செவ்வாய், 3 மார்ச், 2015

கல்யாணத்தில் வெண்பொங்கல் டிபன்

       
                                          Image result for வெண்பொங்கல்

நேற்று நாங்கள் (நான், எனது மனைவி, மனைவியின் இரண்டு சிநேகிதிகள்) ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தோம்.

உ.கி. போண்டா சாப்பிட்ட விவகாரம் என்ன ஆயிற்று என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. நான் அந்தக் காலத்து ஆள் அல்லவா? சொளையாக 5000 ரூபாயைக் கொண்டு போய் கிணற்றில் போட நான் என்ன அவ்வளவு இளிச்சவாயனா? அப்படி இப்படி என்று சால்ஜாப்பு சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். கொஞ்ச நாள் ஆனால் மக்கள் (அதாவது என் குடும்பத்தினர்) தங்கள் அன்றாட வேலைகளில் இதை மறந்து விடுவார்கள். எனக்கு 5000 ரூபாய் ஆதாயம்.

கல்யாண விவகாரத்திற்கு வருவோம். தமிழ்நாட்டுக் கல்யாணங்களில் காலை டிபனுக்கு வெண்பொங்கல் கட்டாயம் இருக்கும். இது நீங்கள் அறிந்ததே. ஆனால் நீங்கள் அறியாத விஷயம் ஒன்று இருக்கிறது. அதுதான் அந்த வெண்பொங்கல் கல்யாண விருந்தில் எப்படி தயார் செய்கிறார்கள் என்பதே.

பொதுவாகவே உணவு விடுதிகளிலும் கல்யாண வீடுகளிலும் சமையல் செய்யும் இடத்தைப் பார்த்தவர்கள் தங்கள் ஆயுளுக்கும் உணவு விடுதிகளிலும் கல்யாண வீடுகளிலும் சாப்பிட மாட்டார்கள். ஏனெனில் அங்கு சமையல் அவ்வளவு "சுத்தமாக" நடக்கும்.

காய்கறிகளை வேகவைத்து அவை வெந்த தண்ணீரை வடித்து விட்டால் அந்த காய்கறிகளில் உள்ள சத்துக்கள் பெரும்பாலும் அந்த வேகவைத்த தண்ணீருடன் வீணாகிப் போய் விடும் என்று உணவுச் சத்து நிபுணர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதனால் நம் இல்லத்தரசிகள் இப்போதெல்லாம் காய்கறிகளை அளவான தண்ணீரில் வேகவைத்து சமைக்கிறார்கள். இது நல்லதா கெட்டதா என்னும் ஆராய்ச்சியை பிறிதொரு பதிவில் பார்ப்போம்.

கல்யாண சமையல்காரர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் காய்கறிகளைக் கழுவுவதையே விட்டு விட்டார்கள். ஏனெனில் அதனால் காய்கறிகளில் இருக்கும் சத்து வீணாகப் போய்விடும் அல்லவா? தற்காலக் காய்கறிகளில் பலவிதமான நவீன ஊட்டச்சத்துக்கள் பூச்சிக்கொல்லி என்னும் நாமத்தில் சேர்க்கப்படுகின்றன. காய்கறிகளைக் கழுவினால் அந்த ஊட்டச்சத்துக்கள் வீணாகப் போய்விடுமல்லவா? அதனால்தான் கல்யாண வீட்டுச் சமையல்காரர்கள் காய்கறிகளைக் கழுவுவதில்லை.

இப்போது வெண்பொங்கலுக்கு வருவோம். நல்ல வெண்பொங்கல் செய்ய நல்ல பச்சரிசி, பயத்தம்பருப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவைத்து, பின்பு நல்ல நெய்யில் முந்திரிப்பருப்பு, மிளகு, திராட்சை சேர்த்து தாளித்து, தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிட்டால் அது வெண்பொங்கல் சாப்பிட்டதற்கு அடையாளம். (படம் பார்க்க). இந்தக் கொடுப்பினை இல்லாதவர்கள் உணவு விடுதியிலோ, அல்லது கல்யாண வீட்டிலோ இந்த வெண்பொங்கலைப் பார்த்தால் ஒரு பிடி பிடித்து விடுவார்கள்.

