கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம், பண்பாடு என்று பல சொற்களால் குறிக்கப்படும் குணம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது. இது மக்களின் பழக்க வழக்கங்களைக் குறிப்பிடுவது ஆகும். பெரும்பாலும் இது நம்பிக்கை சார்ந்ததே ஆகும். நம் முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள், நாமும் கடைப்பிடிப்போம் என்ற வகையில் வருவதே இந்த கலாச்சாரப் பண்புகள்.
ஒரு தனி மனிதனின் பண்புகள் அவன் வாழும் சமூகக் கலாச்சாரத்தை ஒட்டி அமைவது இயற்கை. அந்தக் கலாச்சாரத்தின் அங்கங்களை அவ்வப்போது சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கவேண்டியது அந்த சமூகத்தில் உள்ள அனுபவமிக்கவர்களின் கடமையாகும்.
ஆனால் இன்றைய விஞ்ஞான அறிவு அபரிமிதமாக வளர்ந்துள்ள நிலையில் இத்தகைய கலாச்சார அடையாளங்கள் தேவையில்லை என்று பலர் நினைக்கிறார்கள். மக்கள் மனம் மாற்றமடையும்போது கலாச்சாரங்கள் மற்றமடையத்தான் செய்யும்.
இத்தகைய மாற்றங்களைக் கண்டு சிலர் புலம்புவார்கள். அவர்களை பழமைவாதிகள் என்று உலகம் புறக்கணித்து விட்டு தன் போக்கில் போய்க்கொண்டே இருக்கும்.
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"