செவ்வாய், 2 டிசம்பர், 2014

ஒரு நடைமுறை வாழ்க்கைத் தத்துவம்.


வாழ்க்கையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் வருவது சகஜம். அப்படி வந்தால் அதை எப்படி கையாள்வது என்று தெரிந்து கொள்வது அவசியம். தமிழ் டி.வி. சீரியல்களில் வருவது மாதிரி நேரடியாக சம்பந்தப்பட்டவரிடம் போய் சண்டை போடுவது வாழ்க்கைக்கு ஒவ்வாது..

ஒரு பிரபல மனிதரைப்பற்றி அவருடன் பழகிக்கொண்டிருக்கும் ஒருவர் அவதூறாக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். இதை அவருடைய நண்பர்கள் முதல் வேலையாக இந்தப் பெரிய மனிதரிடம் சொல்வார்கள். நண்பர்கள் பணியே அதுதானே. இங்கு கண்டதை அங்கு  சொல்வதும் அங்கு கண்டதை இங்கு சொல்வதும்தானே அவரகளின் தலையாய வேலை.

இதைக் கேட்கும் சாதாரண மனிதர்கள் என்ன செய்வார்கள்? உடனே பொங்கி எழுவார்கள். "அவனுக்கு இவ்வளவு திமிர் ஆகிப்போச்சா, அவனை என்ன செய்கிறேன் பார்?" என்று தாம் தூம் என்று குதிப்பார்கள். இதை அவரது நண்பர்கள் கண், காது, மூக்கு எல்லாம் வைத்து அந்த முதல் நபரிடம் போய் சொல்வார்கள். உன்னை என்னவெல்லாம் சொல்லி திட்டினார் தெரியுமா என்று ஆரம்பித்து விலாவாரியாக நடந்ததை தங்கள் கைச்சரக்கோடு விளக்குவார்கள்.

அவனுக்கு இன்னும் வெறி ஏறிவிடும். இப்படி இரண்டு ரவுண்ட் நண்பர்களின் உதவியால் நடந்த பிறகு, இருவருக்கும் கொலைப் பகை மூண்டு விடும். இரண்டு பக்கத்து நண்பர்களும் இந்த வெறி தணியாத மாதிரி பார்த்துக் கொள்வார்கள். கடைசியில் இந்த வெறி கைகலப்பிலோ அல்லது அதற்கும் மேல் கொலையிலோ முடியும். இத்தகைய கொலைகளை அன்றாடம் தினப் பத்திரிக்கைகளில் நாம் படிக்கிறோம்.

ஆனால் உண்மையாக மனமுதிர்ச்சி பெற்றவர் எப்படி இந்த மாதிரி நிகழ்வுகளை எதிர் கொள்வார் என்று பார்ப்போம். யாரவது நண்பர் வந்து உங்களைப்பற்றி இன்னார் மோசமாகப் பேசினார் என்று சொன்னால் அதைப் பொறுமையாக க் கேட்டுக்கொண்டு அப்படியா,  இருக்கட்டும், அவன் அப்படி பேசக்கூடியவனல்லவே, நான் அவனைக் கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லி அந்தப் பேச்சை வளர விடாமல் அடுத்த செய்திக்குப் போய்விடுவார்.

இந்தச் செய்தியைக் கொண்டு வந்தவருக்கோ சப்பென்று போய்விடும்.

பிறகு சம்பந்தப்பட்ட அவர்கள் நேரில் சந்திக்கும்போது கூட இப்படி ஒரு செய்தி தனக்குக் கிடைத்தது என்று  சொல்லமாட்டார். இந்த செயல் பல தீமைகளைத் தவிர்த்து விடும். மேலும் இதுதான் மனமுதிர்ச்சிக்கு உண்மையான அறிகுறி. 

15 கருத்துகள்:

 1. மனமுதிர்ச்சி எல்லோருக்கும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே இது போன்ற ‘கோள் மூட்டும்’ வேலையை செய்யாமல் இருந்தாலே போதும். ஆனால் நம்மில் பலருக்கு அதுதானே பொழுது போக்கு!

  பதிலளிநீக்கு

 2. இதைப் படித்ததும் எனக்கு ஓர் சிறிய கதை சொல்ல வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.

  ஒரு ஏழை. அவனிடம் சொந்தச்சரக்கு ஏதும் கிடையாது. பெரும்பாலும் அங்கே இங்கே என பல இடங்களில் கை வைத்து ஜீவனம் செய்து வருபவன்.

