சினிமா உலகத்தில் பணம் கொள்ளை கொள்ளையா கொட்டி வச்சிருக்குது. வேண்டியதெல்லாம் நல்ல சாக்குகள்தான். உள்ளே போனால் சாக்கு நிறைய பணத்தைக் கட்டி கொண்டுவரலாம்.
இந்த எண்ணம் பலருடைய மனங்களில் வேரூன்றி இருக்கிறது. அந்தக் காலத்தில் கோயமுத்தூரில் ஒரு நல்ல டெய்லர். மிக நன்றாகத் தைப்பார். பணம் கொழித்தது. யாருடைய தூண்டுதலினாலோ சென்னைக்கு சினிமா எடுக்கப்போனார். கைக் காசு முழுவதும் போய் கடனாளியாகத் திரும்பி வந்தார். அந்த சோகத்திலேயே உயிரையும் விட்டார்.
பல சினிமா நடிகர்கள் தாங்கள் நடித்து சம்பாதித்த பணத்தை சினிமா எடுக்கிறேன் என்று ஆரம்பித்து ஓட்டாண்டியாய் மாறி, சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் உயிர் விட்ட கதைகள் மக்களுக்குத் தெரியும்.
இதையெல்லாம் பார்த்த பிறகும் நாகர்கோவிலில் இருந்து நாகராஜன் என்று ஒருவர் கோழி கூவுது என்ற படத்தை கடன் வாங்கி எடுத்து விட்டு படம் சரியான வசூல் கொடுக்காததால் தற்கொலை செய்யலாமா என்று யோசனை செய்து கொண்டிருக்கிறாராம்.
எனக்கு என்ன சந்தேகம் என்றால் சினிமா எடுக்கப்போவதற்கு முன்பு செய்யாத யோசனை இப்பொது எதற்கு என்பதுதான்.