"முப்பத்தியிரண்டு பல்லையும் காட்டறான் பாரு" என்று காக்கா பிடிப்பவர்களை இளக்காரமாகச் சொல்வது வழக்கம். ஸ்நேகா பல் போல் இருந்தால் முப்பத்தியிரண்டு பல்லையும் காட்டுவதில் தவறில்லை. ஆனால் கோபு சார் கதையில் வருகிற பஞ்சாமியின் பல் மாதிரி இருந்தால் என்ன செய்வது?
ஏன் இந்தப் பல் விசாரம் என்றால் எனக்கு இப்போது நேரம் சரியில்லை. என் பற்கள் தொந்தரவு செய்கின்றன. அவைகளை என் பற்கள் என்று சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. வெட்கப்பட்டு ஆகப்போவது என்ன? ஒன்றுமில்லை.
ஆகவே என் ஆஸ்தான பல் மருத்துவரிடம் சரண்டைந்தேன். அவர் என் பற்களைப் பார்த்துவிட்டு உங்கள் 32 பற்களில் இப்போது 14 பற்கள்தான் இருக்கின்றன. பேசாமல் அவைகளை எடுத்து விட்டு பல் செட் வைத்து விட்டால் நீங்களும் ஸ்நேகா மாதிரியே சிரிக்கலாம் என்றார். நானும் அவர் வார்த்தையில் மயங்கி அப்படியே செய்யுங்கள் என்றேன்.
கீழ்த்தாடையில் ஐந்து பற்கள் மட்டுமே இருந்தன. அவைகளில் மூன்று பற்கள் ஒழுங்காக விடுபட்டு விட்டன. இரண்டு பற்கள் மட்டும் தாடை எலும்புடன் இணைந்து, விடுபடமாட்டேன் என்று ரகளை செய்தன. இந்த மாதிரி எத்தனை பற்களை அந்த டாக்டர் பார்த்திருப்பார்? ஒரு மகாபாரத யுத்தம் நடத்தி அவைகளை ஒருவாறாக பெயர்த்து எடுத்தார். இப்போது என் கீழ்த் தாடை மகாபாரத யுத்தம் நடந்த குருக்ஷேத்திரம் போல் ஆகிவிட்டது.
எங்கும் ரத்தக்களரி. கடைசியாக எடுத்த இரண்டு பற்களுக்குப் பக்கத்தில் இருந்த ஈறுகள் சரியாக சேர்வதற்காக தையல்கள் வேறு. இப்படியாக ஏறக்குறைய யமதர்ம ராஜாவின் அரசு எல்லை வரைக்கும் போய் மீண்டேன். சாப்பிடுவது, தூங்குவது, விழித்திருப்பது ஆகிய மூன்று மட்டுமே இப்போது பிரச்சினை. அது கொஞ்சம் சரியானதும் உங்களுக்குச் சொல்ல வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவைகளைச் சொல்கிறேன்.