செவ்வாய், 3 மார்ச், 2015

கல்யாணத்தில் வெண்பொங்கல் டிபன்

       
                                          Image result for வெண்பொங்கல்

நேற்று நாங்கள் (நான், எனது மனைவி, மனைவியின் இரண்டு சிநேகிதிகள்) ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தோம்.

உ.கி. போண்டா சாப்பிட்ட விவகாரம் என்ன ஆயிற்று என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. நான் அந்தக் காலத்து ஆள் அல்லவா? சொளையாக 5000 ரூபாயைக் கொண்டு போய் கிணற்றில் போட நான் என்ன அவ்வளவு இளிச்சவாயனா? அப்படி இப்படி என்று சால்ஜாப்பு சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். கொஞ்ச நாள் ஆனால் மக்கள் (அதாவது என் குடும்பத்தினர்) தங்கள் அன்றாட வேலைகளில் இதை மறந்து விடுவார்கள். எனக்கு 5000 ரூபாய் ஆதாயம்.

கல்யாண விவகாரத்திற்கு வருவோம். தமிழ்நாட்டுக் கல்யாணங்களில் காலை டிபனுக்கு வெண்பொங்கல் கட்டாயம் இருக்கும். இது நீங்கள் அறிந்ததே. ஆனால் நீங்கள் அறியாத விஷயம் ஒன்று இருக்கிறது. அதுதான் அந்த வெண்பொங்கல் கல்யாண விருந்தில் எப்படி தயார் செய்கிறார்கள் என்பதே.

பொதுவாகவே உணவு விடுதிகளிலும் கல்யாண வீடுகளிலும் சமையல் செய்யும் இடத்தைப் பார்த்தவர்கள் தங்கள் ஆயுளுக்கும் உணவு விடுதிகளிலும் கல்யாண வீடுகளிலும் சாப்பிட மாட்டார்கள். ஏனெனில் அங்கு சமையல் அவ்வளவு "சுத்தமாக" நடக்கும்.

காய்கறிகளை வேகவைத்து அவை வெந்த தண்ணீரை வடித்து விட்டால் அந்த காய்கறிகளில் உள்ள சத்துக்கள் பெரும்பாலும் அந்த வேகவைத்த தண்ணீருடன் வீணாகிப் போய் விடும் என்று உணவுச் சத்து நிபுணர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதனால் நம் இல்லத்தரசிகள் இப்போதெல்லாம் காய்கறிகளை அளவான தண்ணீரில் வேகவைத்து சமைக்கிறார்கள். இது நல்லதா கெட்டதா என்னும் ஆராய்ச்சியை பிறிதொரு பதிவில் பார்ப்போம்.

கல்யாண சமையல்காரர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் காய்கறிகளைக் கழுவுவதையே விட்டு விட்டார்கள். ஏனெனில் அதனால் காய்கறிகளில் இருக்கும் சத்து வீணாகப் போய்விடும் அல்லவா? தற்காலக் காய்கறிகளில் பலவிதமான நவீன ஊட்டச்சத்துக்கள் பூச்சிக்கொல்லி என்னும் நாமத்தில் சேர்க்கப்படுகின்றன. காய்கறிகளைக் கழுவினால் அந்த ஊட்டச்சத்துக்கள் வீணாகப் போய்விடுமல்லவா? அதனால்தான் கல்யாண வீட்டுச் சமையல்காரர்கள் காய்கறிகளைக் கழுவுவதில்லை.

இப்போது வெண்பொங்கலுக்கு வருவோம். நல்ல வெண்பொங்கல் செய்ய நல்ல பச்சரிசி, பயத்தம்பருப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவைத்து, பின்பு நல்ல நெய்யில் முந்திரிப்பருப்பு, மிளகு, திராட்சை சேர்த்து தாளித்து, தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிட்டால் அது வெண்பொங்கல் சாப்பிட்டதற்கு அடையாளம். (படம் பார்க்க). இந்தக் கொடுப்பினை இல்லாதவர்கள் உணவு விடுதியிலோ, அல்லது கல்யாண வீட்டிலோ இந்த வெண்பொங்கலைப் பார்த்தால் ஒரு பிடி பிடித்து விடுவார்கள்.

