது. அப்படி வருபவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்பார்கள். இதுதான் வழக்கமான உத்தி. தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பது என்பது நமது பண்பாடு. வந்தவர்கள் வாசலில் நிற்க, கதவை அப்படியே திறந்த நிலையில் விட்டுவிட்டு வீட்டிற்குள் தண்ணீர் எடுக்கச் சென்றால், புதிதாக வந்தவன் வீட்டிற்குள் நுழைந்து கதவை உட்பக்கம் தாட்பாள் போட்டுவிட்டு கொலை செய்கிறான்.
ஒருவன் வாசலில் நிற்கும்போது எப்படி வாசல் கதவை சாத்தி தாளிட்டுவிட்டுப் போவது என்பது நம் பெண்களிடம் இருக்கும் ஒரு குணம். இந்த குணத்தைப் பயன்படுத்தித்தான் பல திருட்டுகள் நடக்கின்றன. வீட்டிற்கு ஒரு இரும்பு கிரில் கேட் போட்டு யார் வந்து என்ன விசாரித்தாலும் அதைத் திறக்காமல்தான் பதில் சொல்லி அனுப்பவேண்டும். தாகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது. அதனால் பாவம் வந்தாலும் சரி என்று இருக்கவேண்டும்.
பெண்கள் காலை நேரத்தில் நடைப் பயிற்சி செய்வது இப்போது அதிகரித்துள்ளது. அப்போது ஒருவராகச் செல்லுதல் கூடாது. தவிர நகைகள் போட்டுக் கொண்டு போவதும் உசிதமல்ல. இன்று தங்கம் விற்கும் விலையில் ஒரிரு பவுன்கள் நகைகள் கூட ஆபத்தாக இருக்கின்றன.
ஆனால் பலமுறை பட்டாலும் மனிதனின் மனோபாவம் மாறுவதில்லை என்பது ஒரு சோகமான சூழ்நிலை.