திங்கள், 13 ஏப்ரல், 2015

தயிர் சாதம் செய்வது எப்படி?

                             
                                          Image result for curd rice

தயிர் சாதத்திற்கு தயிர் வேண்டும் என்று பல இல்லத்தரசிகள் நினைத்துக்கொண்டிருப்பார்கள். அது மிக மிகத் தவறான கருத்தாகும். நான் இங்கு தயிரில்லாமல் தயிர் சாதம் செய்யும் ரகசியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நல்ல நைஸ் பச்சரிசி அல்லது புழுங்கரிசி, அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப எடுத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி சீக்கிரம் வெந்து விடும். புழுங்கரிசி பழைய அரிசியாக இருந்தால் அதிகம் தண்ணீரும் நேரமும் வேண்டும். புதிய அரிசியாக இருந்தால் தண்ணீர் குறைவாகவும் சீக்கிரமாகவும் வெந்து விடும்.

அரை லிட்டர் அரிசியை எடுத்து ஊறவைத்து களைந்து குக்கரில் போதுமான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும். சாதாரணமாக சாப்பாடு செய்யும் அளவிற்கு மேல் ஒரு அரை டம்ளர் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும். சாதம் நன்றாகக் குழையவேண்டும். அதற்காக ஓரிரண்டு விசில் அதிகமாக விடவும். பிறகு குக்கரை இறக்கி ஆற விடவும்.

ஓரளவு ஆறினதும் குக்கர் வெய்ட்டை எடுத்து விட்டு மூடியைத் திறக்கவும்.
சாதத்தை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டவும். இப்போது ஒரு பருப்பு மத்தினால் சாதத்தை நன்கு மசிக்கவும். கொஞ்சம் வெண்ணையையும் போட்டுக்கொள்ளலாம். சாதம் எவ்வளவு குழைவாக ஆகிறதோ அந்த அளவிற்கு மசிக்கவும்.

கடைசியாக மசிக்கு முன் தேவையான பொடி உப்பைச் சேர்த்து மசிக்கவும். இப்போது சாதம் கை பொறுக்கும் அளவில் சூடாக இருக்கவேண்டும். இப்போது நன்கு காய்ச்சி ஓரளவிற்கு ஆறின ஒரு லிட்டர் பாலை இந்த மசித்த சாதத்தில் ஊற்றி நன்கு கலக்கவும். இப்போது சாதம் நன்கு இளகி இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் இன்னும் கொஞ்சம் பாலை ஊற்றவும்.

ஆச்சா, இப்போது ஒரு ஸ்பூன் தயிரை இதனுள் ஊற்றி கலக்கவும். அப்படியே ஒரு தட்டினால் மூடி வைக்கவும். ஒரு மூன்று மணி நேரம் கழித்து பாத்தாரத்தைத் திறந்து வைக்கவும். ஒரு சிறு வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணை எடுத்துக்கொண்டு அடுப்பில் வைக்கவும். எண்ணை காய்ந்த பிறகு ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு போட்டு பொரிய விடவும். சூடவே இரண்டு பச்சை மிளகாய் பொடியாக அரிந்து வாணலியில் போட்டு வதக்கவும். கூட சிறிது பெருங்காயம் சேர்த்து, எல்லாவற்றையும் சாதத்திற்குள் கொட்டவும். நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், துருவிய கேரட், விதையில்லா திராக்ஷைப் பழம், மாதுளை முத்துகள் ஆகியவைகளையும் சாதத்தினுள் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்.

இப்போது ஐந்து நட்சத்திர ஓட்டல் தரத்தில் தயிர் சாதம் ரெடி. நல்ல ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னைப் போன்ற பெரிய ஆட்களாக இருந்தால் இரண்டு பேர் சாப்பிடதாராளமாகப்  போதும். சாதாரண ஆட்களாக இருந்தால் ஆறு பேர் சாப்பிடலாம்.

பருப்பு மத்து என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக-

                                         Image result for மத்து