திங்கள், 17 டிசம்பர், 2012

பெட்டி போனாப் போகட்டே. தாக்கோல் இவட உண்டல்லோ!


கேரளாவில் ஒரு பிரபலமான கதை. அங்கு ஒரு நம்பூதிரி, ஒரு பிரயாணம் மேற்கொண்டார். அவருடைய உடமைகளெல்லாவற்றையும் ஒரு பெட்டியில் போட்டு நல்ல பூட்டினால் பூட்டி சாவியை பூணூலில் முடிந்து கொண்டார். போகும் வழியில் அவர் கொஞ்சம் கண்ணசந்து விட்டார். விழித்தபின் பார்த்தால் பெட்டியைக் காணவில்லை.

சக பிரயாணிகளிடம் விசாரித்தார். ஒருவரும் பெட்டியைப் பார்க்கவில்லை என்றனர். சக பிரயாணிகள் அனுதாபத்துடன் இவருக்கு ஆறுதல் கூறினர். அப்போது நம்பூதிரி சொன்னார்.

"பெட்டி போனால் போகட்டே. தாக்கோல் இவட உண்டல்லோ, ஆ கள்ளன் பெட்டியைத் திறக்கான் கூடி இவடதன்னே வரணும். ஆ சமயம் ஞான் அவனைப் பிடிக்கான்"

அப்படீன்னாராம்.

அர்த்தம் மனசிலாயோ?

"அதாவது பெட்டி போனா என்ன, சாவி என்கிட்டதான இருக்கு, அந்த திருடன் பெட்டியைத் திறக்க என்கிட்டதானே வந்தாகணும், அப்ப அவனை நான் பிடிப்பேன்."

கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கார்டுகளின் நெம்பரை வைத்துக்கொண்டு யார் என்ன செய்து விட முடியும்? கார்டு என்னிடம்தானே இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இருப்பார்கள்.

இந்தக் கார்டுகளின் நெம்பர் மட்டும் இருந்தால் போதும், தங்கள் கணக்கிலுள்ள எல்லாப் பணத்தையும் சுருட்டிவிடலாம் என்று அவர்கள் அறிய மாட்டார்கள்.

கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு, மற்றும் இன்டர்நெட் அக்கவுன்ட் வைத்திருக்கும் அன்பர்களே, கொஞ்சம் ஏமாந்தீர்களானால், நீங்கள் விழித்திருக்கும்போதே உங்கள் கண்ணாமுழியைப் பிடுங்கிக்கொண்டு போய்விடுவார்கள். ஜாக்கிரதை.

உங்கள் கார்டு நெம்பர், பாஸ்வேர்டு ஆகியவை எக்காரணம் கொண்டும் அடுத்தவர்களுக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் அப்புறம் உங்கள் பணம் கோவிந்தாதான்.