பெரும்பாலானவர்களுக்கு இது ஜீரணம் ஆகிவிடும். ஆனால் என்னைப் போன்ற கிழடுகளுக்கு இது ஜீரணம் ஆகாது. இதை ஓரிருமுறை அனுபவத்தால் கண்ட பிறகு, கல்யாண வீடுகளில் தூரத்தில் வெண்பொங்கல் வருவதைப் பார்த்தவுடன் ஜாக்கிரதையாகி விடுவேன். என் இலைக்கு வரும்போது இலையை இரண்டு கைகளாலும் மூடிக்கொண்டு விடுவேன்.

நேற்றும் கல்யாண விட்டில் நானும் என் மனைவியும் இந்த தற்காப்புக் கலையைப் பயன்படுத்தி வெண்பொங்கல் ஆபத்திலிருந்து தப்பித்தோம். ஆனால் எங்களுடன் வந்திருந்த மனைவியின் சிநேகிதிகளுக்கு இந்தக் கலை தெரியாததால் வெண்பொங்கலை வாங்கிச் சாப்பிட்டு விட்டார்கள். அது மட்டுமா, திரும்பி வரும்போது அந்த வெண்பொங்கலை மிகவும் சிலாகித்து "ஆஹா, என்ன ருசியாய் இருந்தது அந்த வெண்பொங்கல்" என்று பேசிக்கொண்டு வந்தார்கள். நானும் கூட, அடடா, நாம் ஒரு நல்ல உணவைத் தவற விட்டு விட்டோமோ என்று நினைத்துக் கொண்டு வந்தேன்.

அதில் ஒரு சிநேகிதி எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே வசிக்கிறார்கள். நான் மதிய உணவு முடித்துவிட்டு என் வழக்கமான முக்கிய பணியை முடித்துவிட்டு (என்ன முக்கியமான பணி, பகல் தூக்கம்தான், என்ன தலை போகிற வேலை இருந்தாலும் இதைத் தவற விடமாட்டேன்.) எழுந்தவுடன் என் மனைவி, சேதி தெரியுமா என்றாள்.

இப்பத்தானே தூங்கி எழுந்திரிச்சேன், சேதியெல்லாம் எப்படித் தெரியும் என்றேன். மனைவி சொன்னாள். அந்த பக்கத்து வீட்டு என் சிநேகிதி கல்யாண வீட்டில் வெண்பொங்கல் சாப்பிட்டாள் அல்லவா, அது அவளுக்கு ஜீரணமாகாமல் வாந்தியாகி, இப்போதுதான் நம்ம பொண்ணுகிட்ட (எங்க பொண்ணு டாக்டர்) வந்து மருந்து வாங்கிகிட்டுப் போறாங்க, நாம அந்த வெண்பொங்கலைச் சாப்பிடாததால் தப்பித்தோம் என்றாள்.

அப்படியா என்றேன். அப்புறம் என் மனைவி அந்தச் சம்பவத்திற்கு கண், காது, மூக்கு எல்லாம் வைத்து விரிவாக ஒரு அரை மணி நேரம் கதை சொன்னாள். கதை கேட்டுக் கொண்டே காப்பி குடித்து முடித்தேன். மனம் என் நல்ல காலத்தை எண்ணி சந்தோஷப் பட்டது.

