சில நாட்களுக்கு முன் தினத்தாள்களில் ஒரு செய்தி படித்தேன். சிலர் அப்துல் கலாமைப் புதைத்த பகுதியிலிருந்து கொஞ்சம் மண் எடுத்து சட்டியில் போட்டு அதை அவருடைய அஸ்தியாகப் பாவித்து அதை காவிரியில் கரைத்து அய்யரை வைத்து அப்துல் கலாமுக்கு தர்ப்பணம் கொடுத்தார்களாம்.
அப்துல் கலாம் மனித நேயம் மிக்க ஒரு நல்ல மனிதர். யாரும் இதை மறுக்கமாட்டார்கள். ஆனாலும் அவர் பேரில் ஏதோ தங்களுக்கு மட்டும்தான் தனியாக பக்தி இருப்பது மாதிரியும், அவருக்காக தாங்கள் உயிரையே வேண்டுமானாலும் அர்ப்பணிப்போம் என்கிற மாதிரி சிலர் விளம்பரத்திள்காக பண்ணும் முறைகேடான காரியங்கள் பயித்தக்காரனின் காரியத்தை ஒத்திருக்கின்றன.
மேலும் அப்துல் கலாம் கடைப்பிடித்த மதத்தில் இந்த செயலை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
இதே மாதிரி தாங்கள் கொண்டாடும் ஒரு அரசியல்வாதிக்கு ஏதாவது சங்கடம் என்றால் அந்த சங்கடம் நீங்க கோவில்களில் தனியாக பூஜைகள், யாகங்கள் இவைகளை நடத்துகிறார்கள். இது முற்றிலும் விளம்பரே. கடவிள் யார்யாருக்கு எந்தெந்த சமயத்தில் என்ன நடக்கவேண்டும் என்று ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கிறார். இவர்கள் யாகம் நடத்துவதால் கடவுளின் கணக்கு மாறப் போகிறதா என்ன?
இதைப் போலவே மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று செல் போன் டவர்களின் மேல் ஏறிக்கொண்டு சிலர் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள். இது எல்லாம் மட்ட ரகமான விளம்பரம் தவிர வேறு ஒன்று மில்லை.
ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இத்தகைய செயல்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. இதுதான் இந்திய மக்களின் மடத்தனம். இது என்று மாறுமோ அன்றுதான் அப்துல் கலாம் கண்ட கனவு இந்தியா பலிதமாகும்.