வெள்ளி, 29 மே, 2015

போட்டி உலகில் ஓடியே ஆகவேண்டும்.

                                    
வியாபாரத்திலும் தொழில்துறையிலும் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அடிக்கடி சொல்லப்படும் அறிவுரை என்னவென்றால் - நீ ஆரம்பத்தில் போட்டிகளைச் சமாளித்து முன்னேற ஓடியிருப்பாய். ஓரளவு முன்னேறிய பிறகு, போதும் இந்த ஓட்டம், இனி கொஞ்சம் ஓய்வெடுப்போம் என்று நினைப்பாய். அங்குதான் நீ தவறிழைக்கிறாய்.

இந்தத் துறைகளில் மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஓரளவு முன்னேறிய பிறகு நீ அடைந்த இடத்திலேயே இருப்பதற்கே ஓடித்தான் ஆகவேண்டும். நீ ஓய்வெடுத்தால் உன் போட்டியாளர்கள் வேகமாக ஓடி உன்னை விட முன்னேறி விடுவார்கள். நீ பின்னுக்குத் தள்ளப்படுவாய்.

இந்த உபதேசம் தொழில் துறை, வியாபாரத்துறைக்காரர்களுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்குமே பொருந்தும். அவ்வாறு ஓட முடியாதவர்கள் போட்டியில் பின்தங்கித் தோற்றுப் போவார்கள். இதை நாம் பலவகைகளில் அன்றாடம் பார்க்கிறோம். ஆரம்பத்தில் வெகு ஆடம்பரமாக ஆரம்பித்த நிறுவனங்கள் நாளாக நாளாக அதன் பளபளப்பு குன்றி விடுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

இதை நான் இப்போது இங்கு ஏன் சொல்லுகின்றேன் என்றால் நானும் இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். எதைச் சொல்லுகிறேன் என்று புரியும் என்று நம்புகிறேன். தமிழ்மணம் ரேங்க் ஒன்றை அடையவேண்டும் என்று நினைக்கிறேன். அது எங்கே என் கண்ணுக்கே தெரியவில்லை (படத்தைப் பார்க்கவும்). முதல் ரேங்க்கை கட்டாயம் அடைந்துதான் ஆகவேண்டும் என்ற கொள்கை ஒன்றுமில்லை. முடியுமா என்று பார்ப்போம் என்பதுதான் என் எண்ணம்.

இப்போது ஐந்தாவது ரேங்கில் என் தளம் இருக்கிறது. இதற்காக ஓடினது அதிகம். மூளையைக் கசக்கிப் பதிவுகள் போட்டதில் இப்போது மூளை இருக்குமிடமே தெரியாமல் போய்விட்டது. மண் சுவரில் மோதினால் ஏதாவது கொஞ்சம் உடையும். ஆனால் கருங்கல் சுவற்றில் மோதினால் என்ன நடக்கும்? மண்டைதான் உடையும். என்னுடைய தளத்திற்கு மேலே இருப்பவர்களெல்லாம் கருங்கல் சுவர்கள்.

இது வரை எனக்கு ஆதரவு கொடுத்த பதிவர்களுக்கு மிக்க நன்றி.