கல்யாண வீட்டில் வெண் பொங்கலில் உள்ள ரகசியம் என்னவென்றால் அவர்கள் நெய்க்குப் பதிலாக டால்டாவைப் பயன்படுத்துவதுதான். இப்போதெல்லாம் டால்டாவை வீட்டில் யாரும் உபயோகப் படுத்துவதில்லை. உணவு விடுதிகளிலும் கல்யாண வீட்டுகளிலும்தான் இந்தக் கண்றாவியைப் பயன்படுத்துகிறார்கள். அதுவும் சரக்கு கொஞ்சம் பழையதாக இருந்து விட்டால் அதன் வீரியம் பலமடங்காக இருக்கும்.

ஆகவே, நண்பர்களே கல்யாண வீட்டில் வெண்பொங்கல் சாப்பிடுவதற்கு முன் உங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் நல்ல டாக்டர்கள் அல்லது நல்ல மருத்துவமனை இருக்கிறதா என்று யோசித்து முடிவு செய்த பிறகு சாப்பிடுங்கள்.

                                          Image result for stethoscope

36 கருத்துகள்:

 1. வெண் பொங்கல் கூடவே, பிழிந்தால் கால் லிட்டர் எண்ணெய் வரும் வடையை சொல்லவில்லையே...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த பதிவுக்கு விஷயம் வேண்டாமா?
   ஆனாலும் எண்ணெய் தோய்ந்த வடையை விட அந்த வடை பற்றிய அய்யா அவர்களின் பதிவு சுவையாகவே இருக்கும். வயிற்றை ஒன்றும் செய்யாது.

   சேலம் குரு

   நீக்கு
 2. வெண் பொங்கலின் பின்னாள் இப்படி ஒரு கதை இருக்கிறதா
  எச்சரித்தமைக்கு நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 3. என்னதான் இருந்தாலும் சாப்பாட்டுல இப்பிடி ஓரவஞ்சனை காட்டுவது எனக்குப் பிடிக்காது :)
  ரசித்த பதிவு நல்ல நகைச்சுவையுண்வுடன் கூடியதும் கூட

  பதிலளிநீக்கு
 4. உங்கள் லட்சிய இலக்கை (தமிழ்மணத்தில் முதலிடம் ) நெருங்கிட்டீங்க போல வாழ்த்துகள் நைனா.
  தம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் வல்ல இறைவன் துணையுடன் திரு. கந்தசாமி அவரின் லட்சிய இலக்கை (தமிழ்மணத்தில் முதலிடம் ) அடைவார்.

   நீக்கு
 5. X-ray எதற்கு என்றால் வயசானால் heart enlargement இருதய குறைபாடு உண்டாவதற்கு சாத்தியங்கள் உண்டு. அப்படி ஏதும் உண்டோ என்று கண்டுபிடிக்கவே.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி வயதானால் ஏற்படும் குறைபாடுகளைத் தெரிந்து கொள்ளலாமே தவிர, அவைகளை நிவர்த்தி செய்ய மார்க்கம் இல்லையே? இது சும்மா இருக்கும் சங்கை ஊதிக்கெடுப்து போல்தானே, ஸ்வாமி.

   நீக்கு
  2. Aiyaa

   I made two comments. In the previous comment I suggested ECG and X-ray to be sure of healthy Heart. I wanted to explain why X-ray should be taken. That is why the second comment.

   Nothing will happen even if you find something wrong with your heart, even if it is enlarged to some extent. Only the Doctor will say " You have a Large Heart" and make you pay a large fee. Medicines are available for stopping enlargement of Heart.

   குறைபாடுகளைக் கண்டுபிடித்தால் அதற்குரிய காரணங்கள் தெரிய வரும். காரணங்களைத் தவிர்க்க முடியும்.

   அவ்வையார் சொன்னபடி நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும் என வாழலாம் அல்லவா.
   Jayakumar

   நீக்கு
  3. "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்ற வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப இந்த மாதிரி x-ray ECG போன்றன நமக்கு "நோய்முதல் நாட" உதவுகின்றன. "அது தணிக்கும் வாய் நாட" டாக்டர்கள் உதவுகிறார்கள். ஆனால் என்ன, இப்போது அந்த கருவிகளை உபயோகிக்க பரிசோதனை மையங்கள் வசூலிக்கும் கட்டணங்களை நினைத்தால் பயமாக இருக்கிறது. அந்த கட்டணங்களை பார்த்தவுடன் வரும் மயக்கத்தை தீர்க்க இன்னொரு டாக்டரை அணுகவேண்டும் போலிருக்கிறது.

