புதன், 17 அக்டோபர், 2012

காணாமல் போன பூனைக்குட்டிகள்.

எங்கள் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்த நான்கு பூனைக்குட்டிகள் எங்கு போயின என்று தெரியாமல் வருந்திக்கொண்டிருந்தேன் அல்லவா. இப்போது கிடைத்த ஒரு நல்ல செய்தி.

எங்கள் வீட்டிலிருந்து ஒரு ஏழெட்டு வீடுகள் தள்ளி, ஒரு வீட்டில் ஒரு முஸ்லிம் பாய் கோழி மற்றும் மட்டன்  பிரியாணிகள் செய்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார். பார்சல் மட்டும்தான். பல இடங்களில் விற்பனை மையங்கள் உள்ளன. எங்கள் வீட்டுக்கு வரும் வேலைக்கார அம்மா அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் குடியிருக்கிறார்கள்.

நேற்று அவர்கள் சொன்ன தகவல். இந்த காணாமல் போன நான்கு பூனைக்குட்டிகளும் அந்த பிரியாணி கடையில்தான் இருக்கின்றனவாம். என் மாப்பிள்ளையும் அந்த வழியாகப் போகும்போது இவைகளைக் கண்டிருக்கிறார். நான் இன்னும் நேரில் பார்க்கவில்லை. ஆகவே, இந்த பூனைக்குட்டிகள் நல்ல வசதியான இடத்தில் இருக்கின்றன என்ற தகவல் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

தாய்ப் பூனை வேகாத இறைச்சிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குட்டிப்பூனைகளுக்கு பிரியாணியே கிடைப்பது ஆண்டவன் திருவிளையாடலே.

இந்த சம்பவத்தில் ஒரு அதிசயம் என்னவென்றால், முதலில் மூன்று குட்டிகள்தான் காணாமல் போயின. அவை பிரியாணிக் கடைக்குப் போய்விட்டன என்று இப்போது தெரிகிறது. அடுத்த நாள் காணாமல் போன ஒரு பூனைக்குட்டியும் எப்படி சரியாக அந்தப் பிரியாணிக் கடைக்கே சென்று மற்ற குட்டிகளுடன் சேர்ந்தது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்! ஒரு சமயம் அந்த மூன்று குட்டிகளில் ஒன்று திரும்பி வந்து, நல்ல இடம் கிடைத்திருக்கிறது என்று சொல்லி, இந்த நாலாவது குட்டியையும் கூட்டிக்கொண்டு போயிருக்குமோ?

இப்போது என் மனதை வாட்டும் விஷயம் என்னவென்றால், இந்த தாய்ப்பூனை தினமும் மூன்று வேளை எங்கள் வீட்டிற்கு வந்து தன் குட்டிகளைத் தேடுகிறது. அதன் குட்டிகள் பிரியாணிக்கடையில் வசதியாக இருக்கின்றன என்ற செய்தியை அதற்குப் புரிய வைப்பது எப்படி? யாருக்காவது பூனை பாஷை தெரிந்திருந்தால் உடனே என்னைத்தொடர்பு கொள்ளவும். ஒரு சமயம் டோண்டு ராகவனுக்குத் தெரிந்திருக்குமோ?