ஞாயிறு, 16 நவம்பர், 2014

டாக்டர் ஜெகில் மற்றும் மிஸ்டர் ஹைடு

எச்.ஜி.வெல்ஸ் எழுதிய இந்தக் கதையை பலரும் படித்திருப்பீர்கள். இது ஒரு விஞ்ஞான கற்பனை.

ஒரு மனிதனுக்குள் இரு வேறு மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது இந்தக் கதையின் அடிப்படை. ஒருவன் நல்லவன். இன்னொருவன் கெட்டவன். அதாவது எல்லோருக்குள்ளும் இந்த இரண்டு குணங்களும் இருக்கிறது என்பது ஒரு சித்தாந்தம்.

ஒரு டாக்டர் தன் பரிசோதனைகளின்போது ஒரு புது மருந்தை அகஸ்மாத்தாக கண்டு பிடிக்கிறார். அந்த மருந்தை சாப்பிட்டால் மனிதன் முற்றிலும் மாறி விடுகிறான். அப்போது அவனுடைய வக்கிர குணங்களெல்லாம் தலை தூக்கி இருக்கின்றன. அதற்குள்ள மாற்று மருந்தை சாப்பிட்டால் பழையபடி நல்ல மனிதராக ஆகி விடலாம்.

இந்த மருந்தை உபயோகித்து அந்த டாக்டர் தன்னை அடிக்கடி மாற்றிக்கொள்கிறார். பிறகு ஒரு மாற்றமுடியாத நிலைக்குப்போய் மாண்டு போகிறார்.

இந்தக் கதையை என் இளமைக் காலத்திலேயே படித்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒரு கற்பனை என் மனதில் தோன்றும். நமக்குள்ளும் இப்படி ஒரு கெட்ட மனிதன் இருப்பானா என்று தோன்றும். அன்றைய காலகட்டத்தில் இதை சோதனை செய்து பார்க்கும் அளவிற்கு தொழில் நுட்பங்கள் வளரவில்லை.

சமீபத்தில் நான் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினேன். அதில் இரு பக்கமும் கேமரா இருக்கிறது. ஆனால் அவைகளை முழுமையாக பயன்படுத்தும் அளவிற்கு நான் தேர்ச்சி பெறவில்லை. ஒரு நாள் ஒரு எக்சிபிஷனில் இந்த போனை வைத்து சில படங்கள் எடுக்க முயற்சி செய்தேன். அப்போது திடீரென்று என் முகம் ஸ்கிரீனில் தெரிந்தது. எதையோ அழுத்த அந்த படம் போனில் பதிவாகிவிட்டது.

வீட்டிற்கு வந்து சாவகாசமாக நான் எடுத்த படங்களைப் பார்த்துக்கொண்டு வரும்போது இந்தப் படமும் தெரிந்தது. அதில் என்ன விசேஷம் என்றால் நான் எச்.ஜி.வெல்ஸ் கதையைப் படித்த போது ஏற்பட்ட ஆசை இந்த படத்தில் நிறைவேறி விட்டது. என்னுடைய மறுபக்கம் இதில் தெளிவாக பதிவாகியுள்ளது.

இதை நீங்களும் பார்க்கவேண்டாமா? அதனால் உங்கள் பார்வைக்கு, என்னுடைய இரண்டு பக்கங்களையும் வைக்கிறேன்.  அநேகமாக இந்தப் படங்களைப் பார்த்த பிறகு என்னுடைய தளத்திற்கு வரும் அன்பர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும் என்று எதிர்பார்க்கிறேன்.



எது என் நல்ல பக்கம், எது என் கெட்ட பக்கம் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.