   திருச்சி அஞ்சு

   நீக்கு
 6. சாதாரணமாகவே பொங்கல் சாப்பிட மாட்டேன். அதுவும் திருமண விருந்துகளில் சாப்பிடவே மாட்டேன். வயிறு 'டம்'மென்றாகி அடுத்தடுத்துச் சுவைக்க வேண்டியவைகளைச் சுவைக்க விடாது செய்து விடும்! ஆனால் பாபா கோவில் பொங்கல் விதிவிலக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாபா கோவிலுடன் சந்தோஷி மாதா கோவிலையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வேறு எங்கு சாப்பிட்டாலும் வயிறு காலி. அடுத்த வேளைக்கு எவ்வளவு சுவையான சாப்பாட்டு வாசனை மூக்கை துளைத்தாலும் லங்கனம்தான்

   சேலம் குரு

   நீக்கு
  2. கல்யாண விருந்துகளில் வயிறு டம் என்று ஆவதற்கு காரணம் பரிமாறும் சாப்பாட்டின் அளவை குறைக்கத்தானாம். கல்யாண சமையல்காரர் ஒருவர் சொன்னது. சாப்பாட்டில் சமையல் சோடா மற்றும் சில வஸ்துக்களை சேர்த்து விட்டால் கொஞ்சம் சாப்பிடும் போதே வயிறு நிறைந்தது போல் ஆகிவிடுமாம். அப்புறம் என்ன சாப்பாடு மிச்சம்தானே. பிறகு சாப்பிட்டவர்களுக்குத்தான் பிரச்சனை.

   திருச்சி தாரு

   நீக்கு

 7. // நண்பர்களே கல்யாண வீட்டில் வெண்பொங்கல் சாப்பிடுவதற்கு முன் உங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் நல்ல டாக்டர்கள் அல்லது நல்ல மருத்துவமனை இருக்கிறதா என்று யோசித்து முடிவு செய்த பிறகு சாப்பிடுங்கள்.//

  வந்த பின் அவதிப்படுவதைவிட வருமுன் காப்பது நல்லது அல்லவா? எனவே நீங்கள் செய்ததுபோல் அதை சாப்பிடாமல் இருப்பதே மேல் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நண்பர்களே கல்யாண வீட்டில் வெண்பொங்கல் சாப்பிடுவதற்கு முன் உங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் நல்ல டாக்டர்கள் அல்லது நல்ல மருத்துவமனை இருக்கிறதா என்று யோசித்து முடிவு செய்த பிறகு சாப்பிடுங்கள்.//

   அதனோடு உங்கள் பர்ஸ் கனமாக இருக்கிறதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் பக்கத்திலேயே டாக்டர்கள் இருந்தாலும் மருத்துவமனை இருந்தாலும் அது உபயோகப்படாது. "கையில காசு வாயில தோசை" பழமொழி.
   "வாயில வெண் பொங்கல் (என்றால்) கையில் காசை வைத்துக்கொள்" என்பது புது மொழி.

   திருச்சி அஞ்சு

   நீக்கு
  2. இருந்தாலும் ஆசை விடுகிறதா? வயதை பார்த்து உடல்நிலையை பார்த்து வீட்டில்தான் full control எனவே இப்படி வெளியில் வரும் போதுதான் நாவுக்கு சுவையாக இப்படி அப்படி சாப்பிட முடிகிறது. ஆனால் இந்த டால்டா சமாச்சாரம் நம்மை காட்டிக்கொடுத்து விடுகிறது.

