வழக்கமாக தமிழ் நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைப்பார்கள். அப்படி ஒரு கட்சி பதவிக்கு வந்தவுடன் வைக்கும் முதல் ஒப்பாரி, சென்ற அரசு கஜானாவைக் காலி செய்து விட்டுப் போய்விட்டார்கள் என்பதாகத்தான் இருக்கும்.
ஆனால் இந்த முறை அம்மா அவர்கள் அப்படி பிலாக்கணம் வைக்க முடியாமல் போய்விட்டது. ஏனென்றால் கஜானாவும் அவர்களுடையது. காலி செய்ததும் அவர்களே. அப்புறம் எப்படி பிலாக்கணம் வைக்க முடியும்?
இந்த மாதிரி பணத்தை பல கன்டெய்னர்களில் வைத்து இருந்தால் அவைகளை கரையான் அரித்து விடாதா? இந்தக் கவலையில் எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வருவதில்லை. அதில் ஒரு சில கோடிகளை அப்படியே என் வீட்டிற்குத் தள்ளி விடக்கூடாதா? நானும் அவைகளின் மேல் சில காலம் படுத்துத் தூங்குவேன் அல்லவா? அம்மன்தான் கண் திறக்கவேண்டும் !
இப்படி தனிப்பட்ட கஜானாக்கள் இருக்கும்போது ரிசர்வ் வங்கி வேறு தனியாக கஜானாக்களை வைத்துப் பராமரிக்க வேண்டுமா என்பது என் இன்னொரு சந்தேகம். கஜானாக்களை பராமரிக்கும் வேலையை ஏன் தனியார்களுக்குக் கொடுக்கக்கூடாது? ரிசர்வ் பேங்க் கவர்னர் இந்த யோசனையை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ் நாட்டில் நன்கு அனுபவப்பட்ட கஜானா பராமரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.