தமிழக சட்டசபைத் தேர்தல் வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் 10 நாளில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி விடும். இந்த தேர்தலில் எல்லோரும் ஓட்டுப்போடவேண்டும் என்று விடாது பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன.
தமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில் இருக்கிறது. ஆகவே உங்கள் ஓட்டை வேட்பாளர்களில் நல்லவருக்குப் போடுங்கள் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். இது ஒரு உண்மையான புத்திமதி.
எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் என்னவென்றால் வேட்பாளர்களில் நல்லவரை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதுதான். அனைத்து வேட்பாளர்களும் ஏதாவதொரு கட்சியின் சார்பில்தான் நிற்கிறார்கள். ஆகவே அந்தக்கட்சிகளின் தன்மை, அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் மக்களுக்கு அவர்கள் செய்த நன்மைகள் இவைகளை வைத்துத்தானே அந்தக் கட்சியின் தன்மை பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். அப்படித் தெரிந்துதானே ஓட்டுப்போட முடியும்.
கட்சிகள் ஆட்சி செய்தபோது அவர்கள் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்திருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். பல இலவசப் பொருள்கள் கொடுத்திருக்கிறார்கள். இப்போதும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னும் இலவசங்கள் கொடுப்போம் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
இந்த இலவசங்களை எப்படிக் கொடுக்க முடியும் என்பது எனக்கு வேண்டாத சிந்தனை. ஒன்று மட்டும் நிச்சயம். யார் வந்தாலும் இலவசங்கள் தொடரும். ஆகவே யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? எனக்கு இலவசங்கள் வருமல்லவா?
இந்த சிந்தனையில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் மக்களே. ஆகவே நான் ஓட்டுப்போட்டாலும் போடாவிட்டாலும் ஏதோ ஒரு கட்சி ஜெயித்து ஆட்சிக்கு வரும். அவர்கள் இலவசங்களை வாரி வழங்கப் போகிறார்கள். இதில் ஏதாவது லாஜிக் தவறு இருக்கிறதா?
தேன் எடுப்பவன் புறங்கையில் வழியும் தேனை, நக்கத்தான் செய்வான். அதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆகவே நான் ஓட்டுப்போட அவசியம் இருப்பதாக க்கருதவில்லை. நீயெல்லாம் ஒரு படித்தவனா, உன் ஜனநாயக உரிமையை இப்படிக் கேவலமாகப் பேசுகிறாயே, உனக்கு வெட்கம் மானம் இல்லையா என்று எல்லோரும் கேட்பீர்கள் என்று தெரியும்.
என் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் நான் கட்டாயம் ஓட்டுப்போடுகிறேன். போட்டியில் இருக்கும் கட்சிகளில் யோக்கியமான கட்சி எது? இதற்கு யாராவது ஒருவராவது பதில் சொன்னால் போதும்.
இப்படிச் சிந்திப்பதால்தான் அனைத்துக் கட்சிகளும் படித்தவர்களை வெறுக்கின்றன.