   காயத்ரி மணாளன்

   நீக்கு
  3. ஆமாம் இந்த டால்டா மாதிரி வஸ்துகளுக்கு ஒரு தடை விதித்து விட்டால் என்ன? இந்த மாதிரி வயிற்று தொந்திரவு தருவதை தவிர டால்டாவுக்கு வேறு ஏதாவது பயன் இருக்கிறதா என்ன? தெரியவில்லை.

   சேலம் குரு

   நீக்கு
 8. இந்த பதிவை பார்த்ததுமே வெண்பொங்கல் சாப்பிடுற ஆசையையே போய்விட்டது....

  மலர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியெல்லாம் துறவு பூணவேண்டியதில்லை. வீட்டில் செய்து திவ்யமாகச் சாப்பிடலாம். ஒன்றும் ஆகாது. எங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை செய்கிறோம். (குழப்பம் வேண்டாம்.என் மனைவி செய்கிறாள்)

   நீக்கு
  2. //(குழப்பம் வேண்டாம்.என் மனைவி செய்கிறாள்)//

   நாங்கள் நம்பிவிட்டோம்.
   நாங்களும் வீட்டில் "எங்கள் மனைவி செய்துதான் சாப்பிடுகிறோம்."
   எதற்கு இந்த வீண் வேலை? பேசாமல் "நானோ அல்லது என் மனைவியோ - நிலைமையை பொறுத்து - செய்து சாப்பிடுகிறோம் " என்று உண்மையை சொல்லிவிட வேண்டியதுதானே

   திருச்சி தாரு .

   நீக்கு
  3. திருவிளையாடல் படத்தில் தருமி வேடத்தில் நடிக்கும் நாகேஷ் அவர்கள் "நான், நானேதான் இந்த பாடலை எழுதி கொண்டு வந்திருக்கிறேன்" என்று சொல்வது போல வெண் பொங்கலை உங்கள் வீட்டில் "உங்கள் மனைவி, உங்கள் மனைவியேதான் செய்கிறார்கள்". நீங்கள் சாப்பிட மட்டும்தான் செய்கிறீர்கள்.

   சேலம் குருப்ரியா

   நீக்கு
  4. இப்படியெல்லாம் சீண்டினால் உண்மை வெளிவரும் என்று நீங்கள் எதிர்பார்த்திருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். நானும் கொஞ்சம் சமையல் செய்வேன். கோழி வறுவல், வெஜிடபிள் பிரியாணி இந்த மாதிரி ஸ்பெஷல் ஐட்டங்கள்தான் என் பக்கம் வரும். இந்த மாதிரி ஆர்டினரி வெண்பொங்கல் எல்லாம் செய்வது என் தகுதிக்கு கேவலம்.

   நீக்கு
 9. என் வீட்டில் செய்யும் பொங்கல் மாதிரி எங்கும் ருசிப்பதில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதற்குக் காரணம் ஆத்துக்காரியோட அன்பும் சேர்வதால்தான்.

   நீக்கு
  2. காரணம் ஆத்துக்காரியின் அன்பு மட்டுமில்லை. அத்தகைய அன்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், இந்த வயதிலும் சுறுசுறுப்பாக எழுந்து நமக்காக செய்கிறார்களே என்ற நமது மனோநிலையும்தான் காரணம்.இரண்டும் சேரும்போது சுவை தூக்கிக்கொண்டு போய்விடுகிறது.

   காயத்ரி மணாளன்

   நீக்கு
 10. வெண் பொங்கல் எனக்குப் பிடிப்பதில்லை... சாப்பிடுவது என்றால் வேப்பெண்ணைய் சாப்பிடுவது போல்தான்....
  எச்சரிக்கைப் பகிர்வா ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேப்பண்ணெய் சாப்பிடும் போதுதான் கசப்பு. பின்னர் அதன் பலன் உடம்புக்கு ரொம்பவே நல்லது ஆனால் இந்த வெண் பொங்கல் இருக்கிறதே அது சாப்பிடும் போது அப்படியே தேவாமிர்தம்தான். ஆனால் அதன் பலன்? வயிறு தொந்திரவுடன் இந்த வயதில் நாக்கை கட்ட முடியாமல் அப்படி என்ன சாப்பிட வேண்டியிருக்கிறது என்று வசவு வேறு.

