வியாழன், 28 மார்ச், 2013

கள்ளக்காதலை எதிர்கொள்வது எப்படி?

நாட்டில் அவலங்கள் அதிகப்பட்டு வருகின்றன. நம் மனதிற்கு அவை பிடிக்கவில்லை என்பதற்காக அவைகளை புறக்கண்ப்பதால் அவை மறைந்து விடப்போவதில்லை. அவைகளை நாம் எவ்வகையிலாவது சந்திக்க நேரிடும்.

கள்ளக்காதல் என்பது ஒரு முக்கூட்டுப் பிரச்சினை. கணவன், மனைவி, கள்ளக்காதலன் அல்லது காதலி. இது இன்று அல்லது நேற்று முளைத்த பிரச்சினை இல்லை. காலங்காலமாக இருந்து வரும் பிரச்சினை. இதை சாதாரண மனிதன் எப்படி எதிர்கொள்ளுகிறான் என்று பார்ப்போம்.

ஆண் என்றால் இதை மூன்று வழிகளில் கையாளுகிறான்.

1. கள்ளக்காதலனைப் போட்டுத்தள்ளுவது.

இதுதான் வழக்கமாக நடக்கும் ஒன்று. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் இதை ஒரு குற்றமாகவே கருத மாட்டார்கள். ஆனால் இந்தியாவில் இது ஒரு கொலைக்குற்றமாக கருதப்படுகிறது. இந்தக் குற்றம் புரிபவன் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை பெறுவான். ஜெயிலில் களி சாப்பிடும்போதுதான் அவனுக்கு யோசனை வரும்.

நாம் ஏன் இப்படி செய்தோம் என்று யோசிப்பான். குற்றம் செய்தது அவன் பெண்டாட்டி. இதற்கு நான் தண்டனை அனுபவிக்கிறேனே, அவள் வெளி உலகில் சுதந்திரமாக வாழ்கிறாளே என்று எண்ணி வருந்துவான்.

2. கள்ளக்காதலனையும் பெண்டாட்டியையும் போட்டுத் தள்ளுவது.

மிகவும் உணர்ச்சி வசப்படும் ஆண் செய்யும் காரியம் இதுதான். குற்றம் புரிந்தது இருவர் என்பதால் ஒருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல என்பது இவர்கள் எண்ணம். ஆனால் விளைவு என்னமோ ஒன்றுதான். இரட்டைக் கொலைக்காக இவன் தண்டனை பெறுவான்.

ஜெயில் தண்டனை என்பது சாதாரணமானதல்ல. ஒருவன் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகள் முடிந்து தண்டனை பெற்று அதை அனுபவித்து முடித்து வெளியில் வரும்போது அவன் மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்லமுடியாது.

3. இருவரையும் போட்டுத் தள்ளிவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வது.

இதுதான் உச்சகட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடு. இதில் உள்ள ஒரே சௌகரியம் என்னவென்றால் கதை உடனடியாக முடிந்து விடுகின்றது. போலீஸ்காரர்களுக்கும் நீதிபதிகளுக்கும் வேலை குறைவு. பிரேதப் பரிசோதனை முடித்து அடக்கம் செய்தால் கேஸ் முடிந்துவிடும்.

இந்த மூன்று வழிகளிலும் உள்ள ஒரே வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்பதே.