செவ்வாய், 2 டிசம்பர், 2014

ஒரு நடைமுறை வாழ்க்கைத் தத்துவம்.


வாழ்க்கையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் வருவது சகஜம். அப்படி வந்தால் அதை எப்படி கையாள்வது என்று தெரிந்து கொள்வது அவசியம். தமிழ் டி.வி. சீரியல்களில் வருவது மாதிரி நேரடியாக சம்பந்தப்பட்டவரிடம் போய் சண்டை போடுவது வாழ்க்கைக்கு ஒவ்வாது..

ஒரு பிரபல மனிதரைப்பற்றி அவருடன் பழகிக்கொண்டிருக்கும் ஒருவர் அவதூறாக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். இதை அவருடைய நண்பர்கள் முதல் வேலையாக இந்தப் பெரிய மனிதரிடம் சொல்வார்கள். நண்பர்கள் பணியே அதுதானே. இங்கு கண்டதை அங்கு  சொல்வதும் அங்கு கண்டதை இங்கு சொல்வதும்தானே அவரகளின் தலையாய வேலை.

இதைக் கேட்கும் சாதாரண மனிதர்கள் என்ன செய்வார்கள்? உடனே பொங்கி எழுவார்கள். "அவனுக்கு இவ்வளவு திமிர் ஆகிப்போச்சா, அவனை என்ன செய்கிறேன் பார்?" என்று தாம் தூம் என்று குதிப்பார்கள். இதை அவரது நண்பர்கள் கண், காது, மூக்கு எல்லாம் வைத்து அந்த முதல் நபரிடம் போய் சொல்வார்கள். உன்னை என்னவெல்லாம் சொல்லி திட்டினார் தெரியுமா என்று ஆரம்பித்து விலாவாரியாக நடந்ததை தங்கள் கைச்சரக்கோடு விளக்குவார்கள்.

அவனுக்கு இன்னும் வெறி ஏறிவிடும். இப்படி இரண்டு ரவுண்ட் நண்பர்களின் உதவியால் நடந்த பிறகு, இருவருக்கும் கொலைப் பகை மூண்டு விடும். இரண்டு பக்கத்து நண்பர்களும் இந்த வெறி தணியாத மாதிரி பார்த்துக் கொள்வார்கள். கடைசியில் இந்த வெறி கைகலப்பிலோ அல்லது அதற்கும் மேல் கொலையிலோ முடியும். இத்தகைய கொலைகளை அன்றாடம் தினப் பத்திரிக்கைகளில் நாம் படிக்கிறோம்.

ஆனால் உண்மையாக மனமுதிர்ச்சி பெற்றவர் எப்படி இந்த மாதிரி நிகழ்வுகளை எதிர் கொள்வார் என்று பார்ப்போம். யாரவது நண்பர் வந்து உங்களைப்பற்றி இன்னார் மோசமாகப் பேசினார் என்று சொன்னால் அதைப் பொறுமையாக க் கேட்டுக்கொண்டு அப்படியா,  இருக்கட்டும், அவன் அப்படி பேசக்கூடியவனல்லவே, நான் அவனைக் கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லி அந்தப் பேச்சை வளர விடாமல் அடுத்த செய்திக்குப் போய்விடுவார்.

இந்தச் செய்தியைக் கொண்டு வந்தவருக்கோ சப்பென்று போய்விடும்.

பிறகு சம்பந்தப்பட்ட அவர்கள் நேரில் சந்திக்கும்போது கூட இப்படி ஒரு செய்தி தனக்குக் கிடைத்தது என்று  சொல்லமாட்டார். இந்த செயல் பல தீமைகளைத் தவிர்த்து விடும். மேலும் இதுதான் மனமுதிர்ச்சிக்கு உண்மையான அறிகுறி.