   காயத்ரி மணாளன்

   நீக்கு
 11. பொருளாதாரம் இப்படி இருந்தாதான் நல்லா இருக்கும். இப்ப பாருங்க, டால்டா தொழில், டாக்டர் தொழில், மருந்துக்கடை தொழில், மருந்து செய்றவங்க தொழில் எல்லாம் செழிப்பா ஆகும் இல்லையா? ரொம்ப சுயநலவாதியா இருக்கக் கூடாதுங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயையோ, அப்ப நான் இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டேனா? அதனால்தான் பெட்ரோல், டீசல் விலையெல்லாம் ஏறிப்போச்சா? இனிமேல் இந்த மாதிரி தப்பெல்லாம் செய்யமாட்டேன் என்று மோடி மேல சத்தியம் செய்கிறேன். இந்தப் பாவத்துக்கு பிராயச்சித்தமா (காசு செலவாகாம) என்ன செய்யவேணும்னு சொல்லுங்க, பக்கிரிசாமி, செஞ்சுடறேன்.

   நீக்கு
  2. இத்துடன் அடுத்த வேளை பட்டினி இருப்பதால் (அல்லது குறைவாக சாப்பிடுவதால்) உணவு குறைவாக செலவாகும். உணவுபஞ்சத்தை தவிர்க்கலாம். one unit saved is teo units generated என்று சொல்வது மாதிரி ஒரு வேளை உணவை மிச்சப்படுத்தினால் இருவேளை உணவை உற்பத்தி செய்ததற்கு சமமில்லையா?
   ஒரே வெண்பொங்கலில் எத்தனை மாங்காய்கள்.

   துளசி மைந்தன்

   நீக்கு
  3. எண்பதுக்கு பொங்கல் போட்டு ஜமாய்ச்சுடுவோம் !

   நீக்கு
  4. என்னங்க நீங்க, என் திட்டத்தையே மாத்தறீங்க, 80 க்கு கெடா வெட்டறதா சொந்தக்காரங்க கிட்ட சொல்லியாச்சே?

   நீக்கு
 12. வெண்பொங்கல் எச்சரிக்கை பலரிற்கு உதவும்.
  மிக நன்றாக எழுதியிருந்தீர்கள்..
  தூக்கம் சொன்னீர்களே! என் கணவரும்
  இத் தூக்கம் கொள்வார். அதன் பின் உசாராக இருப்பார்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 13. பழனி. கந்தசாமி ஐயா...

  கோயம்புத்தூர் "அன்னபூர்ணா-கௌரிஷங்கர்" உணவகங்களில் "வெண்பொங்கல்" மற்றும் (அந்த சற்றே இனிக்கும்) சாம்பாரின் தரம் எப்படி? நான் கோவை வரும் போது விரும்பிச் சாப்பிடுகிறேன். நீங்கள் அதை எப்போதும் சாப்பிடுவதில்லையா?

  சங்கர நாராயணன். தி
  ஆம்ஸ்டர்டாம்

  பதிலளிநீக்கு
 14. ஆகவே, நண்பர்களே கல்யாண வீட்டில் வெண்பொங்கல் சாப்பிடுவதற்கு முன் உங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் நல்ல டாக்டர்கள் அல்லது நல்ல மருத்துவமனை இருக்கிறதா என்று யோசித்து முடிவு செய்த பிறகு சாப்பிடுங்கள்.// ஹஹஹஹ் அதான் நாங்கல்லாம் கல்யாண வீட்டுல வெண் பொங்கல் எல்லாம் சாப்பிடறதே இல்லை....

  பதிலளிநீக்கு