வியாழன், 20 டிசம்பர், 2012

பதிவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

போனால் வராது. இன்றே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பதிவர்களே, இப்பேர்ப்பட்ட வாய்ப்பு இனி உங்கள் ஆயுட்காலத்தில் வரப்போவதில்லை. இன்று அந்த வாய்ப்பை பயன்படுத்தினால் உண்டு. இல்லையென்றால் உங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும்.

பதிவெழுதும் ஒவ்வொருவருக்கும் தெரியும், பதிவெழுத கருப்பொருள் கிடைப்பது மிகவும் கடினம். நான் உங்களுக்கு ஒன்றல்ல, இரண்டு பதிவுகளுக்கான தலைப்புகளைக் கொடுக்கிறேன். உபயோகித்துக்கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம். பின்னால் வருத்தப்பட்டு பயனில்லை.

1. உலகம் 21 ம் தேதி அழியாது. இதுக்கு நான் கேரண்டி.

           இது இன்று போடவேண்டிய பதிவு.

2. அப்பவே நான் சொன்னேன், பார்த்தீர்களா.

          இது 22 ம் தேதி போடவேண்டிய பதிவு.

சிலர் கேட்கக்கூடும்? அப்படி 21 ம் தேதி உலகம் அழிந்து போனால் என் கேரண்டி என்ன ஆகிறது? அட, கூமுட்டையே, அப்படி 21 ம் தேதி உலகம் அழிஞ்சு போச்சுன்னா உன்னைக் கேக்கறதுக்கு யாரு இருப்பா? நீயே இருக்க மாட்டியே, அப்புறம் என்னத்துக்கு பினாத்தறே?

பதிவுலகத்திற்கு உலகம் அழியறதுக்கு முன்னால ஏதோ என்னால் ஆன சேவையைச் செய்துவிட்டேன். அப்புறம் மாயன் விட்ட வழி.