பெரும்பாலானவர்களுக்கு இது ஜீரணம் ஆகிவிடும். ஆனால் என்னைப் போன்ற கிழடுகளுக்கு இது ஜீரணம் ஆகாது. இதை ஓரிருமுறை அனுபவத்தால் கண்ட பிறகு, கல்யாண வீடுகளில் தூரத்தில் வெண்பொங்கல் வருவதைப் பார்த்தவுடன் ஜாக்கிரதையாகி விடுவேன். என் இலைக்கு வரும்போது இலையை இரண்டு கைகளாலும் மூடிக்கொண்டு விடுவேன்.

நேற்றும் கல்யாண விட்டில் நானும் என் மனைவியும் இந்த தற்காப்புக் கலையைப் பயன்படுத்தி வெண்பொங்கல் ஆபத்திலிருந்து தப்பித்தோம். ஆனால் எங்களுடன் வந்திருந்த மனைவியின் சிநேகிதிகளுக்கு இந்தக் கலை தெரியாததால் வெண்பொங்கலை வாங்கிச் சாப்பிட்டு விட்டார்கள். அது மட்டுமா, திரும்பி வரும்போது அந்த வெண்பொங்கலை மிகவும் சிலாகித்து "ஆஹா, என்ன ருசியாய் இருந்தது அந்த வெண்பொங்கல்" என்று பேசிக்கொண்டு வந்தார்கள். நானும் கூட, அடடா, நாம் ஒரு நல்ல உணவைத் தவற விட்டு விட்டோமோ என்று நினைத்துக் கொண்டு வந்தேன்.

அதில் ஒரு சிநேகிதி எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே வசிக்கிறார்கள். நான் மதிய உணவு முடித்துவிட்டு என் வழக்கமான முக்கிய பணியை முடித்துவிட்டு (என்ன முக்கியமான பணி, பகல் தூக்கம்தான், என்ன தலை போகிற வேலை இருந்தாலும் இதைத் தவற விடமாட்டேன்.) எழுந்தவுடன் என் மனைவி, சேதி தெரியுமா என்றாள்.

இப்பத்தானே தூங்கி எழுந்திரிச்சேன், சேதியெல்லாம் எப்படித் தெரியும் என்றேன். மனைவி சொன்னாள். அந்த பக்கத்து வீட்டு என் சிநேகிதி கல்யாண வீட்டில் வெண்பொங்கல் சாப்பிட்டாள் அல்லவா, அது அவளுக்கு ஜீரணமாகாமல் வாந்தியாகி, இப்போதுதான் நம்ம பொண்ணுகிட்ட (எங்க பொண்ணு டாக்டர்) வந்து மருந்து வாங்கிகிட்டுப் போறாங்க, நாம அந்த வெண்பொங்கலைச் சாப்பிடாததால் தப்பித்தோம் என்றாள்.

அப்படியா என்றேன். அப்புறம் என் மனைவி அந்தச் சம்பவத்திற்கு கண், காது, மூக்கு எல்லாம் வைத்து விரிவாக ஒரு அரை மணி நேரம் கதை சொன்னாள். கதை கேட்டுக் கொண்டே காப்பி குடித்து முடித்தேன். மனம் என் நல்ல காலத்தை எண்ணி சந்தோஷப் பட்டது.

கல்யாண வீட்டில் வெண் பொங்கலில் உள்ள ரகசியம் என்னவென்றால் அவர்கள் நெய்க்குப் பதிலாக டால்டாவைப் பயன்படுத்துவதுதான். இப்போதெல்லாம் டால்டாவை வீட்டில் யாரும் உபயோகப் படுத்துவதில்லை. உணவு விடுதிகளிலும் கல்யாண வீட்டுகளிலும்தான் இந்தக் கண்றாவியைப் பயன்படுத்துகிறார்கள். அதுவும் சரக்கு கொஞ்சம் பழையதாக இருந்து விட்டால் அதன் வீரியம் பலமடங்காக இருக்கும்.

ஆகவே, நண்பர்களே கல்யாண வீட்டில் வெண்பொங்கல் சாப்பிடுவதற்கு முன் உங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் நல்ல டாக்டர்கள் அல்லது நல்ல மருத்துவமனை இருக்கிறதா என்று யோசித்து முடிவு செய்த பிறகு சாப்பிடுங்கள்.

                                          Image result for stethoscope