  கொள்கை பிடிப்பு ஏதும் இல்லாவிட்டாலும் மிகப்பெரிய கொள்கை பிடிப்புடையவன் போல சொல்லித் திரிவான். திடீரென ஒருநாள் ஆத்திகம் பேசுவான் மறுநாள் நாத்திகம் பேசுவான். கடவுள் உண்டு என்பான் பிறகு இல்லை என்பான்.

  தான் பெரிய புரட்சியாளன் + சீர்திருத்தவாதி என்று எல்லாம் வீண் சவடால் நினைப்பு. எதையாவது மாற்றி மாற்றி பேசியும் எழுதியும் வந்தான். அவனுக்கு வயது ஏறிக்கொண்டே போனது. மொத்தத்தில் மறை கழண்டு போன கேஸ் என்ற முடிவுக்குப் பலரும் வந்துவிட்டார்கள்.

  ஒருநாள் வேறொருவர் தவறி கீழே விட்டுச்சென்ற 5 பைசா நாணயத்தை கஷ்டப்பட்டு பொறுக்கி எடுத்து வைத்துக்கொண்டான். அந்தத்துருப்பிடித்த நாணயத்தை குளக்கரையில் வைத்து விட்டு குளிக்கச்சென்றான். திரும்ப வந்தவனுக்கு அந்த காசு காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது.

  அதே நேரம் குளக்கரையில் ஒஸத்தியான காரில் வந்து இறங்கிய செல்வச் சீமாட்டி ஒருத்தி தன கை நிறைய நாணயங்களை வைத்துக்கொண்டு குளத்தில் வீசி எறிவதைக் கண்டான்.

  தன் காசையும் அவள்தான் திருடி இருக்க வேண்டும் என ஊரெல்லாம் சொல்லி ஓர் அல்ப சந்தோஷப்படுக்கொண்டான்.

  ஆனால் அதை யாரும் நம்பத்தயாராக இல்லை. ஏனெனில் சொந்தச்சரக்கு ஏதும் இல்லாத துருப்பிடித்த இவனையும், செல்வச் சீமாட்டியான அவளையும் அனைவருக்குமே மிக நன்றாகத் தெரியும்.

  பதிலளிநீக்கு
 3. உண்மைதான். தேவையில்லாத பேச்சுகளுக்கு இடம் கொடுப்பதை தவிர்த்தாலே பல பிரச்னைகள் உருவாகமலே தடுத்துவிடலாம். மனமுதிர்ச்சி பற்றி தெரிந்துகொண்டேன். அவ்வாறே பின்பற்றவும் முயற்சி செய்கிறோம்...

  பகிர்வினிற்கு மிக்க நன்றி ஐயா..

  பதிலளிநீக்கு
 4. அந்த விண்ணுலகில் நாரதன் கலகம் நன்மையில் முடியும் என்று சொல்வார்கள். இந்த மண்ணுலகில் இத்தகைய நாரத(நர)னின் கலகம் பெரும்பாலும் பொறாமையாகவும் சண்டை சச்சரவுகளாகவும் முடிந்து விடுகிறது

  பதிலளிநீக்கு
 5. அருமையான விளக்கம்! இன்றைய உலகில் சில நண்பர்கள் இப்படித்தான் உள்ளனர்!

  பதிலளிநீக்கு
 6. இன்றைய நடமுறை உலகம் இவ்வாறே உள்ளது! தங்கள் பதிவு நன்று!

  பதிலளிநீக்கு
 7. அனுபவம் நிறையக் கற்றுக் கொடுக்கும்...
  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 8. அனுபவம் நிறையக் கற்றுக் கொடுக்கும்...
  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 9. மன முதிர்ச்சி இல்லாதவர்களை அடையாளம் காட்டும் பதிவு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. இந்த முதிர்ச்சி முதுமையில் வருவது போல் இளமையில் எனக்கு வரவில்லையே!
  கோள் சொல்லுவது, கொழுவி விடுவது சிலருக்குக் கைதேர்ந்த கலை.
  "பத்த வைச்சுட்டயே பறட்டை" போல்.

  பதிலளிநீக்கு
 11. ஆத்திரம் கண்களை மறைத்து விடுகிறது சில நேரங்களில் ! நல்ல அறிவுரை .

  பதிலளிநீக்கு
 12. இந்தப் பதிவுகளை யாரும் காப்பியடித்துக் கொள்ளலாம். நன்றி சொல்ல வேண்டியதில்லை. இந்தத் தளத்தில் வரும் படங்கள் பெரும்பாலும் கூகுளிலிருந்து எடுக்கப்பட்டவையே. அவைகளுக்காக கூகுளுக்கு நன்றி.

  சேம் ப்ளட்

  பதிலளிநீக்கு