புதன், 21 ஜனவரி, 2015

மகாபாரதமும் மாதொரு பாகனும்



"நிர்வாணபுரியில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்" என்று ஒரு பழமொழி உண்டு. நான் முதலிலேயே அரைப் பைத்தியம்.  முழுப்பைத்தியம் ஆகாமலிருக்கத்தான் இந்தப் பதிவு.

மாதொரு பாகனைப் பற்றி ஏறக்குறைய பெரும்பாலானோர் தங்கள் தங்கள் கருத்துக்களை பதிவேற்றி விட்டார்கள். நேற்று ராத்திரி, (எதையாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள்) தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தபோது, இதைப்பற்றிய நினைவு வந்தது. ஊரே தீப்பற்றி எரிகிறது,  நாமும் நம் பங்கிற்கு ஏதாவது கொஞ்சம் செய்ய வேண்டாமா என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு.

இராமாயணம், மகாபாரதம் இரண்டும் நம் நாட்டில் இந்துக்களால் போற்றிக் கொண்டாடப்படும் மாபெரும் இதிகாசங்கள். அவற்றைப்பற்றி ஏதாவது மோசமாகப் பேசினால் நான் உயிருடன் எரிக்கப்படுவேன் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். ஆகவே அவற்றைப் பற்றித் தவறாக ஒன்றும் பேசமாட்டேன்.

அதில் வரும் சில நிகழ்வுகளை மட்டும் அப்படியே மேலோட்டமாக சுட்டிக்காட்ட மட்டும் விரும்புகிறேன். இந்த நிகழ்வுகள் ஏற்கெனவே தொலைக் காட்சியில் ஒளி பரப்பப்பட்டவைதான். நான் ஒன்றும் புதிதாக இட்டுக்கட்டவில்லை.

சந்தனு மகாராஜாதான் மகாபாரதத்தில் வரும் முதல் ராஜா. இவருக்கு இரண்டாவது பெண்டாட்டி சத்தியவதி என்ற மீனவ ராஜகுமாரி. சந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் இரு புதல்வர்கள் பிறந்தார்கள். சித்திராங்கதன், விசித்திரவீரியன் என்பவை அவர்கள் பெயர், இதில் சித்திராங்கதன் கல்யாணம் செய்யாமலேயே ஒரு சண்டையில் இறந்து போகிறான்.அடுத்தவன் விசித்திரவீரியன். இவனுக்கு அம்பிகை, அம்பாலிகை என்று இரண்டு காசி நாட்டின் இளவரசிகளை மணமுடிக்கிறார்கள்.

விசித்திரவீரியன் குழந்தைப்பேறு இல்லாமல் இறந்து போகிறான். சத்தியவதி தர்ம சங்கடத்தில் மூழ்கிறாள். ராஜ்யத்திற்கு வாரிசு இல்லை. வாரிசு இல்லாத ராஜயத்தை எதிரிகள் பிடித்துக்கொள்வார்கள். என்ன செய்வது என்று யோசித்து ஒரு உபாயம் செய்கிறாள். அதன் விளைவாக இரண்டு வாரிசுகள் உண்டாகின்றன. திருதராஷ்டிரன், பாண்டு ஆகிய இருவரும்தான் அந்த வாரிசுகள்.

அந்த உபாயம் என்னவென்பதை  டிவி தொடர் மூலம் வாசகர்கள் நன்கு அறிவார்கள். அதை நான் இங்கு விவரித்து தேசப் பிரஷ்டம் ஆக விரும்பவில்லை. அதனால் அதைத் தவிர்க்கிறேன். அதே மாதிரி பாண்டவர்கள் ஐவரும் பிறந்த வழியும் அனைவரும் அறிந்ததே.

இந்தக் கதை நடந்தது திரேதா யுகத்தில். இப்போது நடக்கும் கலியுகத்திலும் இந்த மாதிரி வம்ச விருத்திக்காக சில உபாயங்களைக் கடைப்பிடித்ததாக பெருமாள் முருகன் என்பவர் மாதொரு பாகன் என்கிற தன் நாவலில் குறிப்பிட்டிருக்கிறாராம். நான் இந்த நாவலைப் படித்ததில்லை. திரேதாயுகத்தில் நடந்ததை கலியுகத்திலும் நடந்ததாகச் சொல்லலாமோ?  வம்பில் சிக்கிக்கொண்டார்.

பெருமாள் முருகனுடைய அப்பா ஒரு தீர்க்கதரிசி. தன் மகன் எதிர் காலத்தில் சைவ-வைஷ்ணவப் போராட்டத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக இரண்டு கடவுள் பெயர்களையும் சேர்த்து பெருமாள் முருகன் என்று பெயர் வைத்திருக்கிறார். யாரானாலும் தங்கள் பெயருக்கு "ஹானி" வருகிறமாதிரி நடந்து கொள்ளக்கூடாது. இவர் தன் பெயருக் கேட்ப நடந்து கொள்ளவில்லை.

இப்போது மர-இடுக்கில் வாலை விட்டுவிட்டு ஆப்பை பிடுங்கின குரங்கின் நிலையில் இருக்கிறார். இதனால் நான் சொல்லும் நீதி என்னவென்றால் ஒவ்வொருவரும் தங்கள் பெயருக்கேட்ப நடந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டில் ஆப்பைப் பிடுங்கின குரங்கின் கதிதான் வாய்க்கும்.

நான் என் பெயருக்கேட்ப நடந்து கொள்கிறேனா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். இல்லையென்று சொன்னால் வருத்தப்படமாட்டேன்.

பின்குறிப்பு - குரங்கு வாலை விட்டுட்டு ஆப்பைப் பிடுங்கின படம் கிடைக்கவில்லை. அதனால் இந்தப் படத்துடன் திருப்திப் பட்டுக்கொள்ளவும்.